தைலாபுரம்: `ராமதாஸிடம் அரசியல் பேச வேண்டாம்!’- அறிவிப்பு பேனருடன் அனுமதிக்கப்படும் பாமக நிர்வாகிகள்

Spread the love

பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணிக்கும் இடையேயான மோதல், கடந்த ஜூன் மாதம் 24-ம் தேதி ராமதாஸ், சரஸ்வதி திருமண நாளில் முடிவுக்கு வந்தது. அன்று குடும்பத்துடன் தைலாபுரம் சென்ற அன்புமணி, ராமதாஸிடம் ஆசி பெற்றார். அப்போது, அன்புமணியை கட்டிப்பிடித்து அழுதார் ராமதாஸ். அதையடுத்து இருவருக்கும் சமாதானம் ஏற்பட்டது.

தொடர்ந்து, ஜூன் மாதம் 27 ஆம் தேதி மருத்துவர் ராமதாஸின் 88-வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. அதில் பேசிய மருத்துவர் ராமதாஸ், `இன்று எனக்கு 88-வது வயது தொடங்குகிறது. இந்த நல்ல நாளில் ஒரு செய்தியை உங்களிடம் சொல்ல விரும்புகிறேன். இன்று முதல் எனக்கு “அரசியல் துறவறம். அரசியல் துறவறம் என்று சொன்னால், நான் இனி அரசியல் பேச மாட்டேன்.

அரசியலுக்கு வழிகாட்ட மாட்டேன். ஆனால் என்னைப் பார்க்க வருபவர்களைப் பார்ப்பேன், நலம் விசாரிப்பேன். அவ்வளவுதான். அரசியலை அன்புமணி பார்த்துக் கொள்வார். நாங்களும் அதற்குத் துணையாக இருப்போம். என்னை வந்து பார்ப்பவர்கள் ‘ஐயா நலமா?’ என்று மட்டும் கேட்டுவிட்டுச் செல்லலாம்.

அன்புமணி, ராமதாஸ்

அன்புமணி, ராமதாஸ்

அரசியலைப் பேசுவதற்கு இனி ஏதுமில்லை, ஏனென்றால் இன்று முதல் நான் ஒரு துறவியாகிவிட்டேன்’ என்று தெரிவித்திருந்தார். அதைத் தொடர்ந்து மருத்துவ சிகிச்சைக்குச் சென்ற ராமதாஸ், முழு ஓய்வில் இருந்தார். தன்னிடம் அரசியல் பேசக்கூடாது என்று அவர் கூறியிருந்ததால், ஜுன் மாதம் முதல் வெறிச்சோடிக் காணப்பட்டது தைலாபுரம்.

இந்த நிலையில்தான் கடந்த செப்டம்பர் 1-ம் தேதி முதல் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்களை மருத்துவர் ராமதாஸ் சந்திப்பார் என்று கூறப்பட்டது. அதன்படி நேற்று முதல் நிர்வாகிகளையும், தொண்டர்களையும் சந்தித்து வருகிறார் மருத்துவர் ராமதாஸ். அவரை சந்திக்கும் தொண்டர்கள், தங்கள் வீட்டு சுபநிகழ்ச்சிகளின் அழைப்பிதழ்களை வழங்குகின்றனர்.

காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை ராமதாஸை சந்திப்பதற்கு நேரம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. அதேபோல, `அரசியல் துறவறம்…மருத்துவர் அய்யா அரசியல் துறவறம் மேற்கொண்ட காரணத்தால், தைலாபுரம் தோட்டத்தில் அவரை சந்திக்க வரும் பார்வையாளர்கள் தயவு செய்து அரசியல் பேச வேண்டாம்’ என்று பேனர் வைக்கப்பட்டிருக்கிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *