கள்ளக்குறிச்சி எம்எல்ஏ விஷயத்தை மடை மாற்ற புகார்.. திமுக எம்எல்ஏ வசந்தம் கார்த்திகேயன் தரப்பு பதில் | Kallakurichi MLA Issue: Complaint Aimed at Diverting Attention, Says DMK MLA Vasantham Karthikeyan’s Camp

Spread the love

Tamilnadu

oi-Velmurugan P

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் பெண் அரசு அதிகாரியை சாதிரீதியாக அவதூறு செய்ததாக, ரிஷிவந்தியம் திமுக எம்.எல்.ஏ வசந்தம் கார்த்திகேயன் மீது நான்கு பிரிவுகளில் காவல்துறை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி எம்எல்ஏ விவகாரத்தை மடை மாற்றவே தனது மீது புகார் அளிக்கப்பட்டுள்ளதாக வசந்தம் கார்த்திகேயன் தரப்பு குற்றம்சாட்டியுள்ளது.

தமிழ்நாடு மாநில ஊரக, நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் கள்ளக்குறிச்சி மாவட்ட திட்ட இயக்குனராக பணியாற்றி வந்த லலிதா, கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டருக்கு கடந்த மாதம் 19-ந் தேதி அனுப்பி இருந்த புகார் மனுவில் கூறுகையில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குனராக பணியாற்றினேன். கடந்த அக்டோபர் மாதம் 18-ந் தேதி வசந்தம் கார்த்திகேயன்(வயது 49) எம்.எல்.ஏ. என்னை செல்போனில் தொடர்பு கொண்டு காலை உணவு திட்டத்தில் திருக்கோவிலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஒரு பெண்ணை ஏன் எடுத்தீர்கள் என்று கேட்டார்.

Kallakurichi MLA Issue Complaint Aimed at Diverting Attention Says DMK MLA Vasantham Karthikeyan s Camp

அதிகாரி புகார்

அதற்கு நான், கிராம ஊராட்சி அளவில் காலை உணவு திட்டத்தில் பணியாற்றி வந்த சமையல் பணியில் உள்ளவரை பணி அமர்த்தவோ, எடுப்பதற்கோ எனக்கு அதிகாரமில்லை. அதற்கென்று தனியாக ஒரு குழு உள்ளது. எனக்கும் அதற்கும் சம்பந்தமில்லை என்றேன். உடனே வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ. நான் யார் தெரியுமா?, என்னை பற்றி தெரிந்து கொண்டு தான் வேலைக்கு இந்த மாவட்டத்திற்கு வந்தீர்களா? நீங்கள் சாதி பார்த்து வேலை செய்கிறீர்கள், சாதியை சொல்லி திட்டுகிறீர்கள், இதுகுறித்து அமைச்சரிடமும், உயர் அதிகாரிகளிடமும் பேசுகிறேன் என மிரட்டும் தொனியில் பேசினார். இதேபோல் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த நிர்வாகி ஒருவரும் என்னை மிரட்டுகிறார்.

இவர்கள் இருவரும் என்மீது அபாண்டமான குற்றச்சாட்டுகளை வாட்ஸ்-அப் மூலம் பரப்பி வருகின்றனர். எனவே சமூக வலைத்தளத்தில் இவர்கள் பரப்பிவரும் தவறான தகவலை நீக்கம் செய்வதோடு, இவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

வழக்குகள் பதிவு

இந்த மனுவை பெற்றுக்கொண்ட தனிப்பிரிவு அதிகாரிகள், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த தியாகதுருகம் போலீசாருக்கு உத்தரவிட்டனர். அதன்பேரில் வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ. மீது பி.என்.எஸ். சட்டப்பிரிவு 79 , சட்டப்பிரிவு 132, .சட்டப்பிரிவு 351 (2), சட்டப்பிரிவு டி.என்.பி.எச்.டபிள்யூ. 4 ஆகிய 4 பிரிவுகளின் கீழ் தியாகதுருகம் போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்தனர். இதற்கிடையே கடந்த 13-ந்தேதி திட்ட இயக்குனர் லலிதா, ராமநாதபுரம் மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.

கள்ளக்குறிச்சி எம்எல்ஏ விவகாரம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஏற்கனவே கள்ளக்குறிச்சி (தனி) சட்டமன்ற தொகுதி தமிழக வெற்றிக்கழக எம்.எல்.ஏ. அருள்விக்னேஷ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், அடுத்ததாக ரிஷிவந்தியம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. வசந்தம் கார்த்திகேயன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தன் மீது பொய் புகார் கொடுக்கப்பட்டுள்ளது என ரிஷிவந்தியம் திமுக எம்.எல்.ஏ வசந்தம் கார்த்திகேயன் தரப்பு விளக்கம் அளித்துள்ளது. கள்ளக்குறிச்சி எம்எல்ஏ ஆபாச குறுஞ்செய்தி அனுபிப்பிய விவகாரத்தை திசை திருப்பவே தன் மீது வீண் பழி சுமத்தப்படுவதாகவும் வசந்தம் கார்த்திகேயன் தரப்பு கூறியுள்ளது.

பெண் அதிகாரி மீது புகார்

வசந்தம் கார்த்திகேயனுக்கு எதிராக பெண் அதிகாரியை பகடைக்காயாக அரசியல் ரீதியாக பயன்படுத்தி உள்ளார்கள் என்றும்,பணியில் சேர விரும்பிய தலித் பெண்ணை, சாதிரீதியாக இழிவுபடுத்தியதாக குற்றச்சாட்டு பெண் அதிகாரி லலிதா மீது உள்ளதாகவும், இது தொடர்பாக சிஎஸ்ஆர் பதியப்பட்டுள்ளதாகவும் திமுக எம்எல்ஏ தரப்பு குற்றம்சாட்டியுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *