ஆரம்பநிலை மன அழுத்தத்தால் பாதிக்கப்படுவோர், தானாகவே சரிசெய்து கொள்வார்கள். இது கவலைக்குரியதல்ல. மிதமான மன அழுத்தத்தில் கவனமின்மை அதிகரிக்கும். தற்கொலை எண்ணம் வந்தாலும், அதைச் செயல்படுத்தத் தோன்றாது. நாளைக்குச் சரியாகிவிடும் என்கிற நம்பிக்கை இருக்கும். கவுன்சிலிங் கொடுத்தாலே அதிலிருந்து மீண்டு விடுவார்கள்.
மூன்றாவது நிலை தீவிர மன அழுத்தம். இதில் கவலை வரும். அதிலிருந்து விடுபடத் தெரியாமல் அதிலேயே மூழ்கிப்போய் கிடப்பார்கள். தற்கொலை எண்ணம் துரத்தும். என்னால் யாருக்கும் எந்தப் பயனும் இல்லை எனத் தோன்றும். எந்த விஷயத்திலும் நம்பிக்கை இருக்காது. இது சில நாள்கள் முதல் சில வருடங்கள் வரை நீடிக்கலாம். இதை மருந்து, மாத்திரைகளால் மட்டும்தான் சரிப்படுத்த முடியும்.

இந்த மூன்றுநிலைகள் தவிர, யூனிபோலார் டிப்ரெஷன் (Unipolar Depression), பைபோலார் டிப்ரெஷன் (Bipolar depression) என மேலும் இரண்டு வகையான மன அழுத்தம் உள்ளன.
வருத்தமோ, கவலையோ இருக்கும். அடுத்தடுத்த நாள்களில் அவற்றைக் கடந்து சாதாரண மனநிலைக்கு வருவார்கள். மீண்டும் மன அழுத்தத்துக்குள் போவார்கள். மறுபடி மீள்வார்கள். இது சில நாள்கள், வாரங்கள், மாதங்கள், வருடங்கள் என நீடிக்கலாம். இதுதான் யூனிபோலார் டிப்ரெஷன்.
இன்னொருவகை… பைபோலார் டிப்ரெஷன். இந்த வகை மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கவலை அதீதமாக இருக்கும். அதிலிருந்து மீண்டு சகஜ நிலைக்கு வருவார்கள். உடனடியாக சந்தோஷ மனநிலைக்குப் போவார்கள். அதற்குக் காரணமே இருக்காது. அதுவும் உச்சத்தில் இருக்கும். கவலையோ, மகிழ்ச்சியோ, இரண்டுமே இவர்களுக்கு அதீதமாக இருக்கும். ஒருவாரம் கவலை, ஒரு வாரம் மகிழ்ச்சி அல்லது 15 நாள்கள் கவலை, அடுத்த 15 நாள்கள் மகிழ்ச்சி என இருப்பார்கள். எனவே, உங்களுடைய மேலோட்டமான கேள்வியை வைத்து இதற்கான முழுமையான தீர்வைச் சொல்வது கடினம். உங்கள் தோழியை மனநல ஆலோசனைக்கு அழைத்துச் செல்லுங்கள்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.