பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ரஜபுத்திடம் மேலாளராக இருந்த திஷா சாலியன் கடந்த 2020ம் ஆண்டு ஜூன் 8ம் தேதி மும்பை மலாடு பகுதியில் உள்ள அடுக்கு மாடி கட்டிடத்தின் 14வது மாடியிலிருந்து விழுந்து இறந்து போனார்.
இது தொடர்பாக போலீஸார் நடத்திய விசாரணைக்குப் பிறகு, திஷா சாலியனின் மரணம் தற்கொலை என்று தெரிவித்தனர். இருப்பினும், தனது மகள் கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாகக் குற்றம் சாட்டி, அவரது தந்தை கடந்த ஆண்டு உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இவ்வழக்கு தொடர்பான முந்தைய விசாரணையின்போது, குடும்பத்தினர் கொலைக் குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்த போதிலும், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படாமல் தற்செயலான மரணம் குறித்த அறிக்கை மட்டுமே பதிவு செய்யப்பட்டது குறித்து நீதிபதிகள் பாரதி டங்ரே மற்றும் மஞ்சுஷா தேஷ்பாண்டே ஆகியோர் அடங்கிய அமர்வு அதிருப்தி தெரிவித்திருந்தது.

திஷா சாலியன் இறந்து ஐந்து ஆண்டுகள் ஆகியும், அவரது குடும்பத்தினருக்கு உடற்கூறாய்வு அறிக்கை நகல்கள் வழங்கப்படவில்லை என்றும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.
இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இதில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், இவ்வழக்கு விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்றும்படி கூறி உத்தரவிட்டது.
சி.பி.ஐ முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து முழுமையாக விசாரிக்கும்படி நீதிபதிகள் கேட்டுக்கொண்டனர்.
மேலும் எந்தவொரு நபர் மீதும் போதுமான ஆதாரங்களை விசாரணை அதிகாரி கண்டறியும் வரை, யாரையும் குற்றவாளியாகக் கருதக்கூடாது என்று நீதிபதிகள் சாரங் கோட்வால் மற்றும் ரஞ்சித்சிங் ராஜா போன்ஸ்லே ஆகியோர் அடங்கிய அமர்வு கூறியது.
மும்பை மால்வானி போலீஸார் இந்த வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். திஷா சாலியன் மரணத்திற்குப் பிறகு சுஷாந்த் சிங் ரஜபுத்தும் தனது மும்பை வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து திஷா சாலியனின் தந்தை சதீஷ் சாலியன் சார்பாக கோர்ட்டில் ஆஜரான வழக்கறிஞர் நிலேஷ் கூறுகையில், “திஷா சாலியனின் தந்தை சதீஷ் சாலியனின் வாக்குமூலத்தைப் பதிவு செய்யவும், முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்யவும், விசாரணையை மேற்கொள்ள ஒரு மூத்த அதிகாரியை நியமிக்கவும், மேலும் மல்வானி காவல் நிலையத்திலுள்ள அனைத்து ஆவணங்களையும் சிபிஐ-யிடம் ஒப்படைக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், யாருக்காவது எதிராக ஆதாரம் கிடைத்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
ஆதாரம் இல்லாத பட்சத்தில் யாரும் குற்றவாளியாகச் சேர்க்கப்படமாட்டார்கள். அதேவேளையில், சிபிஐ எதிர்மறையான அறிக்கையைச் சமர்ப்பித்தால், அதற்கு ஆட்சேபனை தெரிவிக்கவும், எதிர்ப்பு மனுவைத் தாக்கல் செய்யவும் எங்களுக்கு உரிமை உண்டு. நீதிமன்றம் தனது உத்தரவில் இதைத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது”என்று தெரிவித்தார்.
முன்னதாக வழக்கறிஞர் நிலேஷ் அளித்திருந்த பேட்டியில், ”இக்கொலையில் செல்வாக்கு மிக்கவர்களும், சில மூத்த காவல் அதிகாரிகளும் சம்பந்தப்பட்டிருந்தனர். நாங்கள் அதற்கான ஆதாரங்களைச் சமர்ப்பித்திருந்தோம். உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்கள், உள்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதல்கள் மற்றும் அரசியலமைப்பு அமர்வின் உத்தரவுகள் ஆகியவை முதல் தகவல் அறிக்கையில் பதிவு செய்வது கட்டாயம் என்று அறிவித்துள்ள போதிலும் அவர்கள் அதைச் செய்யவில்லை.” என்று தெரிவித்தார்.

இது குறித்து திஷா சாலியன் தந்தை சதீஷ் கூறுகையில், ”நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மற்றும் அவரது முன்னாள் மேலாளர் திஷா சாலியன் ஆகியோரின் மரணங்களுக்கு இடையே நிச்சயமாக ஒரு தொடர்பு உள்ளது. இது தற்கொலை கிடையாது. இது 100% உறுதி. இதில் நிச்சயமாகச் செல்வாக்கு மிக்க சிலர் சம்பந்தப்பட்ட சதி ஒன்று உள்ளது.
சிபிஐ சம்பந்தப்பட்ட அனைவரிடமும் தீவிர விசாரணை நடத்தும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்,” என்று கூறிய அவர், திஷா சாலியனின் மரணம் குறித்த உண்மை வெளிவரும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
இந்த மரணத்தில் உத்தவ் தாக்கரே மகன் ஆதித்ய தாக்கரேயிக்குத் தொடர்பு இருப்பதாக திஷா சாலியன் குடும்பத்தினர் நம்புகின்றனர். எனவே இவ்வழக்கு சி.பி.ஐ வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.