திருமணமாகாமல் குழந்தை பெற்ற பெண்.. 100 கசையடி தண்டனை விதித்த சவுதி நீதிமன்றம் | Saudi Arabia Sentences Kenya Mother to 100 Lashes for Giving Birth Outside Marriage

Spread the love

International

oi-Pavithra Mani

சவுதி: சவுதி அரேபியாவில் திருமணமாகாமலேயே குழந்தை பெற்றெடுத்த கென்யா நாட்டைச் சேர்ந்த பெண்ணுக்கு 100 கசையடி தண்டனை விதித்து உத்தரவிடப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருமணமாகால் பெற்ற குழந்தைக்கு பிறப்புச் சான்றிதழ் உள்ளிட்டவை பெறும் நடைமுறையில் சவுதியில் பல்வேறு சட்ட சிக்கல்கள் இருப்பதால் கடந்த ஓராண்டாக தனது சொந்த நாட்டுக்குத் திரும்ப முடியாமல் அப்பெண் தவித்து வருகிறார்.

வீட்டு வேலை, நானி உள்ளிட்ட பணிகளுக்காக சவுதி அரேபியாவிற்கு வரும் கென்யா உள்ளிட்ட கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த பெண்கள் பல்வேறு சிரமங்களைச் சந்தித்து வருவதாகக் கூறப்படுகிறது. பாலியல் துன்புறுத்தல், வனமுறை, திருமணமாகாமல் கர்ப்பம் தரிப்பது போன்ற சிக்கல்களால் வெளிநாட்டு தொழிலாளர்கள் பாதிக்கப்படுவதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், கென்ய நாட்டுப் பெண் ஒருவருக்கு திருமணமாகாமல் குழந்தை பெற்றதற்காக 100 கசையடிகள் தண்டனைகள் விதிக்கப்பட்டுள்ள சம்பவம் தற்போது பேசு பொருளாகியுள்ளது.

Saudi Arabia

திருமணமாகாமல் குழந்தை

கென்யா நாட்டைச் சேர்ந்தவர் எஸ்தர் வஞ்சா முதோனி. இவர், மஹாரா ஹியூமன் ரிசோர்சஸ் என்ற நிறுவனத்தின் மூலம் சட்டர்பூர்வமாக சவுதி அரேபியாவில் வீட்டு வேலை செய்யும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். அப்போது, அங்கு வசித்து வந்த எகிப்து நாட்டைச் சேர்ந்த ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டு கர்ப்பமாகியுள்ளார். எஸ்தருக்கு திருமணமாகாத நிலையில் கடந்த 2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆண் குழந்தை பிறந்துள்ளது.

தகவலறிந்த மேற்பார்வையாளர் ஒருவர், எஸ்தரையும், குழந்தையும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது, கர்ப்பம் தொடர்பாக விசாரிப்பதற்காக எஸ்தரை போலீஸார் காவலில் எடுத்துள்ளனர். அப்போது, எஸ்தர், குழந்தையின் தந்தை முகமது என்ற நபர் சவுதி அரேபிய நாட்டைவிட்டு வெளியேறி விட்டதாக வாக்குமூலம் அளித்துள்ளார். விசாரணைக்குப் பின்னர் எஸ்தரை விடுவித்துள்ளனர்.

குடியிருப்பில் தங்க மறுப்பு

இதனால், அவர் தங்கியிருந்த ஊழியர் குடியிருப்பில் அவருக்கு இடம் மறுக்கப்பட்டுள்ளது. ஹாஸ்டல் போன்றவற்றிலும் தங்குவதற்கு அவருக்கு அனுமதி கிடைக்காமல் இருந்துள்ளது. இதையடுத்து, எஸ்தர் ஒரு பெட்ரோல் பங்கில் தஞ்சமடைந்துள்ளார். இதுகுறித்து, ஊடகங்களில் செய்தி வெளியான நிலையில், மஹாரா நிறுவனம் எஸ்தருக்கு தங்குமிட வசதியை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. கென்யா தூதரகமும், சவுதியை விட்டு வெளியேறுவதற்கான ஆவணங்களை வழங்கியுள்ளது. ஆனால், எஸ்தர் மீது வழக்கு நிலுவையில் இருந்ததால் அவர் சொந்த நாட்டுக்குச் செல்ல முடியவில்லை.

சட்ட சிக்கல்

அந்தக் குழந்தைக்கு அபுடி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. குழந்தைக்கு தற்போது சுமார் ஒரு வயதாகிறது. தன்னுடைய குழந்தையுடன் சொந்து நாட்டுக்குத் திரும்புவதற்காக எஸ்தர் கடந்த ஓராண்டுக்கும் மேலாக முயற்சி செய்து வருகிறார். ஆனால், திருமணமாகாமல் குழந்தை பெற்றெடுத்த காரணத்தால், குழந்தைக்கு பிறப்புச் சான்றிதழ் பெறுவதில் சவுதி அரேபியாவில் பல்வேறு சட்ட சிக்கல்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது.

இதனால், சொந்த நாடு திரும்புவதற்கான பயண ஆவணங்களைப் பெறுவதற்கும், சவுதியை விட்டு வெளியேறுவதற்குமான அனுமதி பெறுவதிலும் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், சொந்த நாடு திரும்ப முடியாமல் அவர் தவித்து வருகிறார்.

100 கசையடி தண்டனை

இந்நிலையில், திருமணமாகாமல் குழந்தை பெற்ற குற்றத்திற்காக சவுதி அரேபிய சட்டத்தின்படி எஸ்தர் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. எஸ்தருக்கு 100 கசையடிகள் தண்டனை விதித்து நீதிமன்றம் கடந்த அக்டோபர் மாதம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், குழந்தையின் தந்தை மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதா என்கிற விவரம் தீர்ப்பில் இடம்பெறவில்லை.

குர்ஆனில் இடம்பெற்றுள்ள வசனத்தின் அடிப்படையில், 100 கசையடிகள் வழங்க நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். சவுதி அரேபிய நீதிமன்றங்கள் கசையடி தண்டனை வழங்குவதை பெருமளவில் கட்டுப்படுத்துவதாக அந்நாட்டு அரசு கடந்த 2020 ஆம் ஆண்டு தெரிவித்திருந்த நிலையில், தற்போது கென்ய நாட்டு பெண்ணுக்கு 100 கசையடி தண்டனைக்கு உத்தரவிடப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *