`நகைக்கடைகள் மட்டுமல்ல, நடைபாதையும் தங்கம்தான்…' துபாயின் அடுத்த பிரமாண்ட திட்டம்!

Spread the love

சுற்றுலாப் பயணிகளைக் கவரப் புதிய திட்டம்; இந்த ஆண்டின் இறுதிக்குள் திறக்க ஏற்பாடு!

தங்க நகைகள், பிரமாண்டக் கட்டடங்கள் என உலகையே வியக்கவைக்கும் துபாய், இப்போது மற்றொரு வித்தியாசமான திட்டத்துடன் கவனம் ஈர்த்துள்ளது. அங்குள்ள தங்க வர்த்தகப் பகுதியில் 24 கேரட் தங்கத்தால் நடைபாதை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

துபாய் தங்க மாவட்டத்தின் மூத்த வணிக இயக்குநர் ரஷித் அல் ஹர்மூதி தெரிவித்த தகவலின்படி, இந்த நடைபாதை 2026-ஆம் ஆண்டின் இறுதிக்குள் திறக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. உலகின் முதல் மற்றும் மிக நீளமான தங்க நடைபாதையாக இதை உருவாக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலாவுக்கு ஒரு புதிய அனுபவம்!

இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம், துபாய்க்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு வித்தியாசமான அனுபவத்தை வழங்குவதும், உலகளாவிய தங்கம் மற்றும் நகை வர்த்தக மையமாக அதன் அடையாளத்தை வலுப்படுத்துவதுமாகும்.

தங்க நடைபாதையுடன், தங்கம் மற்றும் நகை வர்த்தகத்திற்கான பெரிய கண்காட்சியையும் உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

துபாய் தங்க மாவட்டத்தில் 2026-ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து புதிதாகச் செயல்படத் தொடங்கிய மொத்த தங்க வர்த்தக அலுவலகங்களின் எண்ணிக்கை 20 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும், தங்கநகைகள் மற்றும் விலைமதிப்புள்ள கற்கள் விற்பனை செய்யும் புதிய கடைகளின் எண்ணிக்கை 15 சதவீதம் உயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உண்மையிலேயே தங்கத்தால் ஆன பாதையா?

இந்த நடைபாதையின் முழுமையான வடிவமைப்பு, கட்டுமானச் செலவு, பயன்படுத்தப்படும் தங்கத்தின் அளவு போன்ற விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை. எனவே, நடைபாதை முழுவதும் திடமான தங்கத்தால் அமைக்கப்படும் என்று இப்போதே முடிவுசெய்ய முடியாது.

திட்டம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதன் இறுதி வடிவத்தையும் திறப்பு நாளையும் சுற்றுலாத் துறை உலகமே எதிர்பார்த்துக் காத்திருக்கிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *