தங்களுடைய தேர்தல் பிரசாரங்களுக்கு நெருக்கடி தருவதாக தவெக தலைவர் விஜய் கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் கூறப்பட்டிருப்பதாவது…
“தமிழகத்தில் நடக்கும் தேர்தல் நேர நாடகம் குறித்து உங்களிடம் பகிர்ந்துகொள்ளவே இக்கடிதம்.
தேர்தல் நேரத்தில் திசை திருப்பல்கள் நடப்பது ஒன்றும் புதிதன்று. இருந்தும் உஷாராக இருக்க வேண்டியது நம் கடமை.
திசைதிருப்பும் முதலீட்டுக் கழகம், பல்வேறு வழிகளில் மக்களைக் குழப்புவதற்கான முயற்சிகளில் ஈடுபடுகிறது.
தந்தை பெரியாரும் பெருந்தலைவர் காமராஜரும் பேரறிஞர் அண்ணாவும் விதைத்த நல்லிணக்கம் பேசும் சமூக நீதி விதைகள் ஆழமாய் வேரூன்றிய மாபெரும் மதச்சார்பற்ற மண் இது.
இத்தகைய நம் தமிழ்நாட்டு மண்ணில் என்றைக்கும் பாசிச சக்திகள் வேரூன்ற மட்டுமன்று, காலூன்றவே இயலாது.
அதோடு பாசிச மனநிலை கொண்ட ‘மக்கள் விரோத’ ஆட்சியாளர்களுக்கு, குறிப்பாகத் தி.மு.க.விற்கு மறுமுறை வாய்ப்பு என்பது எட்டாக்கனி என்பதுதான் தமிழ்நாட்டின் அரை நூற்றாண்டுக்கும் மேலான தேர்தல் வரலாறு.
தேர்தல் ஆணையத்திடம் என்னதான் பொறுப்பு இருந்தாலும், காபந்து அரசான கபட நாடகத் தி.மு.க. அரசு, தன் கையில் வைத்திருக்கும் அதிகாரிகள் சிலரை வைத்து நமக்கு மட்டுமல்லாமல் நம் வேட்பாளர்களுக்கும் பரப்புரை செய்ய நெருக்கடிகளையும் நிர்பந்தங்களையும் நீட்டிக்கவே செய்கின்றது.