முந்தைய அ.தி.மு.க ஆட்சியில் 2018, மே 22-ம் தேதி தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்கள் போராட்டத்தில் ஏற்பட்ட கலவரத்தில், 2 பெண்கள் உட்பட 13 பேர் போலீஸாரால் கொல்லப்பட்டனர்.
100-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். எதிர்க்கட்சிகளால் கடும் நெருக்கடி ஏற்பட்டதால், ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.
3,000-க்கும் மேற்பட்ட பக்கங்கள் உடைய முழு விசாரணை அறிக்கை, கடந்த 18.05.2022-ம் தேதி அப்போதைய முதல்வர் ஸ்டாலினிடம் ஒப்படைக்கப்பட்டது.
அதில், “யாருடைய உத்தரவும், தூண்டுதலுமின்றி துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது. தமிழ்நாடு இதுவரையிலும் கண்டிராத மிக மோசமான காவல்துறை நடைவடிக்கை. அப்போது பொறுப்பு வகித்த தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷ், தூத்துக்குடி எஸ்.பி.மகேந்திரன், தென்மண்டல ஐ.ஜி சைலேஷ்குமார் யாதவ், நெல்லை சரக டி.ஐ.ஜி கபில்குமார் சரட்கார், வருவாய்த்துறை அலுவலர்கள் உள்ளிட்ட 17 பேர்தான் இதற்கு முழுப் பொறுப்பு.
இவர்கள் மீது சட்டப்பிரிவு 302-ன் கீழ் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட வேண்டும்’ எனக் குற்றம்சாட்டப்பட்ட ஒவ்வொருவரின் தவறுகளும் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.