நீட் தேர்வு முறைகேடு மற்றும் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய பா.ஜ.க அரசு மக்கள் மன்றத்தில் முற்றிலும் சரணடைந்துள்ளதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் தெரிவித்திருக்கிறார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “நீட் மற்றும் சிபிஎஸ்இ தேர்வு முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர்களும், மாணவர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
இந்தத் தீவிர எதிர்ப்பின் விளைவாக அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இந்த முடிவு முன்னரே எடுக்கப்பட்டிருந்தால், தேர்வு பயத்தினாலும் மன உளைச்சலாலும் தமிழ்நாடு உட்பட பல்வேறு மாநிலங்களில் உயிரிழந்த பல மாணவர்களின் உயிரைக் காப்பாற்றியிருக்க முடியும்.

டெல்லியில் அமைதியான முறையில் போராட்டம் நடத்திய மாணவர்கள் மற்றும் பெண் போராளிகள் மீது காவல்துறை நடத்திய கொடூரமான தாக்குதலுக்கு யார் உத்தரவிட்டது என்பது குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா நாடாளுமன்றத்தில் பதிலளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
மாணவர்களுக்கு எதிராகப் பதியப்பட்ட அனைத்துப் பொய் வழக்குகளையும் உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். இல்லையெனில் நாடாளுமன்றத்தில் இதற்கான வலுவான எதிர்ப்பைப் பதிவு செய்வோம்.
நாடாளுமன்ற விவாதங்களைத் தவிர்த்து வந்த மத்திய அரசு, தற்போது அவசர அவசரமாக மசோதாக்களைக் கொண்டுவரத் துடிக்கிறது. தொகுதி மறுவரையறை (Delimitation Bill) உள்ளிட்ட மசோதாக்கள் குறித்து எதிர்க்கட்சிகள் கூடி ஆலோசித்து அடுத்தகட்ட முடிவை அறிவிக்கும்.
மேலும், மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் சிக்கல்களில் மத்திய அரசு தலையிட்டுத் தீர்வு காண வேண்டுமே தவிர, பல ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தும் எவ்வித தீர்வும் காணாமல் இருப்பது அவர்களின் செயலற்ற தன்மையையே காட்டுகிறது.

இதனிடையே, காங்கிரஸ் கட்சியை அடிமட்ட அளவில் வலுப்படுத்தும் நோக்கில் மாவட்ட காங்கிரஸ் தலைவர்களுக்கான சிறப்புப் பயிற்சி முகாம் தொடங்கப்பட்டுள்ளது. கட்சியின் அகில இந்தியத் தலைவர் மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் பங்கேற்கும் இந்த முகாம் ஆகஸ்ட் 1-ம் தேதி நிறைவடைகிறது.
இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் உரிமைகளுக்காக ராகுல் காந்தியின் தலைமையில் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து களத்தில் நின்று போராடும்” எனத் தெரிவித்திருக்கிறார்.