கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்துள்ள சிறுவத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ். இவரின் மனைவி எழில்செல்வி. இவர் சென்னையில் உள்ள பிரபல நடிகை ஒருவரின் வீட்டில் வேலை செய்து வருகிறார். இந்தத் தம்பதியின் மகன் பிரசாந்த் (19). இவரைக் காணவில்லை என பண்ருட்டி புதுப்பேட்டை காவல் நிலையத்தில் சில தினங்களுக்கு முன்பு புகாரளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸார் பிரசாந்த்தை தேடிவந்தனர். அவரின் செல்போன் நம்பரும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டதால் பிரசாந்த் என்ன ஆனார் என்ற தகவல் கிடைக்கவில்லை. இந்தநிலையில்தான் பிரசாந்த் திருவள்ளூர் மாவட்டத்தில் பொன்னேரி கடற்கரை பகுதியில் வைத்து கொலை செய்யப்பட்ட அதிர்ச்சி தகவல் போலீஸாருக்கு கிடைத்தது. உடனடியாக புதுப்பேட்டை போலீஸார், ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் திருப்பாலைவனம் போலீஸார், பொன்னேரி கடற்கரை பகுதிக்குச் சென்று விசாரித்தனர். இதற்கிடையில் புதுப்பேட்டை போலீஸார், இளைஞர் பிரசாந்தை கொலை செய்த குற்றச்சாட்டில் வேதராஜ், தினேஷ் ஆகியோரைப் பிடித்து விசாரித்தனர். பின்னர் அவர்களை அழைத்துக் கொண்டு பொன்னேரி கடற்கரை பகுதிக்குச் சென்று புதைக்கப்பட்ட பிரசாந்தின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சம்பவம் நடந்த இடம் பொன்னேரி கடற்கரை என்பதால் இந்த கொலை வழக்கை திருப்பாலைவனம் போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதுகுறித்து புதுப்பேட்டை, திருப்பாலைவனம் போலீஸாரிடம் பேசினோம்
“கொலை செய்யப்பட்ட பிரசாந்த், டைல்ஸ் ஒட்டும் வேலை செய்து வந்தார். அப்போதுதான் வேதராஜ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. இவருக்கு சில மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடந்திருக்கிறது. வேதராஜின் மனைவிக்கு சென்னை ரெட்டேரி பகுதியாகும். இந்தநிலையில்தான் வேதராஜின் மனைவிக்கும் பிரசாந்த்துக்கும் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. அதை வேதராஜ் கண்டித்திருக்கிறார். இந்தநிலையில்தான் சென்னைக்கு வந்த பிரசாந்த், வேதராஜின் மனைவியுடன் பொன்னேரி கடற்கரை பகுதியில் சந்தித்து பேசியிருக்கிறார். இந்தத் தகவல் தெரிந்ததும் வேதராஜ், தன்னுடைய நண்பர் தினேஷை அழைத்துக் கொண்டு பொன்னேரி கடற்கரைக்கு வந்திருக்கிறார். பிரசாந்த்தை பொன்னேரி கடற்கரையில் பார்த்ததும் அவருடன் இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு மதுபாட்டிலை உடைத்து பிரசாந்த்தை சரமாரியாக தாக்கியிருக்கிறார்கள். ஆத்திரம் தீராதவர்கள், பிரசாந்த்தின் கழுத்தையும் மதுபாட்டிலால் அறுத்திருக்கிறார்கள். அதைத் தொடர்ந்து பொன்னேரி கடற்கரை பகுதியிலேயே பிரசாந்த்தின் சடலத்தை புதைத்திருக்கிறார்கள். வேதராஜ், தினேஷ் அளித்த தகவலின்படி பிரசாந்த்தின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளோம். கொலை வழக்கில் வேதராஜ், தினேஷை கைது செய்திருக்கிறோம். இந்தச் சம்பவம் தொடர்பாக வேதராஜின் மனைவியிடமும் விசாரணை நடத்தி வருகிறோம்” என்றனர்.