தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தற்போதைய அரசியல் சூழல் என்பது வெறும் கட்சிகளுக்கு இடையிலான போட்டி மட்டுமல்ல, அது மூன்று கொள்கை ரீதியான ‘மாடல்களுக்கு’ இடையிலான தேர்தல் என நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்திருக்கிறார்.
பழனியில் திமுக கூட்டணியில் இருக்கும் சிபிஐ வேட்பாளர் என்.பாண்டியனுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, “நான் நடிகனாக இங்கு வரவில்லை. இந்த சமூகத்தால் உருவாக்கப்பட்ட ஒரு கலைஞன். இந்த சமூகத்துக்கு ஏதாவது சிக்கல் என்றால் கலைஞன் வரவேண்டும். அப்படித்தான் நான் இங்கு வந்திருக்கிறேன். சாமி திருடும் கும்பலைப் பார்த்திருக்கிறோம்.

ஆனால், இப்போது முருகனையே திருடும் கும்பல் வந்திருக்கிறது. முருகன் அவர்களின் முப்பாட்டன் என கதை சொல்கிறார்கள். முருகன் தமிழ் கடவுள்… இதைத் தெரிந்துகொள்வதற்கு கொஞ்சம் வரலாறு, ஆர்கியாலஜி தெரியவேண்டும். அதெல்லாம் அவர்களுக்கு தெரியாது. நாம்தான் கவனமாக இருக்க வேண்டும். இந்த தேர்தல் திராவிட மாடல், அடிமை மாடல், சினிமா மாடல் என மூன்று மாடல்களுக்கு மத்தியில் நடக்கும் தேர்தல்.
அரசியல்வாதியாக இல்லாமல், ஒரு வாக்காளராக நாம் இந்த தேர்தலை விவாதிப்போம். திராவிட மாடல் கல்வி கொடுத்தது. இந்தியாவுக்கே முன்மாதிரி மாநிலமாக திகழ்கிறது. மொழி மானத்தை காத்தது, இன மானத்தைக் காக்க போராடுகிறது. அடிமை மாடல் என்பது தன் தன்மானத்தை கொண்டுபோய் டெல்லியில் அடகு வைப்பது. உங்களுக்கு ஒரு கதை சொல்கிறேன். கிணற்றுக்குள் வாழும் தவளைகளுக்கு இடையே அதிகாரப் போட்டி வந்தது. அதில் ஒரு தவளை. ‘நான்தான் தலைவன் ஆகுவேன்’ என எடப்பாடியோ, விஜயோ நீங்க யாரை வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளுங்கள்.

அப்போது மூத்த தவளை, ‘உனக்கு இந்த கிணறுபற்றி என்னத் தெரியும்… இந்த கிணறைக் காப்பாற்ற என்ன செய்வாய்? கிணற்றின் முன்னேற்றத்துக்கு என்ன திட்டம் வைத்திருக்கிறாய்? கொஞ்சம் காத்திரு… கிணற்றில் சுற்றி வந்து எல்லாவற்றையும் கற்றுக்கொள். உடனேவெல்லாம் தலைவனாக ஆகிவிட முடியாது’ என்றது. இதற்கு கோபித்துக்கொண்டு கிணற்றைவிட்டு வெளியேறியது தவளை. வெளியே பாம்பு பா.ஜ.க எனும் பாம்பு இருந்தது. அந்த பாம்பிடம் ‘என்னை சாப்பிடாதே… கிணத்துல நிறைய சாப்பாடு இருக்கு… அவங்களையெல்லாம் சாப்பிட்டுட்டு என்னை தலைவனாக்கிடு’ என கிணற்றுக்குள் வரும் பாதையைக் காண்பித்து அழைத்து வந்தது.
பா.ஜ.க எனும் பாம்பை கிணற்றுக்குள் இறக்கி, ‘இவன் எதிர்த்து பேசுறான் இவன் மேல அமலாக்கத்துறை கேஸ் போடு, அவன் வளர்ந்து வரான் அவன் மேல சிபிஐ வழக்கு போடு’ என ஒவ்வொருவரையும் சாப்பிடச் சொன்னது. கடைசியில் அந்தப் பாம்பு அந்த தவளையையும் சாப்பிட்டு விட்டது. இதுதான் அடிமை மாடல். வெட்கம், சூடு, சுரணை என எதுவும் இந்த அடிமை மாடலில் இல்லை.
மத்திய அரசு கொண்டுவரத் துடிக்கும் தொகுதி மறுவரையறை சட்டம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. மக்கள் தொகையை மட்டும் அடிப்படையாக வைத்து எம்.பி தொகுதிகளைப் பிரித்தால், கடந்த 50 ஆண்டுகளாகத் தென்னிந்தியா பெற்றுவந்த அரசியல் முக்கியத்துவம் பறிபோகும்.

பெரும்பான்மை கடந்து, சமத்துவம், சகோதரத்துவம் என எதையும் அவர்கள் பேசமாட்டார்கள். அதிகாரத்துக்கு பெரும்பான்மைதான் வேண்டும். மற்றதெல்லாம் தேவையில்லாதது.
தமிழ்நாட்டுக்கு துரோகம் நடக்கிறது. அதைக் கண்டுக்கொள்ளாமல் வாய்மூடி இருக்கும் அடிமை மாடல் தேவையா? திருப்பரங்குன்றத்தில் நடப்பது குறித்து நான் பேசவேண்டிய அவசியம் இல்லை. உங்களுக்கே நன்றாகத் தெரியும். மதுரையை இன்னொரு மணிப்பூராக மாற்றப் பார்க்கிறார்கள். அங்கிருந்து நேராக பழனிக்கு வருவார்கள். ஒருவேளை இந்தியாவில் கிறிஸ்தவர்கள் அதிகம் இருந்தால் இயேசு கிறிஸ்து பிறந்த பெத்லகேம் இங்குதான் இருக்கிறது. இயேசு இங்குதான் பிறந்தார் என்பார்கள். அப்போதுதான் அவர்களுக்கு அதிகாரம் கிடைக்கும். இவர்களுக்கு இந்து மீது அன்பெல்லாம் கிடையாது.
சினிமா மாடல் என ஒன்று இருக்கிறது. ஒரே சினிமாவில் நீங்கள் டாக்ராகலாம், இன்ஜினியர் ஆகலாம், முதல்வர் கூட ஆகலாம். ஆனால், அரசியலில் அப்படியே முதல்வராக முடியுமா? என் அளவுக்காவது அரசியல் பேசியிருக்கிறாயா? இதுவரை தமிழ்நாட்டின் தன்மானத்துக்கோ, மக்களுக்கோ பிரச்னை என வந்தபோது வாய் திறந்தாயா? அப்படியிருந்தும் மக்கள் உங்கள் மீது வைத்திருக்கும் அன்பு என்பது உங்களிடம் இருக்கும் திறமைக்குதானே தவிர அரசியலுக்கானது அல்ல. அதை பயன்படுத்துகிறீர்கள். கட்டவுட் வைத்து, டிக்கெட் வாங்கி, வீட்டைப்பற்றி யோசிக்காமல் உங்களுக்காக உழைத்து ரசிகர்கள் காண்பித்த அன்பை உங்கள் அரசியலுக்கான பயன்படுத்துகிறீர்கள்.
நடிகனை மிகவும் பிடித்தால் மூன்று விரலை வைத்து விசில் அடிக்கலாம். அதற்காக நாட்டையெல்லாம் கொடுக்க முடியாது.

சீமான் கூட 10 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியல் பேசிக்கொண்டு, மக்களுக்காக நின்றிருக்கிறாரே… அந்தளவு கூட நீங்கள் வெளியே வரவில்லையே.
மக்களாகிய நாம் அரசியல் செய்ய வேண்டும். வென்றவர்கள் மக்களுக்காக வேலை செய்ய வேண்டும். ஆனால் இந்தியாவில் நேர்மாறாக நடந்துகொண்டிருக்கிறது. அதை மாற்ற வேண்டும். தொடர்ந்து அரசியல் செய்வோம். இறுதியாக, இந்தத் தேர்தல் என்பது தி.மு.க, அ.தி.மு.க அல்லது விஜய் போன்ற தனிநபர்களுக்கான போட்டி அல்ல. இது ஒற்றுமைக்கும் பிரிவினைக்கும் இடையிலான தேர்தல். எப்போதும் தமிழ்நாடு இந்தியாவுக்கு ஒரு மாடல் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபிப்போம்.” என்றார்.