தேனி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா மற்றும் புண்ணியத் தலங்களில் ஒன்றாக விளங்கும் சுருளி அருவியில், கம்பம் தொகுதி எம்எல்ஏ பி.எல்.ஏ. ஜெகநாத் மிஸ்ரா தலைமையில் சிறப்பு தூய்மைப் பணி நடைபெற்றது.
இயற்கை எழில் கொஞ்சும் சுருளி அருவிக்கு தினந்தோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகளும், பக்தர்களும் வருகை தருகின்றனர்.
ராமேஸ்வரத்திற்கு அடுத்தபடியாக புண்ணிய ஸ்தலமாக கருதப்படும் இங்கு தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வதற்காக வருவது வழக்கம்.

மேலும், கேரள மாநிலத்திலிருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.
கடந்த பல ஆண்டுகளாக தர்ப்பணம் செய்ய வரும் பொதுமக்கள் பயன்படுத்திய துணிகள் மற்றும் பிற பொருள்களை ஆற்றங்கரையில் விட்டுச் செல்வதாலும், சுற்றுலாப் பயணிகள் வீசிச் செல்லும் பிளாஸ்டிக் கழிவுகளாலும் சுருளி அருவிப் பகுதி குப்பை மேடுகளாக மாறியிருந்தது.
இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுக்கப்பட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.