போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில், கடந்த 5-ம் தேதி பெரியம்மா கலாவதி வீட்டிற்குப் பசியோடு சென்றபோது தனக்கு தோசை சுட்டுக் கொடுத்ததாகவும், நான் ஏன் பெரியம்மாவைக் கொலை செய்யப்போகிறேன் எனவும் கூறியுள்ளார்.
பின்னர் அவரிடம் நடத்திய தீவிர விசாரணையில் கலாவதியைக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். ”எனக்கு கடன் பிரச்னை இருந்தது. கடனைக் கொடுக்க என்ன செய்வதென யோசித்தபோது பெரியம்மா கழுத்தில் அணிந்திருந்த நகைகளைத் திருடிவிடலாம் என யோசித்தேன். ஆனால், நகைகளைத் திருடும் போது அவர் முழித்துவிட்டால் மாட்டிக் கொள்வோம் என்பதால் தூங்கிக் கொண்டிருந்த அவரது வாயை துணியால் பொத்தி உளியால் கழுத்தில் குத்தினேன். துடிதுடித்த பெரியம்மா சில நிமிடங்களிலேயே உயிரிழந்தார்.

பின்னர் 10 சவரன் தங்க நகைகளை எடுத்துக் கொண்டு ஊருக்கு வெளிப்புறத்தில் உள்ள சுடுகாட்டுப் பகுதிக்குச் சென்றேன். நகைகளையும், கொலைக்குப் பயன்படுத்திய உளியையும் அங்கு புதைத்து வைத்தேன். பெரியம்மா கொலை செய்யப்பட்ட செய்தி ஊர் முழுவதும் பரவியதும் நானே போலீஸுக்கு தகவல் கூறினேன்” எனக்கூறி போலீஸாரையே அதிர வைத்தார்.
இதனையடுத்து திருமேனி முருகனை போலீஸார் கைது செய்தனர். இந்தக் கொலையில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா எனவும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.