தேவாவைக் காப்பாற்ற முடியாமல் போனது ஏன்? 45 நிமிடப் போராட்டம்… மருத்துவர் பகிர்ந்த அதிர்ச்சித் தகவல்! – Kumudam

Spread the love

இதுதொடர்பாக தேவாவிற்கு சிகிச்சை பார்த்த மருத்துவர் ஜோதிர்மயா டாஷ்(Dr. Jyotirmaya Dash) கூறுகையில், “நோயாளி மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டபோது, அவருக்கு நாடித்துடிப்பு இல்லை, ரத்த அழுத்தம் இல்லை, சுவாசமும் இல்லை. உடனடியாக அவருக்கு சுவாசக் குழாய் பொருத்தப்பட்டு, CPR எனப்படும் இதய நுரையீரல் மீட்பு சிகிச்சை தொடங்கப்பட்டது.

மருத்துவர்கள் அனைவரும் இணைந்து ACLS எனப்படும் மேம்பட்ட இதய அவசர சிகிச்சை நடைமுறைகளைப் பின்பற்றினோம். சுமார் 45 நிமிடங்கள் முதல் ஒரு மணி நேரம் வரை தொடர்ந்து CPR சிகிச்சை அளிக்கப்பட்டது.

பொதுவாக, இதயத்தின் மின் செயல்பாட்டில் ஏதேனும் ஒரு ரிதம் இருந்தால், அதற்கேற்ப சிகிச்சையளித்து நோயாளியை மீட்க முயற்சி செய்யலாம். ஆனால், இந்த நோயாளிக்கு இதயத்தின் மின் செயல்பாட்டில் எந்த ரிதமும் காணப்படவில்லை. இருந்தபோதிலும், மருத்துவ நடைமுறைகளின்படி வழங்கக்கூடிய அனைத்து மருந்துகளையும் அளித்து, அவரை மீட்கத் தொடர்ந்து முயற்சி செய்தோம்.

நோயாளியின் வயது, ஏற்கெனவே பைபாஸ் அறுவை சிகிச்சை செய்திருந்தது உள்ளிட்ட காரணிகளும் முக்கியமானவை. அவர் வீட்டிலேயே திடீரென மயங்கி விழுந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. அதன் பின்னர் மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்டபோது, நாடித்துடிப்பும் ரத்த அழுத்தமும் இல்லை.

இதய சிகிச்சைப் பிரிவு மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவு மருத்துவர்கள் இணைந்து, எங்களால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டோம். பல்வேறு சிகிச்சைகள் அளித்தும் அவரை மீண்டும் உயிர்ப்பிக்க முடியவில்லை. அவரை இழந்தது மிகுந்த வருத்தமளிக்கிறது.

மேலும், நோயாளியின் மகள் ஒரு மருத்துவர். அவரிடம் பேசியபோது, வீட்டில் ஆரம்பத்தில் சிறிது நேரம் CPR செய்ய முயற்சி செய்ததாகத் தெரிவித்தார். ஆனால், அதன் பின்னர் நோயாளியை காரில் மருத்துவமனைக்கு அழைத்து வந்தபோது CPR செய்யப்படவில்லை எனக் கூறினார்.

வீட்டிலேயே முறையாகவும் தொடர்ந்து CPR செய்யப்பட்டிருந்தால், அது நோயாளியை மீட்பதற்கான வாய்ப்பை அதிகரித்திருக்கலாம். இருப்பினும், இது ஒரு அனுமானம் மட்டுமே. அந்தச் சூழலில் CPR செய்யப்பட்டிருந்தால் நோயாளி உயிர் பிழைத்திருப்பார் என்று உறுதியாகக் கூற முடியாது.

மருத்துவமனைக்கு நோயாளி கொண்டுவரப்பட்டபோது இருந்த மருத்துவ நிலையைப் பொறுத்தே சிகிச்சை அளிக்க முடியும். அவரை மீட்பதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டபோதிலும், துரதிர்ஷ்டவசமாக எங்களால் அவரைக் காப்பாற்ற முடியவில்லை” என்று மருத்துவர் விளக்கமளித்தார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *