திரைப்படங்களில் பிரதான கதாபாத்திரங்களில் நடிக்கும் நமது சங்க உறுப்பினர்கள் இனி தயாரிப்பு நிறுவனங்களோடு ஒப்பந்தம் செய்துகொள்வதைக் கட்டாயமாக்கும் தீர்மானத்திற்கு பேரவையில் ஒப்புதல் பெறப்பட்டுத் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது. தயாரிப்பு நிறுவனங்களோடு ஊதியம் சார்ந்த மற்றும் பிற புகார்களை நமது சங்கத்தில் வழங்கும்போது பிரதான கதாபாத்திரங்களில் நடிப்பவர்கள் உரிய ஒப்பந்த நகலையும் இணைத்து வழங்கினால் மட்டுமே (இது இனி முற்றிலும் புதிதாகப் பங்கெடுக்கும் படப்பிடிப்புகளுக்கு மட்டுமே பொருந்தும்) அந்தப் புகார் குறித்த நடவடிக்கை எடுக்கப்படும் என்ற தீர்மானத்திற்கு பேரவையில் ஒப்புதல் பெறப்பட்டுத் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது. திரைப்படப் படப்பிடிப்புகளில் காட்சிப்படுத்தும் பின்னணி மற்றும் கூட்டத்தில் பொதுமக்களாகப் பணியாற்றும் தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு, படப்பிடிப்பு நடந்த ஒரு வார காலத்திற்குள் திரைப்படத் தயாரிப்பு நிறுவனம் உரிய ஊதியம் வழங்க வேண்டும்.
அவ்வாறு ஊதியம் வழங்கத் தவறினால், ஊதியம் வழங்கப்படும் வரையில் தொடர்புடைய தயாரிப்பு நிறுவனத்துடன் நமது சங்க உறுப்பினர்கள் வேலை ஒத்துழைப்பு அளிக்காமல் தவிர்க்கும் தீர்மானத்திற்கு பேரவையில் ஒப்புதல் பெறப்பட்டுத் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.
சமூக வலைத்தள ஊடகங்களில் பார்வையாளர்களைக் கவர்ந்திழுக்கும் நோக்கத்துடன் பிரபலமான நடிகர் / நடிகையர்களைக் குறித்து அவதூறாக, ஆபாசமாக, சர்ச்சைக்குரிய வகையில் விமர்சனங்களை முன்வைத்தும், முகாந்திரமற்ற தங்களது கற்பனைக் கருத்துகளை முன்வைத்து பரப்புபவர்கள், நமது சங்க உறுப்பினர்களாக இருந்தாலும் கூட, அவர்கள் மீது நமது சங்கம் மூலமாக காவல்துறையில் புகார் அளித்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்குச் சட்டப்பூர்வமாகக் கடுமையான தண்டனை பெற்றுத் தருவதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்க சங்க நிர்வாகத்திற்கு அதிகாரம் வழங்கும் பேரவையின் ஒப்புதல் பெறப்பட்டுத் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.” எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.