மடிப்புப் பகுதியில் கோளாறா? புகார்கள் எதிரொலி… பாதிக்கப்பட்ட போன்களை மாற்றித் தரும் Apple!
ரூ.3 லட்சத்துக்கும் மேல் கொடுத்து வாங்கிய புதிய போன். பயன்படுத்தத் தொடங்கிய சில நாள்களிலேயே திரையில் விரிசல் ஏற்பட்டால் எப்படி இருக்கும்? அதுவும் Apple நிறுவனத்தின் முதல் மடிக்கக்கூடிய iPhone என்றால், எதிர்பார்ப்புடன் வாங்கியவர்களுக்கு அது அதிர்ச்சியாகத்தானே இருக்கும்!
Apple-ன் முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனான iPhone Duo-வை வாங்கிய சில பயனர்கள் திரை சேதம் குறித்துப் புகார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, பாதிக்கப்பட்ட சாதனங்களை மாற்றித் தருவதாக Apple தெரிவித்துள்ளது.
என்ன பிரச்னை?
iPhone Duo இந்தியாவில் அக்டோபர் 23-ம் தேதி விற்பனைக்கு வந்தது. ஆனால், விற்பனை தொடங்கிய சில நாள்களிலேயே சமூக வலைதளங்களில் புகார்கள் வெளியாகத் தொடங்கின.
சில பயனர்கள் போனின் உள்புறத் திரையில் மடிப்புப் பகுதியை ஒட்டி விரிசல்களும் பிரகாசமான கோடுகளும் தோன்றியதாகப் புகைப்படங்களுடன் பதிவிட்டுள்ளனர். மேலும், போனைத் திறக்கும்போதும் மடிக்கும்போதும் வித்தியாசமான சத்தம் கேட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் மட்டுமல்ல… வெளிநாடுகளிலும் புகார்!
iPhone Duo-வின் திரை விரிசல் பிரச்னை இந்தியாவில் மட்டுமல்லாமல், அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளிலும் பதிவாகியுள்ளது. சில பயனர்கள் போனை வாங்கிய சில மணி நேரங்களிலேயே திரையில் விரிசல் ஏற்பட்டதாகப் புகார் தெரிவித்துள்ளனர். இருப்பினும், உலகம் முழுவதும் எத்தனை சாதனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன என்ற அதிகாரப்பூர்வ எண்ணிக்கையை Apple வெளியிடவில்லை.
Hinge-தான் காரணமா?
போனின் மைய மடிப்புப் பகுதியில் சேதம் ஏற்பட்டிருப்பதால், அதன் hinge எனப்படும் மடிப்பு இணைப்பின் வடிவமைப்பு குறித்த கேள்விகள் எழுந்துள்ளன.
சாதனங்களைப் பிரித்து ஆய்வு செய்யும் iFixit நிறுவனம், hinge அமைப்பில் உள்ள சில பாகங்கள் சந்திக்கும் இடத்தில் அழுத்தம் உருவாகியிருக்கலாம் எனச் சாத்தியமான காரணத்தை முன்வைத்துள்ளது. ஆனால், இதுவே திரை விரிசலுக்கான காரணம் என்று Apple இன்னும் உறுதிப்படுத்தவில்லை.