கைதாகிறாரா செந்தில் பாலாஜி? – டாஸ்மாக் வழக்கில் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம்

Spread the love

டாஸ்மாக் முறைகேடு மற்றும் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்குகள் தொடர்பாக, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்திருந்த முன்ஜாமீன் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இதன் மூலம், செந்தில் பாலாஜி கைது செய்யப்படுவாரா என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களில் மீண்டும் எழுந்துள்ளது.

அண்மையில், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை (DVAC), முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, முன்னாள் டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் விசாகன் உள்ளிட்ட 7 பேர் மீது டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்தது. அதனைத் தொடர்ந்து, சென்னை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் 41 இடங்களில் டிவிஏசி அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

செந்தில் பாலாஜி

செந்தில் பாலாஜி

இந்த வழக்கின் FIR-ல், டாஸ்மாக் பார் டெண்டர்கள், போக்குவரத்து ஒப்பந்தங்கள், பாட்டில் விநியோகம், பிராண்ட் ஒப்புதல்கள் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளில் முறைகேடுகள் நடைபெற்றதாகவும், அரசு அதிகாரிகள், டாஸ்மாக் உயர் அதிகாரிகள் மற்றும் தொடர்புடைய நபர்கள் இணைந்து அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாகவும் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதற்கிடையில், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும் செந்தில் பாலாஜி மீது DVAC தனியாக சொத்துக்குவிப்பு வழக்கையும் பதிவு செய்துள்ளது. இந்த வழக்குகளின் அடிப்படையில் சோதனைகள் நடைபெற்று வரும் நிலையில், கைது நடவடிக்கை எடுக்கப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகியதால், செந்தில் பாலாஜி சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை இன்று விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், முன்ஜாமீன் வழங்க மறுத்து மனுவை தள்ளுபடி செய்தது. இதையடுத்து, டிவிஏசி அடுத்தகட்டமாக என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பது குறித்து எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

செந்தில் பாலாஜியிடம் ஏற்கனவே லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியிருந்த நிலையில், தற்போது முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டிருப்பது இந்த வழக்கில் முக்கிய திருப்பமாக பார்க்கப்படுகிறது.!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *