திறமைமிகு கட்டுமானம்; மொத்த சிமெண்ட் அளவு 2,20,745 டன்கள் | மேட்டூர் அணை ஓசை 41 | history anai osai mettur dam construction series 41

Spread the love

மேட்டூர் அணை அமைந்துள்ள இடத்துக்கு அருகில் அனைத்து எதிர்பார்ப்புகளையும் மிஞ்சும் வகையில் தரமான மணலைக் கொண்டு இருந்தது. கூர்மையான, சுத்தமான, நல்ல தரம் கொண்ட மணல் பல லட்சம் கன அடி அளவில் காவிரி ஆற்றின் படுகையில் கிடைத்தது. ஆனால், இவை மிகக் குறைந்த செலவில் கிடைத்தது என்பதே மாபெரும் ஆச்சரியம். ஆற்றுப்படுகையில் இருந்து இந்தத் தரமான மணல் சேகரிக்கப்பட்டது. மெட்ராஸ் மாகாணத்துக்கு வெளியே வேறு இடங்களில் பணிபுரிந்து வந்த பொறியாளர்களுக்கு இங்கு கிடைத்த மணலின் தரம் குறித்து அறிந்து திகைத்து நின்றனர். அவர்கள் மாதிரிக்கு மண்ணை சேகரித்துச் சென்று ஆய்வுக்கு உட்படுத்தி இந்தியாவில் கிடைக்கும் மிகச் சிறந்த மணல் வகைகளில் ஒன்று இங்கு கிடைப்பவை என்று அறிவித்தனர்.

கான்கிரீட் மற்றும் காரைப் பூச்சுகளுக்கு மிகவும் பொருத்தமான, விரும்பத்தக்க அளவில் நுண்ணிய, சுத்தமான மற்றும் கூர்மையான குணங்களை கொண்டதாக இம்மணல் அமைந்திருந்தது என்று அதன் சிறப்புகளை பதிவு செய்தனர். மேலும், இந்த வண்டல் மணல் விலங்கு , மற்றும் தாவர பொருட்களில் இருந்து விடுபட்ட சுத்தமான தரத்தில் அமைந்திருக்கிறது என்றும் அதன் தரத்தில் பெருமை கொண்டனர். இயற்கையாகவே மிகவும் முழுமையான தரத்தில் இருந்தது இதன் சிறப்பம்சமாகும்.

மேலும், இயற்கை மேட்டூருக்கு அருகிலேயே இவ்வளவு தரமான மணலைக் கொடுக்காமல் இருந்திருந்தால் அணையை இவ்வளவு குறைந்த செலவில் கட்டியிருக்க வாய்ப்பே கிடையாது. இப்படி கிடைத்த தரமான மணலை அணைக்கட்ட பயன்படுத்தி இருந்தாலும் மேட்டூர் பரிசோதனை நிலையம் ஒவ்வொரு நாளும் கலவை இயந்திரங்களுக்கு அனுப்பப்படும் மணலிலிருந்து மாதிரிகள் எடுத்து பரிசோதனை கூடத்தில் சோதனை செய்து செயற்பொறியாளர் மற்றும் தலைமை பொறியாளர் வரை அந்த முடிவுகளை அனுப்பி தேவையான நடவடிக்கை எடுக்க உதவினர்.

20 கலவை இயந்திரங்கள் அணையின் உச்சகட்ட வேலை நடக்கும் போது ஒரே சமயத்தில் பணியில் இருந்தன. அந்த சமயத்திலும் இந்தத் தரக்கட்டுப்பாட்டு பரிசோதனைகள் நடைபெற்றது என்ற தரவுகள் அணையின் உறுதித் தன்மைக்கு உத்தரவாதம் அளிக்கிறது.

விஞ்ஞானபூர்வ முறையில் இந்த அணை கட்டப்பட்டது என்பதை உறுதி செய்யவும் பரிசோதனைகளும் அவ்வாறே செய்து அணையின் உறுதித் தன்மை உறுதி செய்யப்பட்டது என்பது குறித்தும் கீழ்க்கண்ட ஒரு சோதனை நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது.

தொடர்ந்து பல பகுதிகளாக கட்டப்பட்டு வந்த அணை சில பல காரணங்களால், சில கால இடைவெளி விட்டு மீண்டும் கட்ட ஆரம்பிப்பார்கள். இது நடைமுறையில் ஒன்று. அதுபோல சமயத்தில் கட்டி நிறுத்தப்பட்ட ஒரு பகுதியில் கட்டிடச் சுவற்றின் மேல் புறத்திலிருந்து செங்குத்தாக துளை, அதுவும் குறிப்பிட்ட தூர இடைவெளியில் அணையின் குறுக்காக பல துளைகள் இடப்படும்.

தண்ணீர் தேங்கி நிற்கும் பகுதியான அணைச் சுவற்றின் வடக்கு பகுதியில் அதிகமான துளைகளும், அணைச் சுவற்றின் தெற்கு பகுதியில் சற்று குறைவான துளைகளும் இடப்பட்டன. துளைகளின் மேற்புறம் மூடப்பட்டு அந்த துளைகளில் தண்ணீரை நிரப்பி அழுத்தம் தந்து, ஒரு நீர்மானி மற்றும் அழுத்த மானி உதவியுடன் தேவையான குழாய் இணைப்புகளுடன் சோதனை செய்யப்படும். குறிப்பிட்ட பத்து நிமிட கால அளவில், நீரோட்டத்தின் அளவு குறிக்கப்படும். பின்னர் ஒரு சதுர அடி அளவுக்கு உண்டான பதிவு கணக்கிடப்பட்டு சரிபார்க்கப்படும். இதன் மூலம் துளைகளுக்கு கீழே தண்ணீர் வழிந்து ஓடும் அளவு குறிப்பிட்ட அளவை விட மிகாமல் இருக்கிறதா என கண்காணிக்கப்படும். அதிகமான நீர் துளை வழியாக சுவற்றில் இறங்கி இருந்தால் அந்த இடத்தில் சுவற்றின் வழியே ஊடுருவக்கூடிய தன்மை இருக்கிறது என பொருள் வரும்.

எனவே, அந்த இடத்தில் இந்த தன்மையை குறைக்க “கிரௌட்டிங்” (grouting) எனப்படும் முறையில் கான்கிரீட் கலவையை உள் செலுத்தப்படும். அணைச்சுவற்றின் வடபுறம் 0.01 கேலன் ஒரு நிமிடத்திற்கு ஒரு சதுர அடிக்கு என்ற அளவிலும், தென்புறம் 0.05 கேலன் ஒரு நிமிடத்திற்கு ஒரு சதுர அடிக்கு என்ற அளவிலும் நீர் வழிந்தோடுவது அனுமதிக்கப்பட்ட அளவாக தலைமைப் பொறியாளரால் நிர்ணயம் செய்யப்பட்டு அணை முழுவதும் இந்த சோதனை நடைபெற்றது.

இதுபோன்று மொத்தம் 484 இடங்களில் மொத்த அணைச்சுவற்றின் பரப்பிலும் துளையிட்டு சோதனை செய்யப்பட்டது. தரமான கடும் சோதனைகள், தரமான அணையை கட்ட பெரிதும் உதவி இருக்கின்றன. பொதுவாக மேட்டூர் அணையின் உறுதித்தன்மை குறித்து, அது எஃகு போல சிறப்பானது என்று பொதுமக்களிடம் ஓர் நம்பகத்தன்மை இன்றளவும் நிலவுகிறது. அதற்கு காரணம், இதுபோன்ற கடும் தரக்கட்டுப்பாட்டு சோதனைகள் அதை உறுதிபடுத்துகிறது என்பது அசைக்க முடியாத உண்மையாக விளங்குகிறது.

தொடர்ந்து பயணிப்போம்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *