ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் தமிழ்நாடு பல விஷயங்களிலும் முன் உதாரணமாக இருப்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், செமிகண்டக்டர்கள் உற்பத்தியிலும் தமிழ்நாடுதான் முதல் என்பது பலரும் அறியாத ஒரு செய்தி.
செமிகண்டக்டர்கள்தான் அடுத்த பெட்ரோல்! கைபேசி தொடங்கி, லேப்டாப், டி.வி., கார்… என்று எதுவாக இருந்தாலும் இவை அனைத்துமே செமிகண்டக்டரை அடிப்படையாகக் கொண்டுதான் இயங்குகின்றன. IoT – `இன்டர்னெட் ஆஃப் திங்ஸ்”, பயன்பாடு அதிகமாக ஆக, வீடுகளில் இருக்கும் ஏசி, குளிர்சாதனப் பெட்டி, மின்விசிறி, சிசிடிவி… என அனைத்துக்குமே இந்தச் செமிகண்டக்டர் சிப்புகள் மேலும் அதிகமாகத் தேவைப்படும்.
இந்தச் செமிகண்டக்டர் உற்பத்தியில் சீனா, தாய்வான், அமெரிக்கா போன்ற நாடுகள்தான் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. பெருந்தொற்றுக் காலத்தில் செமிகண்டக்டர் தட்டுப்பாடு ஏற்பட்டபோது, நம் நாட்டில் கார் உற்பத்தி பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தது நினைவிருக்கலாம். இந்தச் செமிகண்டக்டர்களை உள்நாட்டிலேயே தயாரிக்க இப்போதுதான் நம் நாட்டில் முயற்சி எடுத்து வருகின்றன.
ஆனால், நம் சென்னையை அடுத்திருக்கும் ஒரகடத்தில் செமிகண்டக்டர்கள் தயாரிக்கும் ஒரு தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது என்றால் ஆச்சரியமாக இருக்கிறது, இல்லையா? Opto-semiconductors எனப்படும் செமிகண்டக்டர்களைத் தயாரிப்பதில் முன்னணியில் இருக்கும் இந்த நிறுவனத்தின் பெயர் பாலிமெட்டெக்.
நம் கைபேசி, மடிக்கணினி, டிவி திரை என்று ஒளித்திரை கொண்ட எந்த மின்னணு உபகரணங்களாக இருந்தாலும் அவை செயல்பட முக்கியத் தேவையாக இருப்பது இந்த ஆப்டோ செமிகண்டக்டர்கள்தான்.
பாலிமெட்டெக் நிறுவனத்துக்குத் தமிழ்நாட்டைத் தாண்டி ராய்பூரில் மேலும் ஒரு செமிகண்டக்டர்கள் உற்பத்தி செய்யும் நிறுவனம் இருக்கிறது.