இசையமைப்பாளர் “தேனிசைத் தென்றல்’ தேவா திடீர் உடல்நலக் குறைவு காரணமாக இன்று இயற்கை எய்தினார்.
அவருடைய மறைவுக்குத் திரைத்துறையினர், அரசியல் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
நடிகர் ரஜினிகாந்தும், தேவாவுக்கு இரங்கல் தெரிவித்துக் காணொளி ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.
அதில் அவர், “என் அருமை நண்பர், இசையமைப்பாளர் தேவாவின் திடீர் மறைவு எனக்கு மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. என்னுடைய திரையுலகப் பயணத்தில் ‘அண்ணாமலை’, ‘பாட்ஷா’, ‘அருணாச்சலம்’ ஆகிய மூன்று முக்கியத் திரைப்படங்களுக்கு அவர்தான் இசையமைத்தார்.
அந்த மூன்று திரைப்படங்களுமே பிரம்மாண்டமான வெற்றியைப் பெற்றன. அதன்பிறகு ‘படையப்பா’ திரைப்படத்தை எடுக்கும்போது, எனது நண்பர்கள் அனைவரும் இத்திரைப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மானை இசையமைக்க அழைக்கலாம் என்றார்கள்.
நான் அரைமனதோடு தேவா அவர்களிடம் சென்று, ‘இந்த படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மானிடம் உதவி கேட்கலாம் என நினைக்கிறேன்’ என்று தயங்கியபடியே கூறினேன். உடனே அவர் எவ்வித தயக்கமும் இன்றி எழுந்து நின்று, என் கைகளைப் பிடித்துக்கொண்டு மிகுந்த சந்தோஷத்தோடு, ‘தாராளமாகப் பண்ணுங்கள் சார்!
ஏ.ஆர். ரஹ்மான் மிக நல்ல தம்பி, புதிதாக வந்து சாதித்துக் கொண்டிருக்கிறார். அதைப்பற்றி நீ தவறாக நினைக்கவே கூடாது. எனக்குக் கொடுத்த இந்த மூன்று படங்களே நான் செய்த பெரிய பாக்கியம்’ என்று மனப்பூர்வமாக வாழ்த்தினார். இப்படி ஒரு கள்ளம் கபடம், பொய், வஞ்சகம் இல்லாத ஒரு அருமையான மனிதர்; உண்மையான ‘சொக்கத்தங்கம்’ தேவா.