வேலூர் மாவட்டத்தில் `ஒரு ஊராட்சிக்கு 1,000 பனை விதைகளை நடுவது’ என்ற இலக்குடன் மொத்தமுள்ள 247 ஊராட்சிகளிலும் 2.5 லட்சம் பனைகளை விதைக்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்திருக்கிறது. இதற்காக, நீர்வளத்துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறையின் கட்டுப்பாட்டிலுள்ள ஏரிகளின் கரையோரம், மேய்க்கால் நிலங்கள் தேர்வுச் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, குப்பம் ஊராட்சிக்குஉட்பட்ட பழவேரி கிராமத்தில் பனை விதைகளை நடும் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்துள்ளார் மாவட்ட ஆட்சியர் லீலா அலெக்ஸ்.

அப்போது, `அக்டோபர் 2-ம் தேதிக்குள் ஊராட்சிகளில் 1,000 பனை விதைகளை நடும் இலக்கை முடித்துவிட வேண்டும்’ எனவும் அலுவலர்களிடம் ஆட்சியர் அறிவுறுத்தினார். இந்த நிகழ்ச்சியில், சத்துவாச்சாரியைச் சேர்ந்த பசுமை ஆர்வலரான இளைஞர் தினேஷ் சரவணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். பனை விதைகளை சேகரித்து மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து நடும் பணியில் முக்கிய பங்காற்றி வருகிறார் தினேஷ் சரவணன்.