சேலம் மாவட்டம் வீரபாண்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திம்மம்பட்டியில் த.வெ.க அலுவலக திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடந்திருக்கிறது. சிறப்பு விருந்தினராக வீரபாண்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ( த.வெ.க) பழனிவேல் பங்கேற்றிருக்கிறார். கட்சி அலுவலக திறப்பு விழாவில் நலத்திட்ட உதவிகளை வழங்குகிறோம் என்கிற பெயரில் குரால் நத்தம் அரசு தொடக்கப் பள்ளியில் இருந்து 50 மாணவர்களை விடுமுறை நாளில் சீருடையில் வரவழைத்ததுடன் மணிக்கணக்கில் காத்துக்கிடக்கச் செய்திருக்கிறார்கள்.

இந்த அத்துமீறல் குறித்து நம்மிடம் பேசிய தி.மு.க- வைச் சேர்ந்த வழக்கறிஞர் தமிழரன், “அரசு நிகழ்ச்சிகளுக்கு பள்ளி மாணவர்களை அழைத்துச் செல்வதற்கே பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளன. ஆளுங்கட்சி எம்.எல்.ஏ வருகிறார் என்கிற ஒரே காரணத்திற்காக அரசுப்பள்ளி மாணவர்களை அழைத்துச் சென்றிருக்கிறார்கள்.
விடுமுறை நாளில் சீருடையில் அழைத்துச் சென்று சுமார் 2 மணி நேரம் வரை குழந்தைகளை காத்திருக்க வைத்திருக்கிறார்கள். விதிமீறலில் ஈடுபட்ட குரால் நத்தம் அரசு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் தெய்வநாயகம் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.