'தேனிசைத் தென்றல்' தேவா: தலைமுறைகள் கடந்தும் மனதில் ஒலிக்கும் மெட்டுகள்!

Spread the love

சாதாரணப் பின்னணியில் தொடங்கி, தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் தேவாவின் இசைப் பயணம் திரையுலகில் இன்றியமையாத ஒன்று!

தமிழ் சினிமாவில் அவரின் சில பாடல்கள் ஒலிக்கும்போதே, அவற்றின் இசை நம்மை அறியாமலேயே முணுமுணுக்க வைக்கும். காதல், நட்பு, கொண்டாட்டம், கானா எனப் பல உணர்வுகளுக்குத் தனது இசையால் உயிரூட்டியவர்தான் தேனிசைத் தென்றல் தேவா.

400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் இசையமைத்துள்ள அவரது பயணம், தமிழ்த் திரையிசையின் குறிப்பிடத்தக்க அத்தியாயங்களில் ஒன்றாகக் கருதவேண்டும்

மேடை இசையிலிருந்து திரையுலகம் வரை

தேவாவின் இயற்பெயர் தேவநேசன் சொக்கலிங்கம். திரையுலகில் நுழைவதற்கு முன்பு இசைக்குழுக்களுடன் பணியாற்றிய அவர், ஹார்மோனியம், பியானோ உள்ளிட்ட இசைக்கருவிகளைக் கற்றுத் தனது திறமையை வளர்த்துக்கொண்டார்.

ஆரம்பகாலப் போராட்டங்களுக்குப் பிறகு முதன் முதலாக 1989-ல் வெளியான ‘மனசுக்கேத்த மகராசா’ திரைப்படம் அவரது இசைப் பயணத்தில் முக்கிய இடத்தைப் பெற்று தந்தது. தொடர்ந்து வெளியான ‘வைகாசி பொறந்தாச்சு’ திரைப்படம் அவருக்குப் பரவலான கவனத்தைப் ஈர்த்துதந்தது.

தேவா

ரஜினி, கமல் படங்களில் முத்திரை!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் அண்ணாமலை, பாட்ஷா, முத்து போன்ற திரைப்படங்களின் பாடல்கள் தேவாவின் இசைப் பயணத்தில் முக்கியமானவை. குறிப்பாக, பாட்ஷா திரைப்படத்தின் இசையும் பாடல்களும் ரசிகர்களிடம் நீங்காத இடத்தைப் பெற்றுத்தந்தன.

கமல்ஹாசன் நடித்த அவ்வை சண்முகி, பஞ்சத்தந்திரம், பம்மல்.கே.சம்பந்தம் உள்ளிட்ட திரைப்படங்களிலும் தேவாவின் இசை இடம்பெற்றது. வெவ்வேறு கதைகளுக்கும் நடிகர்களுக்கும் ஏற்றவாறு இசையமைத்த அவரது பாணி, அவருக்கெனத் தனித்த அடையாளத்தை தமிழ்த் திரையுலகில் உருவாக்கியது.

அஜித், விஜய்யின் வளர்ச்சிக் காலத்தில்!

அஜித்தின் ஆசை, காதல் கோட்டை, வாலி போன்ற படங்களிலும், விஜய்யின் நினைத்தேன் வந்தாய், பிரியமுடன், குஷி போன்ற படங்களிலும் தேவாவின் பாடல்கள் ரசிகர்களைக் கவர்ந்தன. காதல் மெட்டுகளிலிருந்து துள்ளலான கானா பாடல்கள் வரை, பல்வேறு இசை வடிவங்களில் அவர் தனது திறமையை வெளிப்படுத்தினார்.

இவர் இசைத்த பாடல்களில்!

‘கந்தன் இருக்கும் இடம் கந்த கோட்டம் என் காதலி இருக்கும் இடம் வனத்தோட்டம்…’

‘உதயம் தேட்டருல என் இதயத்த தொலைச்சேன்…’

‘கவலை படாதே சகோதரா…’

போன்ற பாடல்களை GenZ-களும் விரும்பிக் கேட்கக் கூடிய பாடல்களாகவும் இருக்கின்றன.

தேவா
தேவா

விருதுகளும் அங்கீகாரங்களும்!

தேவாவுக்கு தமிழக அரசின் சிறந்த இசையமைப்பாளருக்கான மாநில விருதும், 1992-ல் கலைமாமணி விருதும் கிடைத்தன. கன்னடத் திரைப்படமான அம்ருத வர்ஷிணிக்காக சிறந்த இசையமைப்பாளருக்கான ஃபிலிம்ஃபேர் விருதையும் பெற்றார். இசையுலகில் அவரது பங்களிப்புக்காகப் பல்வேறு அமைப்புகளிடமிருந்தும் பாராட்டுகளைப் பெற்றுள்ளார்.

ஓர் இசையமைப்பாளரின் வெற்றி என்பது அவர் பெற்ற விருதுகளால் மட்டுமல்ல அவரது பாடல்கள் எத்தனை தலைமுறைகளைக் கடந்து மக்களின் நினைவில் வாழ்கின்றன என்பதை பொறுத்து அமையும் . அந்த வகையில், தேவாவின் பாடல்கள் தமிழ் ரசிகர்களின் இசை நினைவுகளில் ஒரு தனி இடத்தைப் பெற்றுள்ளன. காலம் மாறினாலும், மனதில் பதிந்த மெட்டுகள் ஒலித்துக்கொண்டே இருக்கும்!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *