சேலம்: `ஓட்டுக்கு ரூ.2000 கொடுத்தார் தவெக MLA லட்சுமணன்' – தவெக அதியமான் கொளுத்திப் போட்ட பின்னணி?

Spread the love

சேலம் மாவட்டம் ஓமலூர் சட்டமன்ற தொகுதியின் த.வெ.க வேட்பாளராக போட்டியிட்டவர் அதியமான். அ.தி.மு.க வேட்பாளர் மணியிடம் 14,539 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியிருந்தார். நம்பி வாக்களித்த மக்களுக்கும், உழைத்த கட்சி நிர்வாகிகளுக்கும் நன்றி தெரிவிப்பதில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்.

தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாமல் பேசி வரும் அதியமான், தோல்விக்கான காரணங்கள் என குறிப்பிட்ட சில விவகாரங்களை பட்டியல் போட்டு நிர்வாகிகளிடம் பேசி வருகிறார். அதில் முக்கியமான ஒன்றாக, `சேலம் மேற்கு தொகுதியில் த.வெ.க வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கும் எம்.எல்.ஏ லட்சுமணன் ஓட்டுக்கு 2 ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்ததால் மற்ற தொகுதிகளில் பின்னடைவு ஏற்பட்டு தான் தோற்றதாக’ கூறி வருகிறார்.

அதியமான்

ஓமலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தீவட்டிப்பட்டியில் கட்சி நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் பேசிய அதியமான், “ஓமலூர் தொகுதிக்கு அருகில் உள்ள சேலம் மேற்கு தொகுதியில் நம்முடைய வேட்பாளர் லட்சுமணன் ஓட்டுக்கு 2 ஆயிரம் ரூபாய் பணத்தை வழங்கி வெற்றிப் பெற்றிருக்கிறார். ஆனால், பக்கத்து தொகுதியில் எதுவும் நாம் தரவில்லை. இதனால், மக்கள் நம் மீது அதிருப்தி அடைந்தனர். மாதக்கணக்கில் மக்களிடம் சென்று சேர்த்த பிரசாரம் அனைத்தும் இவர் கொடுத்த பணத்தால் வீணானது. 6 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வாக்குகள் நமக்கு வராமல் போனது. இதன் காரணமாகவே தோல்வி ஏற்பட்டது” என கொளுத்திப் போட்டிருக்கிறார்.

இந்த விவகாரம் சோஷியல் மீடியாக்களில் தீயாய் பரவி வருகிறது.

ஓட்டுக்கு பணம் கொடுக்கும் முறையை ஒழித்து ஆட்சிக்கு வந்திருப்பதாக முதலமைச்சர் ஜோசப் விஜய் கூறி வரும் நிலையில், ஓட்டுக்கு 2 ஆயிரம் ரூபாய் கொடுத்து தான் சேலம் மேற்கு தொகுதியில் லட்சுமணன் வெற்றிபெற்றார் என அக்கட்சியின் வேட்பாளராக இருந்தவரே பேசியிருப்பது புயலைக் கிளப்பியிருக்கிறது.

எம்.எல்.ஏ லட்சுமணன்

இந்த பின்னணி குறித்து நம்மிடம் பேசிய த.வெ.க நிர்வாகி ஒருவர், ” அதியமான் பேசியிருப்பது உண்மை தான். வீராபாண்டியாரின் வலது கையாக இருந்து, ஜெயலலிதாவால் கைதுக்கு உள்ளானவர் லட்சுமணன். இன்ஸ்பெக்டராக இருந்த காலம் முதல் தற்போது வரை மக்களிடம் நல்ல பெயர் பெரிதாக கிடையாது. அ.தி.மு.க- வில் சீட் கேட்டார். ஆனால், அவர் கேட்ட இந்த தொகுதி கிடைக்கவில்லை. உடனே எங்கள் கட்சியில் சேர்ந்து சேலம் மேற்கு தொகுதியில் போட்டியிட்டார். மற்ற கட்சிகளில் கூட 50, 60 சதவிகிதம் தான் வாக்காளர்களுக்கு பணம் வழங்கப்பட்டது. ஆனால், இவரோ ஒரு ஓட்டு கூட மிஸ் ஆகாமல் 100 சதவிகித வாக்காளர்கள் என்ற கணக்கில் பட்டுவாடாவிற்கு ஏற்பாடு செய்திருந்தார்.

சேலம் மேற்கு தொகுதியில் இவர் ஓட்டுக்கு பணம் வழங்கியது சுற்றியுள்ள தொகுதிகளில் சலசலப்பை ஏற்படுத்தியது. லட்சுமணனுக்கு மட்டும் தலைமையில் இருந்து பணம் வந்திருப்பதாக அதியமானே நினைத்துக் கொண்டிருந்த நிலையில் தான், ‘ஓட்டுக்கு பணம் கொடுக்க வேண்டாம்’ என தலைமையில் இருந்து லட்சுமணனுக்கு எச்சரிக்கை வந்தது.

அதையும் தாண்டி தான் பட்டுவாடா நடந்தது. கடுமையாக உழைத்தும் அதியமானால் வெற்றிபெற முடியவில்லை. ஆட்சி, அதிகாரம், அமைச்சர் பதவி என த.வெ.க பக்கம் வந்திருப்பதால், தன்னுடைய தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாமல் பேசி வருகிறார்.

கட்சிக்குள் சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் பேச வேண்டாம் என தலைமையில் இருந்து அதியமானுக்கு கண்டிப்பு வந்திருக்கிறது. அமைச்சர் பதவி கிடைக்கவில்லை என கடுப்பில் இருக்கும் லட்சுமணன் இந்த பேச்சால் அதியமான் மீது செம கடுப்பில் இருக்கிறார்” என்றார்.

அதியமான்

இது குறித்து விளக்கம் அளித்திருக்கும் அதியமான், ” கடந்த மே 31 அன்று நடைபெற்ற கட்சியின் உள்ளக ஆலோசனைக் கூட்டத்தில் நான் பேசிய ஒரு பகுதி இது. என்னுடைய பேச்சை திட்டமிட்டே எடிட் செய்து சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டுள்ளது. நான் எந்தவொரு குறிப்பிட்ட வேட்பாளரையோ அல்லது உறுப்பினரையோ பகிரங்கமாக குற்றம் சாட்டிப் பேசவில்லை. பக்கத்து தொகுதியான சேலம் மேற்கில் மற்ற கட்சியைச் சேர்ந்தவர்கள் பணம் கொடுத்ததன் தாக்கம் ஓமலூர் தொகுதியிலும் எதிரொலித்ததே தனது தோல்விக்குக் காரணம் என்றுதான் சுட்டிக் காட்டினேன்” என கூறியிருக்கிறார்.

அதியமான் சார்பாக நம்மிடம் பேசிய அவரின் நண்பர் மணி, ” அவர் வேறு எதோ ஆதங்கத்தில் வருத்தத்தில் பேசினார். ஆனால், அதைத் திரித்து இப்படி கொண்டு வந்து விட்டுவிட்டார்கள். த.வெ.க காரர்கள் எப்போது என்ன பேசுவார்கள். எந்த சிக்கலில் சிக்க வைக்கலாம் என எல்லோரும் காத்துக் கிடக்கிறார்கள். எந்த வார்த்தை பேசினாலும் தப்பாக முடிகிறது. பயமாக இருக்கிறது” என்றார்.

லட்சுமணன்

இந்த குற்றச்சாட்டு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது பதில் ஏதும் சொல்லாமல் காரில் ஏறிச் சென்றதுடன், செய்தியாளர்களை லட்சுமணனின் உதவியாளர்கள் தள்ளிவிட்டதும் சர்ச்சையானது.

இந்த விவகாரம் தொடர்பாக த‌.வெ.க எம்.எல்.ஏ லட்சுமணனை எல்லா வழிகளிலும் தொடர்புகொள்ள முயற்சித்தோம்‌. நிராகரித்து விட்டார். அவர் விளக்கம் தரும் பட்சத்தில் அதனையும் உரிய பரிசீலனைக்குப் பின்னர் பதிவிட தயாராக இருக்கிறோம்.!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *