சுவாமியின் சந்நிதிக்கு வலப்புறம் ஸ்ரீபாலவிநாயகரும் இடப்புறம் ஸ்ரீபாலசுப்ரமணியரும் காட்சி தருகின்றனர். நான்கு திருக்கரங்களுடன் வேலும் மயிலுமாகக் காட்சி தரும் ஸ்ரீபாலசுப்ரமணியருக்கு, செவ்வரளிப் பூ சார்த்தி, மனதாரப் பிரார்த்தித்தால், ரத்தச் சோகை உள்பட, உடலில் உள்ள அத்தனை நோய்களும் குணமாகும் என்கிறார்கள் பக்தர்கள்.
சுவாமி சந்நிதிக்கு வலப்புறத்தில் அமைந்திருக்கிறது அம்பாளின் சந்நிதி. நான்கு திருக்கரங்கள்; பவித்திர முடியுடன் கூடிய ஜடாமகுடத்துடன் அழகுத் திருக்கோலம் காட்டுகிறாள் அம்பாள். சிரசு மேற்குப் பக்கமும், இடுப்பு கிழக்குப் பக்கமும், வலது திருப்பாதம் மேற்குப் பக்கமுமாக சற்றே வளைந்து, திரிபங்க சொரூபமாக… அம்பிகையின் தரிசனம் அற்புதம்! இந்த அன்னையின் எதிரில் ஸ்ரீசக்ர மேருவும் அமைக்கப்பட்டிருப்பது சிறப்பு.

பிராகாரத்தில் நர்த்தன கணபதியின் தரிசனம்; அர்ச்சனை செய்து, அருகம்புல் சார்த்தி இவரை வணங்கினால், திருமணத் தடை அகலும்; வீட்டில் விரைவில் கெட்டிமேளச் சத்தம் கேட்கும் என்பது நம்பிக்கை.
அதேபோல், இந்த ஆலயத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீதுர்கையும் சாந்நித்தியம் மிகுந்தவள். வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில், ராகு காலத்தில் எலுமிச்சை தீபம் ஏற்றிவைத்து இந்தத் துர்காதேவியை வழிபட, காரியத் தடைகள் நீங்கும்; தைரியம் பிறக்கும்!
உள்ளம் நிறைந்த பக்தியுடன் இந்த ஆலயத்துக்கு வந்து, அகில நாயகனாம் ஸ்ரீகாமகலா காமேஸ்வரரையும், கருணை நாயகியாம் ஸ்ரீகாமகலா காமேஸ்வரியையும் மெய்யுருக தரிசித்து, மனதார வழிபட்டால், பிரிந்த தம்பதி ஒன்று சேருவர்; இல்லறம் செழிக்கும்; வாழ்வு வரமாகும்.