தேசியவாத காங்கிரஸ் அணிகள் இணைப்பு? “அஜித்பவார் இறந்ததும் முடிந்துவிட்டது” – சுப்ரியாவின் பதில் | “It’s all over after Ajit Pawar’s departure”: Supriya Sule rules out any possibility of NCP factions reuniting

Spread the love

முன்னாள் மத்திய அமைச்சர் சரத்பவார் தொடங்கிய தேசியவாத காங்கிரஸ் கடந்த 2023ம் ஆண்டு இரண்டாக உடைந்தது. மறைந்த மகாராஷ்டிரா முன்னாள் துணை முதல்வர் அஜித்பவார் தலைமையிலான அணி உண்மையான தேசியவாத காங்கிரஸ் என்று அறிவிக்கப்பட்டது.

இதனால் சரத்பவார் தலைமையிலான அணி தனி அணியாக செயல்பட்டது. இந்த ஆண்டு இறுதியில் அஜித்பவார் விமான விபத்தில் இறப்பதற்கு முன்பு தேசியவாத காங்கிரஸ் அணியின் இரு அணிகளையும் ஒன்றாக இணைக்க பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால் அஜித்பவார் இறந்த பிறகு அந்தப் பேச்சுவார்த்தை தடைப்பட்டது.

தற்போது அப்பேச்சுவார்த்தை மீண்டும் சூடுபிடித்துள்ளது. அஜித்பவார் மனைவி சுனேத்ரா பவார் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்குத் தலைமை ஏற்றுள்ளார். சமீபத்தில் தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் சரத்பவாரைச் சந்தித்து பேசினர். இது குறித்து சரத்பவாரோ சுனேத்ரா பவாரோ சரியான பதில் கொடுக்காமல் இழுத்தடித்து வந்தனர்.

சுனேத்ரா பவார்

சுனேத்ரா பவார்

இப்பிரச்னை குறித்து சரத்பவார் மகள் சுப்ரியா சுலே அளித்த பேட்டியில், “‘கட்சியின் இரு பிரிவுகளுக்கு இடையே சாத்தியமான இணைப்பு குறித்த பேச்சுவார்த்தைகள், தனது சகோதரரும் மகாராஷ்டிராவின் முன்னாள் துணை முதல்வருமான அஜித் பவாரின் மறைவுக்குப் பிறகு முடிவுக்கு வந்துவிட்டது.

எனது சகோதரர் (அஜித் பவார்) உயிருடன் இருந்தவரை (கட்சியின் இரு பிரிவுகளின்) இணைப்பு குறித்து விவாதிக்கப்பட்டது. அவர் நம்மை விட்டுப் பிரிந்த அந்த நாள், அந்த விவாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டது” என்று கூறினார்.

இது குறித்து அஜித்பவாரின் தேசியவாத காங்கிரஸ் மாநில தலைவர் சுனில் தட்கரே கூறுகையில், ”சரத் பவார் தலைமையிலான கட்சியுடன் இணைவது குறித்து தேசியவாத காங்கிரஸ் பரிசீலிக்கவில்லை. நரேந்திர மோடியின் தலைமையில் தீவிர பரிசீலனைக்குப் பிறகு நாங்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்தோம். நாங்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருக்கிறோம்.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொடர்ந்து இருப்போம். சுனேத்ரா பவாரின் தலைமையிலான கட்சி, தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் உறுதியாகத் தொடர்ந்து பயணிக்கும். கட்சிகளை இணைப்பது என்ற பேச்சிற்கே இடமில்லை” என்றும் அவர் குறிப்பிட்டார்.

இவ்விவகாரத்தில் நேரம் வரும் போது தெரிய வரும் என்று சுனேத்ரா பவார் தெரிவித்துள்ளார். இதனால் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் இணைப்பு கேள்விக்குறியாகி இருக்கிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *