Cricket
oi-Yogeshwaran Moorthi
சென்னை: சிஎஸ்கே அணியின் புதிய பயிற்சியாளராக ஹேமங் பதானி நியமனம் செய்யப்பட உள்ளதாக பேசப்பட்டு வரும் சூழலில், ஆஸ்திரேலியா ஜாம்பவான் ஷேன் வாட்சன் பரிசீலனை பட்டியலில் உள்ளதாக சொல்லப்படுகிறது. ஷேன் வாட்சன் ஏற்கனவே பிஎஸ்எல் உள்ளிட்ட தொடர்களில் தலைமைப் பயிற்சியாளராக இருந்து வருகிறார். ஐபிஎல் தொடரிலும் டெல்லி மற்றும் கேகேஆர் அணிக்கு துணைப் பயிற்சியாளராக இருந்தவர்.
தமிழக அரசியலில் பவர் செண்டர் மாறி இருப்பதை போல், சிஎஸ்கே அணியிலும் பவர் செண்டர் மாறியுள்ளது. இத்தனை நாட்களாக சிஎஸ்கே அணியின் முக்கிய முடிவுகளை ஸ்ரீனிவாசன் எடுத்து வந்தார். அதனை சிஇஓ காசி விஸ்வநாதன் செயல்படுத்துவார். இன்னொரு பக்கம் தோனி எடுக்கும் முடிவுகள் ஸ்ரீனிவாசனுடன் ஒத்துப்போகும்.

ஆனால் ஸ்ரீனிவாசன் ஓய்வில் இருப்பதால், சிஎஸ்கே அணியின் கட்டுப்பாடு அவரின் மகள் ரூபா குருநாத் வசம் வந்துள்ளது. சிஎஸ்கே அணியுடன் தொடர்ச்சியாக பயணித்து வரும் ரூபா குருநாத், பல்வேறு மாற்றங்களை கொண்டு வர முயற்சித்து வருகிறார். அதன் அடிப்படையில் தான் சிஎஸ்கே அணியின் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து பிளமிங் நீக்கப்பட்டிருக்கிறார்.
18 ஆண்டு காலமாக பிளமிங் பங்காற்றியதற்கு அவருக்கான மரியாதை அளித்து சிஎஸ்கே அணி நிர்வாகம் ஓய்வு கொடுத்துள்ளது. இதனால் புதிய பயிற்சியாளராக யார் வருவார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. சிஎஸ்கே அணி இம்முறை இந்திய பயிற்சியாளரை நியமிக்க வேண்டும் என்று பல்வேறு குரல்கள் எழுந்துள்ளன. ஏனென்றால் ஐபிஎல் தொடரின் மைதானங்கள் இந்திய பயிற்சியாளர்களுக்கு நன்றாகவே புரிந்திருக்கும்.
ஆனால் ரிக்கி பாண்டிங், ஆண்டி பிளவர் போன்றோரும் சிறப்பாகவே செயல்படுகிறார்கள். அந்த வகையில் சிஎஸ்கே அணியின் பரிசீலனை பட்டியலில் ராகுல் டிராவிட், ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ஹேமங் பதானி ஆகியோர் இந்திய பயிற்சியாளர்கள் இருக்கின்றனர். சிஎஸ்கே அணி நிர்வாகத்திற்கும், ராகுல் டிராவிட்டுக்கும் நன்றாக ஒத்துப்போகும்.
அதேபோல் வெளிநாட்டுப் பயிற்சியாளர்களில் ஆடம் வோஜஸ், ஷேன் வாட்சன் மற்றும் ஆல்பி மோர்கல் ஆகியோர் இருக்கின்றனர். இதில் ஷேன் வாட்சன் ஏற்கனவே ஐபிஎல் தொடரில் கேகேஆர் அணியின் துணைப் பயிற்சியாளராக இருந்து வருகிறார். அதேபோல் ஆல்பி மோர்க்கல் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணியின் துணைப் பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார்.
இவர்களில் சிஎஸ்கே அணி நிர்வாகம் யாரை தேர்வு செய்யும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. நிச்சயமாக ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோரின் கருத்துக்களும் கேட்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தோனியும் இங்கிலாந்து நடக்கும் ஹன்ட்ரட் லீக் தொடரில் சில பயிற்சியாளர்களை சந்திக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.