தொலைந்த நகைகள் 48 நாளில் கிடைக்குமா? பொன்னும் பொருளும் அருளும் இலுப்பூர் பொன்வாசிநாதர் கோயில்! – Kumudam

Spread the love

எம்பெருமான் ஈசனை,பொன்னார் மேனியார் என்கிறார், சுந்தரமூர்த்தி நாயனார். அந்தக் கனக நிறத்துக் கருணாகரப் பெருமான், தன் பெயரிலும் தன் நாயகியான இறைவியின் பெயரிலும் பொன் விளங்கத் திகழும் தலம், இலுப்பூர்.

இத்தலத்தில் சுவாமி பொன்வாசி நாதராகத் திகழ, அம்பாள் சொர்ணாம் பிகையாகத் திகழ்கிறாள். இப்படிப் பிரதான தெய்வங்களின் பெயரில் பொன் இருப்பதால், தங்க நகைத் தொழில் செய்வோரும், புதிதாக அதனை செய்யத் தொடங்குவோரும் தங்களின் தொழில் வளர்ச்சிக்கு இத்தல இறைவனை வேண்டுகிறார்கள்.

மேலும், தங்களின் உடைமையான மதிப்புமிக்க ஆபரணங்கள் தொலைந்து விட்டாலும் திருட்டுபோய் விட்டாலும் மக்கள் இங்கே வந்து இறைவனிடம் தங்கள் மனக்கவலையைச் சொல்லி முறையிடுகிறார்கள். இப்படிப் பிரார்த்தனை செய்த ஒரு மண்டலகாலத்திற்குள் அதாவது 48 நாள்களுக்குள் அவர்களது நகைகள் கிடைத்துவிடுவதாக பலன் பெற்ற பலரும் சொல்கிறார்கள்.

சோழர்கள், பாண்டியர்கள், நாயக்கர்கள் ஆகிய மூன்று மன்னர் மரபுகளின் ஆட்சிக் காலகட்டத்திலும் இக்கோயில் படிப்படியாக வளர்ச்சியடைந்துள்ளது. மூலஸ்தானமாகிய கருவறை, அர்த்த மண்டபம் சோழர் கலைப்பாணியில் உள்ளது. இங்குள்ள கல்வெட்டில் மூலவர் பெயர் தேனேந்திர சோழீஸ்வரமுடைய நாயனார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கி.பி. 10 ஆம் நூற்றாண்டில் இப்பகுதி, சோழ வளநாட்டு உரத்தூர் கூற்றம் என்ற உள்நாட்டுப்பிரிவில் அடங்கியிருந்தது. நிலவளம், நீர்வளம் மிக்க இப்பகுதியில் இலுப்பை மரங்கள் செழித்து அடர்ந்த வனப்பகுதியாக விளங்கியதால் இவ்வூர் காரணப்பெயராக இலுப்பையூர் என அழைக்கப்பட்டது. காலப்போக்கில் மருவி இன்றைக்கு இலுப்பூர் என அழைக்கப்படுகிறது.

பட்டினத்தார் இத்தல ஈசனை வணங்கி,

மாதா உடல் சலித்தாள், நானோ கால் சலித்தேன். வேதாவும் கை சலித்து ஓய்ந்தானே நாதா இலுப்பையூர் வாழ் சிவனே நான் மீண்டும் கருப்பையூர் வாராமற் கா! என்று பாடிப்பரவியுள்ளார்.

பட்டினத்தார் ஞானம் பெற்று இத்தல இறைவனை தரிசனம் செய்ததை நினைவூட்டும் வகையில் கிழக்குச் சுற்றில் அவரது திருவுருவச் சிலை உள்ளது. அருணகிரிநாதர், கொங்கண சித்தர், இடங்கழி நாயனார் ஆகியோரும் இத்தலத்திற்கு வந்து இறைவனை தரிசித்துள்ளனர். காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளான மகாபெரியவர், இத்தலத்தில் இருபத்தொரு நாள்கள் தங்கியிருந்து பூஜை நடத்தியுள்ளார். 

ஸ்ரீ சுருளி ஆண்டவர் சுவாமிகள், ஸ்ரீசுதர்சன சுவாமிகள் ஆகியோரும் இத்தலத்தில் சிலகாலம் தங்கியிருந்து வழிபட்டுள்ளனர். தரம்தூக்கி பிடாரி அம்மன் கோயில் மற்றும் இருந்திராப்பட்டி முத்துமாரியம்மன் கோயில் பிரமோற்சவத்தின்போது முதல் பூத்தட்டுக் கூடை பொன்வாசிநாதர் கோயிலில் இருந்து எடுத்துச் செல்லும் நடைமுறை நீண்ட காலமாக இருந்து வருகிறது.

வில்வமும், மகிழமரமும் இத்தலவிருட்சங்களாகும். கோயிலின் எதிரே ஒரே கல்லால் ஆன எழிலான கொடிக்கம்பமும், 16 கால்மண்டபமும் உள்ளன. நாலாபுறமும் உயர்ந்த திருமதில் சூழ கிழக்குப் பார்த்த வண்ணம் கோயில் அமைந்துள்ளது. நுழைவாயிலில் மூன்று நிலை ராஜகோபுரம் காணப்படுகிறது. கோயிலின் உள்ளே நுழைந்ததும் செப்புக்கவசம் போத்திய கொடிமரம், பலிபீடம், ருத்ராட்சப் பந்தலின் கீழ் நந்திதேவர் பீடம் உள்ளன.

இதன் வடபுறம் நாயக்கர் கால கலைப்படைப்பான திருவாதிரை மண்டபம் எழிலாக உள்ளது. மார்கழி மாதம் 10 நாட்கள் நடைபெறும் திருவாதிரை விழா இந்த மண்டபத்தில் வைத்து நடத்தப்படுகிறது. கொடிமர மண்டபத்தூண்களில் தமிழர்களின் சிற்பக்கலைத்திறனை எடுத்துக்காட்டும் அதியற்புதமான, பிரமாண்ட கற்சிற்பங்கள் உள்ளன.

மகாமண்டப வாசலில் விநாயகர், தண்டாயுதபாணி விக்ரகங்கள் உள்ளன. வடபுறம் சொர்ணாம்பிகை அம்பாள் சன்னதி உள்ளது. நம்பிக்கையோடு தன்னை நாடிவரும் அடியவர்களின் வேண்டுதல்களை உடனுக்குடன் நிறைவேற்றித்தரும் கருணாம்பிகையாக அருள்பாலிக்கிறாள், சொர்ணாம்பிகை அம்மன். மேலிரு கரங்களில் தாமரை மலர் தாங்கி, கீழ் இரு கரங்களால் அபய, வரத முத்திரை காட்டியவண்ணம் தரிசனமளிக்கிறாள். மகா மண்டப தென் சுவரில் கல் சாளரம் உள்ளது. அர்த்த மண்டப வாசலில் அனுக்ஞை விநாயகர், சோழர்கால துவார பாலகர்கள் உள்ளனர்.

கருவறை மூலவராக பொன்வாசி நாதர் லிங்கத் திருமேனியராக, சாந்தியமிக்க தெய்வமாக அருள்பாலிக்கிறார். சூரியன் தன் பொற்கிரணங்களால் உத்தராயண காலத்தில் மூலவரின் இடப்பக்கமும், தட்சிணாயன காலத்தில் வலப்புறமும் தீண்டித் தொழுதுநிற்கும் காட்சி பரவசமூட்டக் கூடியது. தேவ கோட்டத்தில் தட்சிணா மூர்த்தி, லிங்கோத்பவர், பிரமன், பிட்சாடனர், துர்க்கை சன்னதிகள் உள்ளன. மூலவர் விமானம் வேசர வடிவில் உள்ளது.

பிரதோஷம், அஷ்டமி வழிபாடு ஆகியவை நடைபெறுகின்றன. நித்ய பூஜை மற்றும் விழா செலவினங்களுக்கு சடையவர்மன் குலசேகர பாண்டியன் (கி.பி.1190) முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் (கி.பி.1216) ஆகியோர் ஆட்சிக் காலத்தில் ஏராளமான தானங்கள்; அளிக்கப்பட்டதாகத் தெரியவருகிறது. முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியனின் மெய்க்கீர்த்தி கல்வெட்டு, சுவாமி சன்னதி மகாமண்டப தென் சுவரில் காணப்படுகிறது.

உள் சுற்று முழுவதும் திருமாளிகை அமைப்பில் மண்டபமாக உள்ளது. நால்வர் சன்னதி, கன்னி மூலை கணபதி, காசி விஸ்வநாதர், விசாலாட்சி, வள்ளி-தெய்வானை சமேத சுப்பிரமணியர், கஜலட்சுமி, நவகிரகம், காலபைரவர் ஆகிய பரிவார தேவதை சன்னதிகளும் தீர்த்தக் கிணறும் உள்ளன. தினமும் நான்கு கால பூஜைகள் நடைபெறுகின்றன. சித்திரை மாதம் பெருந்திருவிழாவான பிரமோற்சவம் நடைபெறும்.

ஏழாம் திருநாளில் திருக்கல்யாணம், ஒன்பதாம் திருநாளில் தேரோட்டம், பத்தாம் திருநாளில் தீர்த்தவாரியும் நடைபெறும் பத்து நாள்களிலும் காலை மாலை பஞ்ச மூர்த்திகள் திருவீதி உலா நடைபெறும். திருமணத் தடை நீங்கவும். குழந்தை பாக்கியம் வேண்டியும் வரும் பக்தர்கள் பள்ளியறை பூஜையில் கலந்துகொண்டு வணங்கிச் செல்கின்றனர்.

குருபகவான் இத்தல ஈசனை வழிபட்டு பொன்னன் என்ற பெயரைப் பெற்றார். பொன், குருபகவானுக்கு உரிய உலோகம். இங்குவந்து சுவாமி அம்பாளை நம்பிக்கையோடு வணங்குபவர்களுக்கு பொன்னும் பொருளும் விருத்தியாகும். குறிப்பாக, அட்சய திருதியை நன்னாளிலும் தீபாவளியை அடுத்து வரும் குபேரபூஜை தினத்திலும் இங்கு வந்து தரிசிப்பது எல்லா நற்பலன்களையும் தரவல்லது.

வைகாசி விசாகம், ஆண்டுக்கு ஆறுகால தில்லைக்கூத்தர் அபிஷேகம், ஆடி முதல் வெள்ளியன்று திருவிளக்கு வழிபாடு, விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி கொலு, ஐப்பசி அன்னாபிஷேகம், கந்தசஷ்டி, கார்த்திகை முதல் மற்றும் கடைசி சோமவாரத்தில் 108 சங்காபிஷேகம், கார்த்திகை மகாதீபம், மார்கழி முழுக்க திருப்பள்ளியெழுச்சி யாவும் சிறப்புற நடக்கின்றன.

சுற்றுவட்டார முருக பக்தர்கள் இங்கு வழிபட்டபிறகு காவடியாட்டத்துடன் பழனிக்கு பாதயாத்திரை கிளம்பிச்செல்வது வழக்கம். மாசி மகம், மகாசிவராத்திரி, பங்குனி உத்திரம் ஆகிய விழாக்கள் நடைபெறுகின்றன.

ஜாதகரீதியாக குருபலம் இல்லாதவர்கள் தங்கள் ஜாதகத்தை சுவாமி அம்பாள், தட்சிணா மூர்த்தி ஆகிய சன்னதிகளில் வைத்து வணங்கிட, குருபலம் கிட்டுவதாக நம்பிக்கை. பொன்பொருள் சேரவும், குருவின் அனுகிரஹம் கிடைக்கவும் இத்தலம் வந்து வழிபடும் பக்தர்கள் ஏராளம். விரைவில் மகாகும்பாபிஷேகம் காண இருக்கும் இத்தலத்துக்கு நீங்களும் இயன்றபோது சென்று தரிசித்து வாருங்களேன். 

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *