நாடாளுமன்ற சிறப்புக் கூட்டம் நடந்துவரும் நிலையில், மகளிர் இட ஒதுக்கீடு மசோதா குறித்தும், தொகுதி மறு சீரமைப்பு குறித்தும் விவாதிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், நடிகையும், பா.ஜ.க நிர்வாகியுமான குஷ்பு ஊட்டியில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது,“எங்களுக்கு இந்தச் சுதந்திரத்தையும், இந்த அதிகாரத்தையும் வழங்கியதற்காக, எங்கள் பிரதமர் மோடிக்கு எனது மனமார்ந்த நன்றிகள். 33 சதவிகித இடஒதுக்கீடு மசோதா என்பது, நம் நாட்டின் ஒவ்வொரு பெண்ணும் நீண்ட காலமாக எதிர்பார்த்துக் காத்திருந்த ஒரு கனவாகும். பெண்களை வலுவூட்டுவதில் பிரதமருக்கு உறுதியான ஈடுபாடு இல்லாவிட்டால், இது சாத்தியமாகியிருக்காது.
அவர் பெண்களின் அதிகாரமளித்தல் குறித்துப் பேசும்போது, நம் நாட்டில் உள்ள ஒவ்வொரு பெண்ணும் கட்டாயம் அதிகாரமளிக்கப்பட வேண்டும் என்று அவர் உண்மையாகவே நம்புகிறார். தொகுதி மறுவரையறை என்பது ஒட்டுமொத்த நாட்டிற்கும் பொருந்தக்கூடிய ஒரு விஷயமாகும். ஆனால், தொகுதி மறுவரையறை என்றால் என்ன என்பதைப் படித்துப் புரிந்துகொள்ளாமலேயே, அதுகுறித்து அவசரப்பட்டுப் புகார் தெரிவிக்கும் ஒரு முதலமைச்சர் தமிழகத்தில் இருப்பது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. எங்கள் முதலமைச்சருக்கு நான் சொல்ல விரும்புவது இதுதான்… தயவுசெய்து தொகுதி மறுவரையறை குறித்த விவரங்களைப் படித்துத் தெரிந்துகொள்ளுங்கள். உங்கள் தோல்விகளிலிருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்ப இதைப் பயன்படுத்த முயற்சிக்காதீர்கள்.” என்றார்.