திருமணத் தடை நீங்க, எதிரிகளை வெல்ல… பக்தர்கள் தேடி வரும் உத்தண்ட வீரபத்திரர் கோயில்! – Kumudam

Spread the love

கர்நாடகாவின் நெலமங்களா பகுதியில் உள்ள இந்த கிராமத்தில், குன்று ஒன்றின் மீதுள்ள இந்த வீரபத்திரர் கோயில், சுமார் 1600 ஆண்டுகள் பழைமையானது. 800 படிகள் ஏறிச்சென்றால்தான், இவரை தரிசிக்கமுடியும். குன்றின் மேல் உள்ள கோயிலுக்கு அருகில் வருடம் முழுதும் வற்றாத நீர் ஊற்று ஒன்றும் உள்ளது. எத்தனை வெயில் அடித்தாலும் இந்த ஊற்று நீர் குளுமையாகவே இருக்கிறது. வற்றாமல் நீர் சுரப்பதற்கும், அது தண் என்று இருப்பதற்கும் இக் கோயிலில் உள்ள வீரபத்திரரின் கருணையே காரணம் என்கின்றனர்.

கோயிலுக்குச் செல்லும் முன் வீரபத்திரர் யார்? அவருக்கு எத்தனை வடிவங்கள் என்பதையெல்லாம் அறிந்து கொள்வோம். சிவபெருமானின் நெற்றிக் கண்ணிலிருந்து தோன்றிய உக்கிரமான காவல் தெய்வம் வீர பத்திரர். அவர் தோன்றியதற்குக் காரணம், ஈசனின் கோபம். சிவபெருமானின் மாமனார், தட்சன். ஒரு சமயம் அவன், பெரிய யாகம் ஒன்றை நடத்தினான். அதற்கு, தன் மருமகனான சிவபெருமானை அவன் அழைக்கவில்லை. எல்லோரும் எடுத்துச் சொல்லியும் அவன் கர்வத்துடனேயே இருந்தான்.

தன்னை மதிக்காத எவரையும் ஈசனும் மதிப்பதில்லை. அதனால், தட்சன் தன்னை அழைக்காமல் யாகம் நடத்தியதை அவர் பொருட்படுத்தவில்லை.
ஆனால் சிவபெருமானின் மனைவியும், தட்சனின் மகளுமான தாட்சாயிணி கடும் கோபம் கொண்டாள். தன் கணவரான ஈசன் அவமதிக்கப்படுவதாக உணர்ந்த அவள், தந்தை யாகம் நடத்திய இடத்திற்கு சினத்தோடு சென்றாள். நேராக தந்தையிடம் சென்று, “வேத முதல்வரான இறைவனை, ஈசனை ஏன் அழைக்கவில்லை?” என்று கேட்டாள்.

கேலியாகச் சிரித்த தட்சன், “மகளான உன்னையே நான் அழைக்கவில்லையே.. அப்புறம் ஏன் வந்தாய்? என்னிடம் எந்த உரிமையில் இப்படிக் கேள்வி கேட்கிறாய்?” எனக் கேட்டு, அவமானப்படுத்தினான். மனம் இதனால் வெதும்பினாள், தாட்சாயிணி. தந்தையைப் பழிவாங்கவும், அவமானத்தைத் துடைக்கவும் தீர்மானித்த அவள், தட்சன் வளர்த்திருந்த பிரமாண்ட யாக குண்டத்தில் குதித்தாள்.

தீயில் அவள் உடல் கருகத் தொடங்க, அதனை ஞான திருஷ்டியில் கண்ட ஈஸ்வரன், உடனே அங்கே வந்தார். யாக குண்டத்தில் அக்னியால் தகிக்கப்பட்டுக் கொண்டிருந்த தாட்சாயிணியின் உடலை சட்டென்று தூக்கினார். தமது தோளில் போட்டுக்கொண்டு, அதீத சினத்துடன் உக்ர தாண்டவம் ஆடத்தொடங்கினார்.
அதேசமயம் தன் நெற்றிக்கண்ணிலிருந்து அதி உக்ரம் நிறைந்தவரான வீரபத்திரை உருவாக்கிய ஈசன், தட்சனையும் அவன் யாகத்தையும் அழிக்க உத்தரவிட்டார்.

தட்சனின் தலையைக் கொய்து, அவனுக்கு உதவியவர்களை அடித்து விரட்டி, யாகத்தையும் தடுத்து நிறுத்தினார் வீரபத்திரர். சிவபெருமான் தாட்சாயிணியின் உடலைச் சுமந்து ஆடியபோது அவரது திருமேனியில் இருந்து வழிந்த வியர்வைத்துளிகள் ஆயிரமாயிரமாக ஒன்று சேர்ந்து வீரபத்திரராக வடிவம் கொண்டதாகவும் ஒரு வரலாறு உண்டு.

மற்றொரு புராணத்தின்படி, சிவபெருமான் தாட்சாயிணியின் உடலைக் கண்டதும், தமது ஜடாமுடியின் ஒரு கற்றையை சினத்துடன் பிடுங்கி, அதிவேகமாகத் தரையில் அடித்தார் என்றும், அதில் இருந்தே வீரபத்திரர் தோன்றினார் எனவும் கூறப்படுகிறது. வீரபத்திரரின் தோற்றம் தட்சனையும் அவனது யாகத்தினையும் அழிப்பதற்காகவே ஏற்பட்டது என்றாலும் அதன் பின்னர் பல்வேறு சமயங்களில், பல்வேறு காரணங்களுக்காக வீரபத்திரர் அவதாரம் நிகழ்ந்ததாகச் சொல்கின்றன புராணங்கள்.

வீரபத்திரர் சிவனின் 24 வடிவங் களுள் ஒருவர் என்றும், மரபு மற்றும் புராணங்களின்படி மொத்தம் அஷ்ட (8) வீரபத்திரர்கள் உண்டு எனவும் கூறுவர். அதாவது பிரதான வீரபத்திரர் தவிர, அக்னி வீரபத்திரர், அகோர வீரபத்திரர், ரணவீரபத்திரர், உக்ரவீரபத்திரர், உத்தண்டவீர பத்திரர், ஜல வீரபத்திரர், பவன வீரபத்திரர் என்று மேலும் ஏழு வடிவங்களும் சேர்ந்து அஷ்ட வீரபத்திரர்கள் எனச் சொல்லப்படுவது உண்டு. ஸ்கந்த புராணம், சிவமகா புராணம் காஞ்சிப் புராணம் உள்ளிட்ட ஏராளமான புராணங்கள் வீரபத்திரரின் புகழ் பாடுகின்றன.

அஷ்ட வீரபத்திரர்களுள், உத்தண்ட வீரபத்திரர் தீய சக்திகளை முற்றிலும் ஒடுக்கி, தர்மத்தை நிலைநாட்டுவதற்காக அவதரித்தவர். அந்தத் திருவடிவில் வீரபத்திரர் அருள் பாலிக்கும் கோயிலையே நாம் தரிசிக்கப் போகிறோம். அதற்கு முன், இத்தலத்தில் மூலவர் எழுந்த வரலாறு பற்றி தெரிந்து கொள்வோம்.
இந்தக் குன்றில் முற்காலத்தில் முனிவர்கள் பலர் தவம் செய்து வந்தனர்.அவர்களுள் ஒருவர், தேவரு. இவர், சிவனை எண்ணிக் கடுமையான தவம் மேற் கொண்டார். அவரது தவம் கண்டு மெச்சிய சிவன் காட்சி தந்து “உனக்கு என்ன வேண்டும்?” எனக் கேட்டார்.

அதற்கு தேவரு “உங்களை, தட்சனைக் கொன்ற ஆக்ரோஷ ரூபத்தில் வீரபத்திரராக காண விரும்புகிறேன்” என்றார். சிவனும் உடனே தந்தேன் என ஆக்ரோஷ வீரபத்திரராக மீசையுடன் காட்சியளித்து “திருப்தியா?” என்றார். அதற்கு தேவரு, “இதே கோலத்தில் இந்த மலைப் பாறையில் தங்களின் உருவத்தை அப்படியே அமைத்துக் காட்சிதரவேண்டும்” என்றார். ஈசனும் அதனை ஏற்று அங்கிருந்த தன் உருவை நிலை நிறுத்தி விட்டு மறைந்துவிட்டார்.

தேவரு முனிவர் அன்றுமுதல் அந்தப் பாறைவடிவப் பரமனை பூஜை, ஆராதனைகள் செய்து வணங்கிவந்தார். கால நகர்வில் அங்கே எல்லோரும் சென்று வழிபட்டனர். வீரபத்திரரின் அருளால் எல்லோரும் தங்களிம் எல்லாக் கோரிக்கைகளும் ஈடேறப் பெற்றனர். அன்றிலிருந்து இன்று வரை அதே பாறை சிற்பம் தான் வீரபத்திரராக வணங்கப்படுகிறது. அதேசமயம் காலச் சுழற்சி, சுற்றிலும் கோபுரம், மண்டபம் மற்ற தெய்வங்களின் சன்னதிகள் என பலவற்றை வரவழைத்துக் கொண்டு விட்டது.
காட்டின் நடுவில் குன்று உள்ளதால் சுற்றிவர ரசித்தபடியே படி ஏறலாம். படிகள் சில இடத்தில் சுலபமாகவும், சில இடங்களில் செங்குத்தாகவும் இருக்கின்றன எனவே கவனம் முக்கியம். குன்றின் உச்சிக்குச் ஏறினால் பசுமையும் அழகும் நம்மைப் பரவசப்படச் செய்வதை உணரலாம். மலை ஏறிச் செல்ல உதவிட ஒரு சிறு கூட்டம் உள்ளது. அதனால் பயப்படாமல் ஏறலாம்.

உச்சிக்கு செல்வதற்குச் சற்று முன் கோயிலுக்குச் செல்லும் பாதை உள்ளது. அங்கே நுழைவாயில் வளைவு நம்மை வரவேற்கிறது. அதனைத் தாண்டிச் சென்றால் மூன்று நிலைகளுடன் கூடிய சோழர் கால கட்டிடக் கலை கோபுரத்தைக் காணலாம். கடந்து சென்றால் ஒரு நுழைவு வாயில். அதில் மேலே மையம் மற்றும் இருபுற ஓரங்களில் மாடங்கள். மைய மாடத்தில் சிவன் பார்வதி. வலது புறம் தேவரு முனிவர் வடிவங்கள் உள்ளன. இடதுபுறம் பத்ரகாளி. இருக்கிறாள். அனைத்துமே அழகான சுதைச் சிற்பங்கள்.

உள் நுழைந்து கர்ப்பகிரகம் நோக்கிச் சென்றால், முறுக்கிய மீசையுடன் ஆக்ரோஷமான கோலத்தில் வீரபத்திரர் மேற்கு நோக்கிக் காட்சியளிக்கிறார். பாறைச் சிற்பமாக இருந்தாலும் பார்க்கும்போது பக்தியுடன் பரவசமும் ஏற்படுகிறது. கர்ப்ப கிரகத்துள்ளேயே பத்ரகாளியும் மேற்கு பார்த்தபடி உள்ளார். இந்த வீரபத்திரரை *உத்தண்ட வீர பத்திரர்** என அழைக்கின்றனர்.

உத்தண்ட என்ற சொல்லுக்கு கடுங்கோபம், அஞ்சாமை மற்றும் வலிமை மிக்கவர் உண்டு. அதுமட்டுமன்றி, மிகுந்த என அர்த்தங்கள் ஆவேசத்துடன் தீய சக்திகளை அழிக்கும் உக்ரமானவர் எனவும் கூறுகின்றனர். பெங்களூரிலிருந்து 55 கி.மீ. தொலைவில் இருக்கிறது. எதிரிகளை வெல்லவும் துஷ்ட சக்திகளான பேய், பிசாசு போன்ற தீய தொல்லைகளிலிருந்து விடுபடவும் அருளக் கூடியவர் இவர். இந்தப் பகுதி மக்களின் காவல் தெய்வமாகவும் இந்த வீரபத்திரர் விளங்குகிறார்.

இக்கோயிலைப் பொருத்தவரை செவ்வாய் சிறப்பு நாள். தீய சக்திகளின் வேகம், மனநிலைகளில் தடுமாற்றம் இவை அதிகமாக இருக்கக் கூடிய நாள்களாகக் கருதப்படும் அமாவாசை, பௌர்ணமி தினங்களிலும் ஏராளமான பக்தர்கள் இங்கே வருகிறார்கள். தும்பை மாலை சாத்தி ஆராதிக்கிறார்கள். சில பக்தர்கள் அவர் கோபத்தைத் தணிக்க வெண்ணெய்சாத்திவணங்குகின்றனர். வெண்ணிற மலர்கள், வெற்றிலை மாலை இவையெல்லாம் இவருக்கு விருப்பமானவையாகச் சொல்லப்படுகின்றன. குறிப்பாக் வெற்றிலை மாலை சாத்தினால், திருமணத் தடை நீங்குமாம்.

கோயிலினுள் சிறு தனி சன்னதிகளில், கணேசர், சுப்ரமணியர், அம்மவாரு மற்றும் முப்பனேஷ்வரா ஆகியோர் உள்ளனர். கோயிலுக்குப் பின்னால், உள்ள வழியில் மலை மேல் தொடர்ந்து ஏறிச் சென்றால், நீருற்று ஒன்றும் கல் மண்டபமும் உள்ளன. இங்கே அருளும் வீர பத்திரரின் அருளைப் போலவே இந்த நீரூற்றும் குளுமை நிறைந்தே இருக்கிறது *

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *