இதுகுறித்து மூத்த அரசியல் ஆய்வாளர் ஒருவரிடம் பேசினோம். “சட்டப்பேரவைகள் மற்றும் நாடாளுமன்றத்தில் மகளிருக்கு 33 சதவிகித இடஒதுக்கீடு வழங்கும்மசோதா 2023ம் ஆண்டே சட்டமானது. அது 2024 மக்களவை தேர்தலிலேயே அமலாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ‘மக்கள்தொகை கணக்கெடுப்பு செய்து, தொகுதி மறுசீரமைப்பை முடித்தபிறகுதான் அமலாகும்’ என சொல்லிவிட்டது மத்திய அரசு. ஆனால், இப்போது நடக்கவிருக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பு சாதிவாரி கணக் கெடுப்பாக நடக்கவுள்ளது. அது நடந்தால், ஓ.பி.சி. உள்ளிட்ட பெரும்பான்மை சமூகத்தினரின் எண்ணிக்கை அதிகமாக இருப்பது தெரிந்துவிடும். அப்போது, அச்சமூக பெண்களுக்கு அதிக பிரதிநிதித்துவம் தரவேண்டி வரும்.
அதை பா.ஜ.க. விரும்பவில்லை. எனவே, தற்போதைய நிலையிலேயே மகளிர் இடஒதுக்கீட்டையும், தொகுதி மறுசீரமைப்பையும் நிறைவேற்றத் துடிக்கிறார்கள். எனவேதான், புதிய மக்கள்தொகை கணக்கெடுப்புக்குப் பதிலாக, 2011 மக்கள்தொகை எண்ணிக்கை அடிப்படையிலேயே மக்களவையில் தற்போதுள்ள 543 இடங்களை 850 இடங்களாக மாற்றி மகளிருக்கு இடஒதுக்கீடு வழங்கப்போவதாக சொல்லி, மூன்று மசோதாக்களை கடந்த ஏப்ரல் மாத கூட்டத்தொடரில் அறிமுகப்படுத்தியது பா.ஜ.க. ‘மக்கள்தொகை அடிப்படையில் மறுசீரமைப்பு எனும்போது, மக்கள்தொகையை கட்டுப்படுத்தாத உத்தரப்பிரதேசம், பீகார் உள்ளிட்ட மாநிலங்கள் அதிக எம்.பி. தொகுதிகளை பெறும். மக்கள்தொகையை கட்டுப்படுத்திய தமிழகம், கேரளம், தெலங்கானா உள்ளிட்ட தென்மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறையும். இதனால் தென்மாநிலங்களின் ஒரு வாக்குகூட இல்லாமல் 3ல் 2 பங்கு பெரும்பான்மையோடு அரசியலமைப்பை திருத்திவிட முடியும். எனவே விகிதாச்சார அடிப்படையில் நியாயமான முறையில் இதை செய்யவேண்டும்’ என தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட காட்சிகள் மசோதாவுக்கு எதிராக வாக்களித்தன.
3ல் 2 பங்கு எம்.பிக்கள் ஆதரவின்றி மசோதா தோல்வியை தழுவியது. வாக்கெடுப்பில் 528 எம்.பிக்களே பங்கேற்ற நிலையில், பெரும்பான்மைக்கு 352 வாக்குகள் வேண்டும். தே.ஜ.கூட்டணிக்கு 298 வாக்குகள் கிடைத்தது. ஆனால், 293 எம்.பிக்கள் ஆதரவே உள்ள தே.ஜ.கூட்டணிக்கு, வெளியிலிருந்தும் கூடுதலாக 5 வாக்குகள் கிடைத்தது பா.ஜ.க.வுக்கு நம்பிக்கையையே கொடுத்திருந்தது.
இப்படியான சூழலில்தான் மேற்கு வங்கம், தமிழகம் உள்ளிட்ட ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தல்கள் நடந்து முடிந்தன. அரசியல் நிலவரமும் அடியோடு மாறியது. மேற்கு வங்கத்தில் ஆட்சியிலிருந்த மம்தா படுதோல்வி அடைய, பா.ஜ.க. அரியணை ஏறியது. இந்த தேர்தல் தோல்வியால் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்குள் பெரிய பிளவு ஏற்பட்டுள்ளது. அக்கட்சியிலுள்ள 80 எம்.எல்.ஏ.க்களில் சுமார் 60 பேர் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ரிதாபிரதா பின்னால் திரண்டிருக்கிறார்கள். மறுபுறம், 28 மக்களவை எம்.பி.க்களில் 20 பேர் மம்தாவுக்கு எதிராக திரும்பியுள்ளதோடு, தே.ஜ.கூட்டணியை ஆதரிக்கும் முடிவிலும் உள்ளனர். அதேபோல சுகேந்து ராய், சுஷ்மிதா தேவ், பிரகாஷ்சிக் பிரைக் ஆகிய 3 மாநிலங்களவை எம்.பிக்களும் பதவியை ராஜினாமா செய்து, திரிணாமுல் கட்சியைவிட்டு விலகியுள்ளனர். இதையடுத்து பா.ஜ.க. சார்பாக அவர்களே மாநிலங்களவை எம்.பிகளாக இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. கடந்தமுறை பா.ஜ.க. 298 வாக்குகளை ஆதரவாக பெற்றிருந்த நிலையில், திரிணாமுல் எம்.பிக்கள் ஆதரவளித்தால் பலம் 318ஐ தாண்டும்.
மக்களவையில் 3 பதவிகள் காலியாக இருப்பதால் பெரும்பான்மைக்கு 360 எம்.பிக்கள் ஆதரவு போதும். எனவே, மீதமுள்ள எம்.பி.க்கள் ஆதரவை பெறும் முயற்சியில் இறங்கிய பா.ஜ.க.வின் பார்வை தி.மு.க. மீது திரும்பியிருக்கிறது. தேர்தலுக்குப் பிறகு தமிழகத்தில் தி.மு.க காங்கிரஸ் கூட்டணி உடைந்துவிட்டது. இதை பயன்படுத்திக்கொள்ள நினைக்கும் பா.ஜ.க., தி.மு.க.வின் சில செயல் திட்டங்களை மசோதாவில் சேர்ப்பதாக உறுதியளித்து ஆதரவு கோரியிருப்பதாக தெரிகிறது.
இல்லையெனில், தி.மு.க.வை வாக்கெடுப்பில் பங்கெடுக்காமல் செய்துவிட்டாலும், அதுவும் மறைமுக ஆதரவாக இருக்கும் எனவும் கணக்கு போடுகிறது டெல்லி ஸ்டாலின் இதற்கு ஓகே சொல்லிவிட்டால், தி.மு.க.விடம் உள்ள 22 மக்களவை எம்.பிக்கள் மட்டுமின்றி, தி.மு.க.மீது நம்பிக்கை வைத்துள்ள நட்புக் கட்சிகளின் ஆதரவை தேசிய அளவில் பெறமுடியும் என நினைக்கிறது பா.ஜ.க. அதேநேரத்தில் சிவசேனா (உத்தவ் தாக்கரே) கட்சிலுள்ள 9 எம்.பி.களிடமும், இதர சில சொற்ப எம்.பி.க்களை வைத்துள்ள கட்சிகளிடமும், சுயேட்சைகளிடமும் பா.ஜ.க. பேசி வருகிறது.
அதேநேரத்தில், மாநிலங்களவையில் பெரும்பான்மைக்கு 164 எம்.பிக்கள் ஆதரவு தேவை என்ற நிலையில், அந்த பலத்தை நிரூபிக்கவும் பா.ஜ.க. தீவிரமாகியிருக்கிறது. சமீபத்தில் ஆம் ஆத்மி கட்சியிலிருந்து ராகவ் சத்தா மூலம் 7 எம்.பிக்களை பா.ஜ.க. தூக்கியது. திரிணாமுல் காங்கிரஸிலும் கைவைத்துவருகிறது. தவிர, எட்டு மாநிலங்களவை எம்.பிக்கள் வைத்துள்ள தி.மு.க. இங்கும் பா.ஜ.க.வுக்கு தேவை. ஆக, ஜூலை மழைக்கால கூட்டத்தொடருக்குள் தி.மு.க. என்ன முடிவெடுக்கப்போகிறது என்பதில்தான் இந்தியாவின் எதிர்காலம் அடங்கியிருக்கிறது” என்றனர்.
இதுகுறித்து தி.மு.க. செய்தி தொடர்புச் செயலாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் எம்.பி.யிடம் கேட்டோம். ‘தி.மு.க. ஒருபோதும் பா.ஜ.க.வுடன் ஒத்துப்போகாது. நாங்கள் கொள்கைரீதியாக எதையெல்லாம் எதிர்த்தோமோ, அதிலிருந்து பின்வாங்குவது கிடையாது. எனவே, தொகுதி மறுவரையறை, ஒரு நாடு ஒரே தேர்தல் விவகாரத்திலும் எவ்வித சமரசமும் கிடையாது. ‘தி.மு.க. வாக்கெடுப்பை புறக்கணித்து மறைமுக ஆதரவு தரும்’ என்பதெல்லாம் கற்பனை. காங்கிரஸ், பா.ஜ.க. இல்லாத ஒரு ஆட்சியை மத்தியில் இருமுறை உருவாக்கியது தி.மு.க. ஆனால், இப்போதைக்கு அந்த முடிவை நாங்கள் எடுக்கவில்லை” என்றார்.



