ஆனந்த விகடன் சினிமா விருதுகள் 2025 விழாவில் `டிராகன்’, `டியூட்’ திரைப்படங்களுக்காக, சிறந்த நடிகர் விருதைப் பெற்றார் பிரதீப் ரங்கநாதன். இந்த விருதை வழங்கியவர் நடிகர் ரவி மோகன்.
விருதைப் பெற்றுக்கொண்ட பிறகு, பிரதீப் ரங்கநாதன் பேசினார்…
“பொதுவா எனக்கு ஸ்டேஜ்னா பயம் இருக்காது. ஆனா, இப்போ நெர்வஸா இருக்கு. எவ்வளவோ வயசானாலும் அம்மாகிட்ட போனா நாம சின்னப் பையன்தான், அந்த மாதிரிதான் இதுவும். சினிமாவுக்கு வந்து 7 வருஷம் ஆகுது. ஆனாலும் ரவி சாரைப் பார்த்தா எனக்குக் கொஞ்சம் நடுங்கும். அவர் போன் கால் பார்த்தாலே எனக்கு ஹார்ட் பீட் எகிறும். இந்த விருது அவர் மூலமா கிடைக்கறதுக்கு விகடனுக்கு ரொம்ப நன்றி.

செட்ல என்கிட்ட ஏதாவது நல்ல பழக்கம் இருந்தா அதுக்கு ரவி சார்தான் காரணம். கெட்ட பழக்கம் இருந்தா அதுக்கு நான் மட்டும்தான் காரணம்.
நான் நடிக்க வரும்போதே `எனக்கு விருதெல்லாம் கிடைக்காது’ன்னு நினைச்சேன். ஏன்னா, நான் நடிக்கிறது மாஸ் கமர்ஷியல் மசாலா படம். `லவ் டுடே’ பண்ணும்போது பெஸ்ட் டெபியூட் (Best Debut) கிடைக்கும்னு பார்த்தேன்.
அப்போகூட விகடன் விருது கிடைக்கலை. சரி அவ்வளவுதான்னு நினைச்சப்போ, இப்போ ஒரே வருஷத்துல ரெண்டு படத்துக்காக ‘பெஸ்ட் ஆக்டர்’ விருது கிடைச்சிருக்கு.
வாழ்க்கையில நாம போடுற கணக்கு வொர்க்அவுட் ஆகலைன்னாலும், வாழ்க்கை நமக்குன்னு ஒரு கணக்கு வெச்சிருக்கும். அதனால எதையும் மிஸ் பண்ணிட்டோம்னு கவலைப்படாம இருங்க, கண்டிப்பா ஒருநாள் கிடைக்கும்.
`கோமாளி’ டைரக்ட் பண்ணும்போதே ரவி சார் என்கிட்ட சொல்லுவாரு, ‘நீ நல்லா நடிக்கிறே’ன்னு. எனக்குள்ள ஒரு நடிகர் இருக்கான்னு அவருக்குத் தெரிஞ்சிருக்கு. அன்னைக்கு அவர் பர்மிஷன் குடுத்து என்கரேஜ் பண்ணதுனாலதான் நான் இங்க இருக்கேன். அவர் ரொம்ப நல்ல மனுஷன்.”
