திருப்பரங்குன்றம்: `முதலைக் கண்ணீர் வடித்து, தப்பிக்க முயல்கிறார் மதுரை ஆட்சியர்!’ – உச்ச நீதிமன்றம் | madurai-collector-shedding-crocodile-tears-to-escape-supreme-court-thirupparankundram

Spread the love

திருப்பரங்குன்றம் மலை தீபப் பிரச்னையில், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு புறக்கணிக்கப்பட்ட விவகாரத்தில் மதுரை மாவட்ட ஆட்சியர் தொடங்கி திருப்பரங்குன்றம் கோயில் அறங்காவலர் குழு, தமிழ்நாடு தலைமைச் செயலாளர் வரை… மாநில அரசின் நிர்வாகத்தை மிகக் கடுமையான போக்குடன் அணுகியிருக்கிறது நாட்டின் உச்ச நீதி அமைப்பு!

“உச்ச நீதிமன்றத்தின் உத்தரவைச் செயல்படுத்தாமல் இருந்தது மிகக் கடுமையான மற்றும் மோசமான செயல்பாடு. இந்த நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது சுமத்தப்பட்டு இருக்கக்கூடிய நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டுகளும் நீதிமன்றத்தின் உத்தரவை வெளிப்படையாகவும் வேண்டும் என்றே மீறியதற்கான காரணங்களை தெள்ளத் தெளிவாக வெளிப்படுத்துகின்றன.

தீபம் ஏற்றப்படுவதற்குச் சில மணி நேரங்களுக்கு முன்பாக, அறங்காவலர் குழுத் தலைவர் மற்றும் கோயில் செயல் அலுவலர் ஆகியோர் கையொப்பமிட்ட தீர்மானம் ஒன்றை வாரியம் நிறைவேற்றியுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நீதிமன்றம் உத்தரவிட்டபடி தீபத்தூணில் தீபம் ஏற்றுவதற்கான குழுவிற்கு அங்கீகாரம் அளிக்க மறுப்பதாக அந்தத் தீர்மானத்தில் வாரியம் குறிப்பிட்டுள்ளது; மேலும், இந்தத் தீர்மானத்தைக் காரணமாகக் காட்டி மாவட்ட ஆட்சியர் தப்பிக்க முயற்சிக்கிறார். தகுந்த நேரத்தில் இவ்விவகாரத்தை நாங்கள் கையாள்வோம்.

திருப்பரங்குன்றம்

திருப்பரங்குன்றம்

மேற்கண்ட உத்தரவில் நாங்கள் பிறப்பித்த அறிவுறுத்தல்களின்படி, மதுரை மாவட்ட ஆட்சியர் தாக்கல் செய்துள்ள முதற்கட்ட அறிக்கையில், இந்த நீதிமன்றம் உத்தரவிட்டபடி தீபத்தூணில் தீபம் ஏற்றுவதற்குக் கோயில் நிர்வாகிகள் யாரையும் நியமிக்காத காரணத்தால், நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற முடியவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

இந்த நீதிமன்றத்தின் உத்தரவுகளை நிறைவேற்றத் தேவையான அனைத்து நியாயமான நடவடிக்கைகளையும் தான் எடுத்ததாகக் குறிப்பிட்டு முறையான மன்னிப்புக் கோரியுள்ள அவர், உத்தரவு நிறைவேற்றப்படாததற்கான பழியை முழுவதுமாகக் கோயில் நிர்வாகத்தின் மீது சுமத்த முயற்சித்துள்ளார்.

மாவட்ட மாஜிஸ்திரேட்டாகவும் உள்ள ஆட்சியர், இத்தகைய நிலைப்பாட்டை எடுத்திருப்பது எங்களுக்கு ஆச்சர்யமளிக்கிறது. இந்த நீதிமன்றத்தின் உத்தரவுகளைச் செயல்படுத்துவதற்குப் பயன்படுத்தக்கூடிய வகையில், அவரது அதிகாரங்கள் மிகவும் விரிவானவை; அவரது கைகள் மிக நீளமானவை. முதற்கட்ட அறிக்கையும் மன்னிப்பும் பதிவில் சேர்க்கப்பட்டிருந்தாலும், அன்று உண்மையில் என்ன நடந்தது என்பதை அதில் உள்ள விவரங்கள் பிரதிபலிக்கின்றனவா என்பதை நாங்கள் இன்னும் ஆராய வேண்டியிருப்பதால், இக்கட்டத்தில் முதற்கட்ட அறிக்கையில் எங்களுக்குத் திருப்தி இல்லை.

உண்மையில், ஆட்சியர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் திரு. கோபால் சங்கரநாராயணன், தொடக்கத்திலேயே விரிவான அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்றும், அதுவரை காத்திருப்பது பொருத்தமாக இருக்கும் என்றும் கூறியுள்ளார். இருப்பினும், ஆட்சியரின் நிலைப்பாடு, `நீ செத்தது போல நடி, நான் அழுவதுபோல பாசாங்கு செய்கிறேன்” என்ற பழமொழியையே நினைவூட்டுகிறது என்று கூறினால் போதுமானதாகும். இந்த அறிக்கை, மேலோட்டமாகப் பார்க்கும்போது (prima facie), முதலைக் கண்ணீர் வடிப்பதைத் தவிர வேறொன்றுமில்லை; மேலும் இது இந்த நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இணங்கத் தாக்கல் செய்யப்பட்டிருந்தாலும், புள்ளிவிவர நோக்கங்களுக்காக மட்டுமே பதிவில் எடுத்துக்கொள்ளப்படுகிறது. இந்த விவகாரத்தில் நீதிமன்ற அவமதிப்பு தொடர்பாக நோட்டீஸ் அனுப்பப்படுகிறது” என நீதிபதிகள் அமர்வு, மிகக் கடுமையாகத் தெரிவித்தது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *