`தூது அனுப்பிய எடப்பாடி; பிடிகொடுக்காத சிவி சண்முகம், எஸ்.பி வேலுமணி' 60% vs 40% – உடைகிறதா அதிமுக?

Spread the love

அ.தி.மு.கவில் தலைமைக்கு எதிராக முன்னணித் தலைவர்கள் போர்க்கொடி தூக்கியுள்ள சம்பவம் தமிழ்நாட்டு அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் ஏற்பட்ட கருத்து முரண்பாடினை தொடர்ந்து, முன்னாள் அமைச்சர்கள் சி.வி. சண்முகம் மற்றும் எஸ்.பி. வேலுமணி ஆகியோர் தனி அணியாகச் செயல்படத் தொடங்கியுள்ளது கட்சி வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று காலை எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் மற்றும் முன்னணித் தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் முதல்வராகப் பொறுப்பேற்றதற்கு ஆதரவு தெரிவிப்பது மற்றும் சட்டமன்றக் குழுத் தலைமைப் பொறுப்புகள் தொடர்பாகக் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. எடப்பாடியின் சில முடிவுகளில் சி.வி. சண்முகம் மற்றும் வேலுமணி தரப்பு முரண்பட்டு, கூட்டத்தைப் புறக்கணித்து வெளியேறினர் என்ற தகவல்கள் வெளியானது.

எடப்பாடி பழனிசாமி - வேலுமணி
எடப்பாடி பழனிசாமி – வேலுமணி

இபிஎஸ் இல்லத்திலிருந்து வெளியேறிய சி.வி. சண்முகம் மற்றும் வேலுமணி தரப்பினர், சென்னை எம்.ஆர்.சி நகர் பகுதியில் உள்ள அலுவலகத்தில் தனி ஆலோசனையில் ஈடுபட்டனர். இதில் சுமார் 38 எம்.எல்.ஏ-க்கள் மற்றும் சில மாவட்டச் செயலாளர்கள் இதில் கலந்து கொண்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அந்தக் கூட்டத்தில் சட்டமன்றக் குழுத் தலைவராக எஸ்.பி. வேலுமணியையும், துணைத் தலைவராக சி.வி. சண்முகத்தையும் நியமிக்கக் கோரி 38 எம்.எல்.ஏ-க்களின் கையெழுத்து அடங்கிய கடிதம் தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது.

தற்போதைய நிலவரப்படி, அ.தி.மு.க நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏ-க்களில் சுமார் 60% பேர் சி.வி. சண்முகம் பக்கமும், 40% பேர் எடப்பாடி பழனிசாமி பக்கமும் இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

நிலைமை கையை மீறிச் செல்வதை உணர்ந்த எடப்பாடி பழனிசாமி, சேலம் இளங்கோவன், அக்ரி கிருஷ்ணமூர்த்தி, தளவாய் சுந்தரம், ஆர்.பி. உதயகுமார் ஆகிய 5 பேர் கொண்ட குழுவைச் சமாதானம் பேச அனுப்பி வைத்தார். “சி.வி. சண்முகம் சொல்வதை நான் கேட்கத் தயார்” என இபிஎஸ் இறங்கி வந்த போதிலும், அதிருப்தி தரப்பினர் அதனை ஏற்க மறுத்துவிட்டதாகத் தெரிகிறது.

இந்தச் சூழலில், இன்று சென்னையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை எடப்பாடி பழனிசாமி அவசரமாகக் கூட்டியுள்ளார். நள்ளிரவில் தகவல் தெரிவிக்கப்பட்டதால் சென்னை மற்றும் சுற்றுவட்டார நிர்வாகிகள் இதில் பங்கேற்கின்றனர்.

சி.வி.சண்முகம்
சி.வி.சண்முகம்

ஒருவேளை சி.வி. சண்முகம் மற்றும் வேலுமணி தரப்பினர் முறைப்படி முதல்வர் விஜய்யைச் சந்தித்து ஆதரவு தெரிவித்தால், அவர்களைக் கட்சியிலிருந்து நீக்க எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் கசிகின்றன. அ.தி.மு.க-வின் இரண்டு துருவங்களாக இருந்த தலைவர்களே தற்போது தலைமைக்கு எதிராகத் திரும்பியுள்ளது அக்கட்சியினரிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

அ.தி.மு.க-வில் தலைமைப் பதவி மற்றும் கொள்கை முடிவுகளில் ஏற்பட்ட மோதலால் கட்சி உடையும் நிலையில் உள்ளது. சி.வி. சண்முகம் – வேலுமணி கூட்டணி 38 எம்.எல்.ஏ-க்களைத் தன்வசம் வைத்துள்ளதால் எடப்பாடி பழனிசாமியின் தலைமைக்குச் சிக்கல் உருவாகியுள்ளது. இன்று நடைபெறும் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவே அ.தி.மு.க-வின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் என்பது குறிப்பிடதக்கது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *