கடந்த 16 நாட்களாக, சென்னை ரிப்பன் பில்டிங்கில் தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் நடத்தி வந்தனர்.
இன்று காலை அவர்களைச் சந்தித்து அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, ராஜ்மோகன், நிர்மல் குமார் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
பேச்சுவார்த்தைக்குப் பின், போராட்டம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
அமைச்சர்களின் பேச்சுவார்த்தை குறித்து தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தை முன்னெடுக்கும் LTUC சங்கத் தலைவர் கு.பாரதி செய்தியாளர்களிடம் கூறியதாவது…
“பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 16 நாட்களாகத் தொடர் போராட்டம் நடத்தி வந்தோம்.

இன்று அமைச்சர்கள் சுமார் இரண்டு மணி நேரம் எங்களோடு விரிவான பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
அந்தப் பேச்சுவார்த்தையில் எட்டப்பட்ட முக்கிய முடிவுகள் மற்றும் உறுதிகள்:
உணவுப்படி உயர்வு,
கழிப்பறை மற்றும் ஓய்வறை வசதி,
போராட்ட வழக்குகள் ரத்து,
புதிய வாகனங்கள் வழங்குதல்,
இழப்பீட்டுத் தொகை மற்றும் நலவாரியம்,
மழைக்கால உபகரணங்கள்,
விடுப்பு மற்றும் ஊதியக் கோரிக்கைகள்,
தொடர் ஆய்வுக் கூட்டங்கள்.
இதனைத் தொடர்ந்து, இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை அக்டோபர் 3-ஆம் தேதி மீண்டும் அமைச்சர்கள் தலைமையில் நடைபெற உள்ளது.
உழைப்போர் உரிமை இயக்கத்துடன் நடைபெறும் அந்தப் பேச்சுவார்த்தையில், முதலமைச்சரைச் சந்திப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும், பணியாளர்கள் மகிழ்ச்சியடையும் வகையில் நல்ல செய்திகள் அறிவிக்கப்படும் என்றும் அமைச்சர்களும் ஆணையரும் உறுதியளித்துள்ளனர்.
எனவே, இந்தப் போராட்டம் தற்காலிகமாகத் தள்ளிவைக்கப்படுகிறது. அன்றைய தினம் அறிவிக்கப்படும் முடிவுகளின் அடிப்படையில், சங்கத்தின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவு செய்யப்படும்.
மேலும், சங்கத்திற்கான அலுவலகம் அமைத்துத் தர வேண்டும் என்ற கோரிக்கையையும் அரசு ஏற்றுக்கொண்டுள்ளது.”

அமைச்சர் ராஜ்மோகன் பேசுகையில், “அரசு வேலை வழங்குவது தொடர்பாக இரு முதன்மையான சவால்கள் அதிகாரிகளால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. ஒன்று, நிதி சார்ந்த சிக்கல்கள்,
இன்னொன்று, நிர்வாக ரீதியிலான சிக்கல்கள்.
இருப்பினும், பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முடியாத பிரச்
னைகள் எதுவும் இல்லை.
இன்று மூத்த அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இவர்களை உறுதியாக முதலமைச்சர் சந்திப்பார்.
ஒப்பந்த முறை ரத்து மற்றும் பணி நிரந்தரத்தில் நிதிச் சுமை சார்ந்த பல்வேறு காரணிகள் இதில் அடங்கியுள்ளன.
எனவே, இது குறித்த தெளிவான விவரங்கள் அக்டோபர் 3-ஆம் தேதி நடைபெறும் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையின் முடிவில் முறைப்படி தெரிவிக்கப்படும்” என்று கூறியுள்ளார்.