இந்த வழக்கில் தமிழ்நாடு அரசு நீதிமன்றத்தில் சரியான வாதங்களையும் அழுத்தத்தையும் முன்வைக்காததால்தான் இத்தகைய தீர்ப்பு வந்தது என்றொரு கருத்து நிலவுகிறது. ஆனால், அது முற்றிலும் தவறான கருத்தாகும். தமிழ்நாடு அரசின் தரப்பில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. வழக்கறிஞர்களும் மிகச் சரியாகவே வாதாடி இருக்கிறார்கள். இருப்பினும், நீதிபதிகளே வழக்கறிஞர்களாக மாறி, சங்கபரிவாரங்களின் விருப்பப்படியும், இதை ஒரு ஈகோ பிரச்சனையாகக் கருதியும், தம் விருப்பப்படியும், தமிழ்நாடு அரசை அச்சுறுத்தும் வகையிலும் தீர்ப்பை வழங்கியுள்ளனர்.
மேலும், கார்த்திகை திருநாள் முடிந்துவிட்ட நிலையில், கார்த்திகை திருநாள் அன்றுதான் தீபம் ஏற்றுவது என்பது நமது மரபாக உள்ளது. ஆனால், அந்த மரபையே சிதைக்கும் விதமாக இந்தத் தீர்ப்பு அமைந்திருக்கிறது.
சர்ச்சைக்குரிய அந்தத் தூண் நில அளவைக் கல்லா அல்லது தீபம் ஏற்றும் தூணா என்பதை முதலில் முடிவு செய்யாமலேயே, அங்கு தீபம் ஏற்ற உத்தரவிட்டது தவறு. அது திட்டமிட்ட சதிச் செயல் என்று கருதுகிறோம். மூல வழக்கையும், முன்னதாகத் தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுவையும் விசாரணைக்கு எடுத்து முடித்த பிறகே தீர்ப்பு வழங்கியிருக்க வேண்டும். அதை விடுத்து, நீதிமன்ற அவமதிப்பு வழக்கை மட்டும் அவசர அவசரமாக விசாரித்துத் தீர்ப்பளித்தது வேண்டுமென்றே செய்யப்பட்டதாகத் தெரிகிறது. இது தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை அவமதிக்கும் செயலாகும்.