தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் வாபஸ்… அரசு அளித்த முக்கிய வாக்குறுதிகள்! – Kumudam

Spread the love

9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் கடந்த 15 நாட்களாக தூய்மைப் பணியாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், நேற்று (3.09.2026) தமிழ்நாடு சட்டப்பேரவையில் தூய்மைப் பணியாளர்களின் போராட்டம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தார்.

இதனைத் தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூய்மைப் பணியாளர்களுடன் சென்னை ரிப்பன் மாளிகையில் அமைச்சர்கள் என். ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, சி.டி.ஆர். நிர்மல் குமார், ராஜ்மோகன் மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் சமீரன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற இந்தப் பேச்சுவார்த்தையில், தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகள் நியாயமானவை என்றும், நிறைவேற்றக்கூடிய கோரிக்கைகளுக்கு முன்னுரிமை அளித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் ஆனந்த் தெரிவித்தார். தூய்மைப் பணியாளர்களின் குறைகளைக் கேட்டறிய முதலமைச்சர் தங்களை அனுப்பி வைத்துள்ளதாகவும் அவர் கூறினார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார், “இது உங்களுடைய அரசு. எந்தக் கவலையும் கொள்ளத் தேவையில்லை. தேவையான வசதிகள் ஒவ்வொரு கட்டமாக செய்து தரப்படும்” என உறுதியளித்தார்.

அமைச்சர் ராஜ்மோகன், “போராடுவது உங்கள் உரிமை; கோரிக்கைகளை நிறைவேற்றுவது எங்கள் கடமை” என்றார். அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, அனைத்து பிரச்சினைகளையும் உணர்வுபூர்வமாக அணுகுவதாகவும், கோரிக்கைகளை நிறைவேற்ற அரசுக்கு சிறிது கால அவகாசம் தேவை என்றும் தெரிவித்தார்.

இந்நிலையில் சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற பேச்சுவார்த்தை குறித்து அமைச்சர் ராஜ்மோகன் மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் சமீரன் ஆகியோர் செய்தியாளர்கள் சந்தித்து அது குறித்தான முழு விவரங்களை கூறியுள்ளார்கள். அதில் அவர்கள் கூறியதாவது, தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகள் தொடர்பாக அமைச்சர்கள் நடத்திய பேச்சுவார்த்தை நிறைவடைந்துள்ளது.

இதன்படி, தூய்மைப் பணியாளர்களுக்கு உணவுப்படி அடுத்த மாதம் முதல் வழங்க தமிழ்நாடு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மேலும், 197 வார்டுகளிலும் கழிப்பறைகள் கட்டித் தர நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர்கள் உறுதியளித்துள்ளனர். அதனை தொடர்ந்து தூய்மைப் பணியாளர்கள் போராட்டமும் வாபஸ் பெற்றுள்ளது.

தூய்மைப் பணியாளர்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளை வாபஸ் பெறவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதேபோல், மழைக்காலத்தை முன்னிட்டு ரெயின்கோட், கையுறை உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களை அக்டோபர் 10-ம் தேதிக்குள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தூய்மைப் பணியாளர்களின் மகப்பேறு விடுப்பு மற்றும் வார விடுப்பு தொடர்பான கோரிக்கைகள் குறித்தும் ஆலோசித்து விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் என அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.

பணியின்போது உயிரிழந்த 7 தூய்மைப் பணியாளர்களின் குடும்பங்களுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்குவது தொடர்பாகவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், தூய்மைப் பணிகளை மேம்படுத்தும் வகையில் புதிய வாகனங்களை வழங்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, தூய்மைப் பணிகளுக்காக 300 புதிய வாகனங்கள் வழங்கப்பட உள்ளன.

தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகள் தொடர்பான இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை அக்டோபர் 3-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து  தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்க ஒன்று.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *