பல்துறை ஒருங்கிணைந்த சிகிச்சை டாக்டர் ப்ரீதா ரெட்டி, துணைத்தலைவர், அப்போலோ ஹாஸ்பிட்டல்ஸ் எண்டர்பிரைசஸ் லிமிடெட், கூறுகையில்:“வாழ்க்கையின் மிகக் கடினமான பயணங்களில் புற்றுநோயும் ஒன்று. கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக தேனாம்பேட்டை அப்போலோ மருத்துவமனையின் மீது புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களும், அவர்களின் குடும்பங்களும் ஆழமான நம்பிக்கையை கொண்டிருக்கின்றனர். அந்த நம்பிக்கையும், மருத்துவத் துறையில் நாம் காணும் அபரிமிதமான முன்னேற்றங்களும், உயர்தர நவீன மருத்துவத் தொழில்நுட்ப சிகிச்சைகளை மேலும் வழங்கும் வாய்ப்பையும் பொறுப்பையும் எங்களுக்கு வழங்குகின்றன.
உயர்தர சிகிச்சையை வழங்கும் வகையில் புற்றுநோய் சிகிச்சையில் எங்களின் நிபுணத்துவத்தையும், நோயாளிகள் மீதான அக்கறையையும் அடிப்படையாகக் கொண்டு, தற்போது ஒட்டுமொத்த குடும்பத்திற்குமான முழுமையான மருத்துவச் சேவையை வழங்கும் வகையில் எங்கள் சிகிச்சைப் பிரிவுகளை மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் விரிவுபடுத்துகிறோம்.
சமீப ஆண்டுகளில் மருத்துவத் துறை அபரிமிதமாக வளர்ச்சியடைந்துள்ளது. துல்லியமான நோயறிதல், மேம்பட்ட சிகிச்சை முறைகள் மற்றும் சிறந்த சிகிச்சை முடிவுகளைப் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. அதே நேரத்தில், மருத்துவச் சிகிச்சை மேலும் சிறப்புத்துறைகளாகப் பிரிந்து சிக்கலானதாகவும் மாறியுள்ளது.
நோயாளியின் உடல்நிலைக்கு ஏற்ப அவருக்குத் தேவையான முழுமையான சிகிச்சையை வழங்குவதற்காக, பல்வேறு துறை நிபுணர்களை ஒருங்கிணைப்பதே எங்களின் குறிக்கோள். இதன் மூலம் சிக்கலான மருத்துவ சிகிச்சைகளை எதிர்கொள்ளும் போது, நோயாளிகளோ அல்லது அவர்களின் குடும்பத்தினரோ அந்த சிக்கல்களைத் தனியாக எதிர்கொள்ள வேண்டிய நிலை இருக்காது.
புற்றுநோய் சிகிச்சையில் நம்பகமான உயர்தர சிகிச்சையை வழங்கி வரும் எங்கள் மருத்துவமனை, அடுத்த கட்ட விரிவாக்கத்தை நோக்கி நகர்ந்துள்ளது. ஒவ்வொரு குடும்பத்திற்கும் முழுமையான சிகிச்சையை வழங்கும் வகையில் மேம்படுத்தப்பட்ட வசதிகளை உருவாக்குவதே எங்களின் அடுத்த கட்ட முயற்சியாகும்,” என்றார்.
சுனிதா ரெட்டி, நிர்வாக இயக்குநர், அப்போலோ ஹாஸ்பிட்டல்ஸ் எண்டர்பிரைசஸ் லிமிடெட், கூறுகையில்:
“புற்றுநோய் சிகிச்சைக்காக பிரத்யேகமாக இயங்கி வந்த அப்போலோ மருத்துவமனை, அப்போலோ ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக உருவாகியிருப்பது ஒருங்கிணைந்த சிகிச்சை அணுகுமுறையின் பலன்களை மேலும் வலுப்படுத்துகிறது.
நாள்பட்ட மற்றும் தீவிரமான நோய்களால் பாதிக்கப்படும் போது, உடலில் உள்ள பல்வேறு உறுப்புகளுக்கும் சிறப்பு கவனிப்பும் சிகிச்சையும் தேவைப்படலாம். அந்த வகையில், அப்போலோ தேனாம்பேட்டையில் பல்வேறு சிறப்புத் துறைகளை ஒரே மருத்துவமனையின் கீழ் கொண்டு வந்திருப்பதன் மூலம், நோயாளிகளுக்கு ஒருங்கிணைந்த மற்றும் முழுமையான சிகிச்சையை வழங்க முடியும்.
இதன் மூலம் பல்துறை மருத்துவக் குழுக்கள் ஒருங்கிணைந்து செயல்படுவதுடன், நோயாளிகளுக்கான சிகிச்சையை உரிய நேரத்தில் வழங்கவும், சிகிச்சை வழங்கும் செயல்முறையை மேலும் சீராக்கவும் முடியும்,” என்றார்.
ஹர்ஷத் ரெட்டி, இயக்குநர் – செயல்பாடுகள், குரூப் ஆன்காலஜி & இன்டர்நேஷனல், அப்போலோ ஹாஸ்பிட்டல்ஸ் எண்டர்பிரைசஸ் லிமிடெட், கூறுகையில்:“தேனாம்பேட்டை புற்றுநோய் சிகிச்சை மையம் அப்போலோ ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக மாற்றப்பட்டு விரிவுபடுத்தப்பட்டிருப்பது, மருத்துவச் சேவைகளில் எங்களின் விரிவான பங்களிப்பை மேலும் வலுப்படுத்துகிறது.
ஏற்கனவே எங்கள் மருத்துவமனையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு உயர்தர சிகிச்சைகள் வழங்கப்பட்டு வரும் நிலையில், தற்போது இதயவியல், நரம்பியல், இரைப்பைக் குடல் மற்றும் நுரையீரல் மருத்துவம், முதுகெலும்பு மற்றும் எலும்பியல், சிறுநீரகவியல், தீவிர சிகிச்சை மற்றும் பொது மருத்துவம் ஆகிய துறைகளிலும் அந்தந்த துறை நிபுணர்களின் மூலம் உயர்தர சிகிச்சைகள் வழங்கப்படவுள்ளன,” என்றார்.