“கரூரிலிருந்து ஏன் கோவைக்கு வந்தீங்கன்ற கேள்வி உங்ககிட்ட தொடர்ந்து முன்வைக்கப்பட்டது. இப்போ முதலமைச்சரே விளக்கம் கொடுத்துருக்காரே…”
“2021 முதலமைச்சர் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, கொரோனா சமயத்துல எனக்கு சேலத்துல பொறுப்பு கொடுத்திருந்தாங்க. அந்தப் பணிகளை சிறப்பா பார்த்தோம். பிறகு, கோயம்புத்தூர்ல அமைச்சர் இல்லாததால இங்கே இன்சார்ஜா போட்டாங்க. இங்கே வந்து 100 மாநகராட்சி வார்டு, பேரூராட்சி நகராட்சின்னு 150 இடங்கள்ல பொதுமக்களை சந்திச்சு 1 லட்சத்து 41,000 மனுக்கள் வாங்கிருக்கோம். அதைத்தொடர்ந்து, கோவையில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பங்கேற்ற முதலமைச்சர், பல்வேறு நலத்திட்டங்களை கோவைக்கு கொடுத்தாங்க. இப்படி, இங்கே அமைச்சர் இல்லாதனால அந்தப் பொறுப்பை எடுத்துகிட்டு அரசுப் பணிகளை வேகப்படுத்தினோம்.
முதலமைச்சர்கிட்ட கேட்டு, நிறைய நிதிகளைப் பெற்று பல திட்டங்களை கோவைக்கு கொண்டுவந்து செயல்படுத்தியிருக்கோம். கோவையில இருக்கக்கூடிய 10 தொகுதிகள்ல எல்லா பகுதிகளுக்கும் போயிருக்கேன் மக்கள்கூட நல்ல அறிமுகம் இருக்கு. நெருங்கிப் பழகியிருக்கேன். அவங்களோட தேவைகளை முழுவதுமா அறிஞ்சு செயல்படுறோம். ஆனாலும், இந்த முறை வாய்ப்பு கேட்கும்போது, கரூருக்குத்தான் விருப்ப மனு கொடுத்திருந்தேன். ஆனால், எங்கள் தலைவர் கோயமுத்தூர்னு அறிவிச்சிருந்தாங்க. எங்கள் தலைவர் என்ன கட்டளையிடுறாரோ அதைச் செயல்படுத்த வேண்டியது ஒரு தொண்டனாகிய என்னுடைய கடமை. தலைவருடைய கட்டளையை ஏற்று இங்கே தேர்தல் களத்துல பணியாற்றிட்டிருக்கேன்.”
“எந்தவொரு அரசியல்வாதியும் தனக்கு செல்வாக்கு உள்ள தன் சொந்த தொகுதியை விட்டுவிட்டு வேறு ஒரு தொகுதியில் போட்டியிடுவதை விரும்பமாட்டாங்க. ஆனா, நீங்க துணிஞ்சு அந்த முடிவை எடுத்திருக்கீங்க. தலைமை சொன்ன ஒரே காரணமா அல்லது என்னால எங்க நின்னாலும் ஜெயிக்க முடியும்ங்கிற நம்பிக்கையா?”
“நான் திமுக-வுல சேர்ந்த பிறகு, அரவக்குறிச்சியில் இடைத்தேர்தல்ல போட்டியிட்டு வெற்றிபெற்றேன். பிறகு, 2021 பொதுத்தேர்தல்ல கரூருக்கு விருப்ப மனு கொடுத்தேன். அப்போகூட அரவக்குறிச்சி ரொம்ப பாதுகாப்பான தொகுதிதானே… நீங்க ஏன் கரூருக்கு போறீங்கன்னு நிறையபேர் கேட்டாங்க. நான் சொந்த வீட்டை விட்டு வாடகை வீட்டுக்கு போகல. என் தொகுதி, நான்நிக்கிறேன்னு சொன்னேன்.
அதிமுக ஆளுங்கட்சியா இருக்கு. நிறைய செலவுகள் பண்ணுவாங்க. போட்டி கடுமையா இருக்குமேன்னு அவங்களுக்கு ஆச்சர்யமா இருந்துச்சு. ஆனா, என்னைப் பொறுத்தவரைக்கும் அதை போட்டியாவே எடுத்துக்கல. எனக்கு மக்கள் மேல நம்பிக்கை இருக்கு. மக்களும் என் மேல நம்பிக்கை வெச்சிருக்காங்க. நிச்சயமா வாக்களிச்சு வெற்றிபெற வைப்பாங்கன்ற நம்பிக்கையில போட்டியிட்டேன். அதேபோல மக்கள் நல்ல ஒரு வெற்றியை கொடுத்தாங்க.
தொடர்ந்து இந்த 5 வருஷத்துல, நான் முதலமைச்சர்கிட்ட கேட்டு ரூ.5,000 கோடி அளவுக்கான வளர்ச்சி திட்டங்களை கரூர்ல செயல்படுத்தியிருக்கோம். சுதந்திரம் பெற்ற காலம் முதல் செய்யாத அளவுக்கான சாதனை நடந்திருக்கு. அப்படி கோயம்புத்தூருக்கும் நம்மளால செய்ய முடியும்ங்கிற நம்பிக்கை எனக்கு இருக்கு. இந்த 5 வருஷத்துல கோயம்புத்தூர்ல சாலை வசதிகள், தெருவிளக்குகள், பாதாள சாக்கடைகள், குடிநீர் திட்ட பணிகள்னு ரூ.20,000 கோடிக்கும் அதிகமான அடிப்படை கட்டமைப்பு பணிகள் நடந்திருக்கு.
இதைத்தவிர, செம்மொழிப் பூங்கா, பெரியார் அறிவுலகம், ஜிடி நாயுடு மேம்பாலம், மேற்கு புறவழி சாலை, ஹாக்கி மைதானம் என நிறைய சிறப்பு திட்டங்களை கோவைக்கு முதலமைச்சர் கொடுத்திருக்காங்க. ஆகையால, கோவை மக்கள் முதலமைச்சர்மீது பெரும் பற்றும் பாசமும் வெச்சிருக்காங்க. 2021 தேர்தலைப் போல இல்லாம இந்த தேர்தல்ல ஒரு வெற்றியை கொடுப்பாங்க என்ற நம்பிக்கை எனக்கு இருக்கு.”
