MI விட்டு வெளியேறும் ஹர்திக்? GT-யில் மீண்டும் ரீ-என்ட்ரி? ஆனால் ஒரு சிக்கல்! – Kumudam

Spread the love

மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து வெளியேற ஹர்திக் பாண்டியா மேற்கொண்டு வரும் முயற்சிக்கு மீண்டும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு திரும்ப ஹர்திக் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், கேப்டன் பதவி தொடர்பான அவரது நிபந்தனையால் அந்த முயற்சி தோல்வியில் முடிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

2022-ம் ஆண்டு குஜராத் டைட்டன்ஸ் அணியை ஐபிஎல் சாம்பியனாக்கிய ஹர்திக், 2023-ல் அந்த அணியை இறுதிப்போட்டிக்கும் அழைத்துச் சென்றார். குஜராத் அணியில் இருந்த காலகட்டத்தில்தான் அவரது ஐபிஎல் வாழ்க்கையின் சிறந்த சீசன்களாக அமைந்தது. அதே நேரத்தில் இந்திய அணியிலும் மீண்டும் தனது இடத்தை உறுதி செய்து, சிறந்த தலைவராகவும் உருவெடுத்தார்.

இதனால் ஹர்திக்கை மீண்டும் அணிக்குள் கொண்டுவர குஜராத் டைட்டன்ஸ் நிர்வாகம் ஆர்வமாக இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால், கேப்டன் பதவியை மீண்டும் தனக்கு வழங்க வேண்டும் என ஹர்திக் வலியுறுத்தியதாக தெரிகிறது. தற்போது சுப்மன் கில் இந்திய டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணிகளின் கேப்டனாக இருப்பதால், அவரை குஜராத் டைட்டன்ஸ் கேப்டன் பதவியில் இருந்து மாற்ற அணி நிர்வாகம் விரும்பவில்லை.

“ஹர்திக்கை எந்த அணிதான் விரும்பாது? ஆனால், அவர் முன்வைத்த கேப்டன்சி நிபந்தனையே இந்த ஒப்பந்தம் முடியாமல் போனதற்கு காரணம்” என கிரிக்கெட் வட்டார தகவல்கள் தெரிவிக்கிறது. 

இதனிடையே, மும்பை இந்தியன்ஸ் அணியிலும் ஹர்திக்கின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. 2026 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் 9-வது இடத்தை பிடித்ததுடன், அந்த அணியின் சாம்பியன் பட்டத்துக்கான காத்திருப்பு 6 ஆண்டுகளாக நீடித்துள்ளது. ஹர்திக்கும் எதிர்பார்த்த அளவுக்கு செயல்படவில்லை. 10 போட்டிகளில் 22.88 சராசரியுடன் 206 ரன்கள் மட்டுமே எடுத்த அவர், 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். முதுகு தசைப்பிடிப்பு காரணமாகவும் அவர் 10 போட்டிகளில் மட்டுமே விளையாடினார்.

2024-ல் ரோஹித் சர்மாவுக்குப் பதிலாக மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ஹர்திக் நியமிக்கப்பட்டது முதலே பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருகிறார். 2024-ல் மும்பை கடைசி இடத்தை பிடித்த நிலையில், 2025-ல் பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறியது. ஆனால், 2026-ல் மீண்டும் 9-வது இடத்துக்கு சரிந்தது.

மேலும், ரோஹித் சர்மாவுக்குப் பதிலாக ஹர்திக் கேப்டனாக நியமிக்கப்பட்டபோது, மும்பை இந்தியன்ஸ் ரசிகர்களில் ஒரு தரப்பினர் கடும் எதிர்ப்பும் தெரிவித்திருந்தனர்.

ஹர்திக் தொடர்ந்து கேப்டன் பதவியில் நீடிப்பாரா என்பது குறித்தும் மும்பை அணி இதுவரை உறுதியான தகவலை வெளியிடவில்லை. அணியின் பேட்டிங் பயிற்சியாளர் கீரன் பொல்லார்டும் ஹர்திக்கின் கேப்டன்சி குறித்து உறுதியான உத்தரவாதம் அளிக்கவில்லை.

இதனால், ஹர்திக் தலைமையை விரும்பும் பட்சத்தில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் அவருக்கு மாற்று வாய்ப்புகளாக உருவாகலாம் என கூறப்படுகிறது.

தற்போது ஹர்திக்கின் கவனம் முழுவதும் முழு உடற்தகுதியை மீட்டெடுப்பதில் உள்ளது. பெங்களூருவில் உள்ள பிசிசிஐ சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸில் பயிற்சி மேற்கொண்டு வரும் அவர், 10 ஓவர்கள் வரை பந்துவீசியும், நீண்ட நேரம் பேட்டிங் பயிற்சியும் செய்து வருகிறார். செப்டம்பர் 13-ம் தேதி டெல்லியில் தொடங்கும் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் சொந்த மண்ணிலான டி20 தொடரில் ஹர்திக் பங்கேற்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *