திருமணம் நிச்சயம்; காதலை தொடர மறுத்த காதலி – மலைக்கு அழைத்து சென்று பள்ளத்தில் தள்ளிகொன்ற காதலன்

Spread the love

மகாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூர் அருகில் உள்ள கர்கோடி என்ற இடத்தை சேர்ந்தவர் ஸ்ரீபத் தின்கர்(25). இவர் தான் வசித்து வந்த தெருவில் வசித்த பொறியியல் கல்லூரி மாணவி தரன்னம் என்பவரை கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக காதலித்து வந்தார். அப்பெண்ணுக்கு அவரது உறவினர்கள் வேறு ஒருவருக்கு திருமணம் செய்து வைக்க நிச்சயதார்த்தம் செய்தனர். அடுத்த மாதம் திருமணம் நடைபெறுவதாக இருந்தது. இதனால் ஸ்ரீபத் அதிர்ச்சியடைந்தார். தரன்னம் தனக்கு வேறு ஒருவருடன் திருமணம் நடக்க இருப்பதால் மேற்கொண்டு நாம் உறவை தொடர வேண்டாம் என்று ஸ்ரீபத்திடம் தெரிவித்தார். இதனால் ஸ்ரீபத் கோபத்தில் இருந்தார்.

அவர் சம்பவத்தன்று தரன்னமை 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நாயக்வாடி நீர்வீழ்ச்சிக்கு அழைத்து சென்றார். நீர்வீழ்ச்சி 1000 அடி ஆழம் கொண்டது. வறட்சி காரணமாக நீர்வீழ்ச்சி தண்ணீர் இல்லாமல் இருந்தது. அங்கு யாரும் வருவதில்லை. அங்கு ஸ்ரீபத் தனது காதலியை அழைத்து சென்றார்.

நீர்வீழ்ச்சி

அங்கு வைத்து திருமணம் குறித்து பேசிய போது தனக்கு வேறு ஒருவருடன் திருமணம் நடக்க இருப்பதால் மேற்கொண்டு காதலை தொடர முடியாது என்று தரன்னம் தெரிவித்தார். இதனால் இருவருக்கும் இடையே நடந்த வாக்குவாதத்தில் தரன்னத்தை மலை உச்சியில் இருந்து 1000 அடி பள்ளத்தில் ஸ்ரீபத் தள்ளி விட்டதாக கூறப்படுகிறது.

அதன் பிறகு போலீஸாரிடம் வேறொருவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்ததால் இருவரும் தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்ததாகவும், அதன்பின் அப்பெண் ஒரு பள்ளத்தில் குதித்துவிட்டதாகவும் தன்னால் பயத்தில் குதிக்க முடியவில்லை என்று ஸ்ரீபத் தெரிவித்தார்.

ஆனால், அவர்கள் பரிமாறிக்கொண்ட குறுஞ்செய்தித் தகவல்கள் அவரது கூற்றுக்கு முரணாக இருந்ததைக் கண்டறிந்து ஸ்ரீபத்தை போலீஸார் கைது செய்தனர். அதோடு 1000 அடி பள்ளத்தில் இருந்து தரன்னம் உடல் மீட்கப்பட்டது.

இது குறித்து துணை போலீஸ் கமிஷனர் விவேக் பாட்டீல் கூருகையில்,” அவர்கள் கடந்த ஐந்தரை ஆண்டுகளாகக் காதலித்து வந்ததாகவும், பெண்ணின் குடும்பத்தினர் வேறொருவருடன் அவருக்குத் திருமணம் நிச்சயித்ததால் அவர்கள் மனவேதனையில் இருந்ததாகவும் அவர் எங்களிடம் கூறினார். அந்த ஜோடி ஒன்றாகத் தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்திருந்ததாக அவர் தெரிவித்தார். அப்பெண் பள்ளத்தாக்கில் குதித்துவிட்டதாகவும், ஆனால் கடைசி நேரத்தில் தனக்குத் துணிச்சல் வரவில்லை என்றும் அவர் கூறினார். தற்கொலை செய்துகொள்ள அவர்கள் முடிவு செய்ததை அவர்களது மொபைல் போன் உரையாடல் பதிவுகள் உறுதிப்படுத்துவதாக இல்லை. தரன்னமுக்கு வேறு ஒருவருடன் திருமணம் செய்து வைக்க அவரது குடும்பத்தினர் எடுத்த முடிவால் ஸ்ரீபத் மனவேதனை அடைந்திருந்ததை அந்தச் செய்திகள் உணர்த்தின.

இது தீவிர சந்தேகங்களை எழுப்பியதோடு, கொலைக் குற்றத்திற்கான சட்டப்பிரிவு 103(1)-இன் கீழ் நடவடிக்கை எடுக்க எங்களை வழிவகுத்தது,” என்று பாட்டீல் கூறினார். ஸ்ரீபத்தை 5 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *