நதியை தூய்மையாக்கிய பிட்டுவுக்கு நெதர்லாந்தில் வேலை.. ஐரோப்பாவில் செட்டில் ஆக அழைப்பு | Dutch founder Boyan Slat has offered 20 year old Bittu a job and a move to the Netherlands

Spread the love

International

oi-Velmurugan P

ஜெனிவா: மத்திய பிரதேசத்தில் தனி ஒருவராக நதியைத் தூய்மைப்படுத்திய 20 வயதான பிட்டுவிற்கு வேலை வாய்ப்பையும் நெதர்லாந்திற்கு குடிபெயரும் வாய்ப்பையும் வழங்கி உள்ளார் நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த ‘தி ஓஷன் கிளீனப்’ அமைப்பின் சிஇஓ போயன் ஸ்லாட். இதனை பலரும் வரவேற்றுள்ளனர். இந்த செய்தி தான் இன்று இணையத்தில் வட இந்தியாவில் ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்தியாவில் நீர்நிலை மனிதர்கள், காடுகளின் மனிதர்கள் அதிசயமாக ஆங்காங்கே முளைக்கிறார்கள். அவர்களால் காடுகள் உருவாகின்றன. நீர்நிலைகள் மறுசீரமைக்கப்படுகின்றன. அப்படியான ஒரு சம்பவத்தை தான் பிட்டு தபாஹி என்று அழைக்கப்படும் சுரேந்திர சிங் என்ற 20 வயது இளைஞன் செய்துள்ளான். அவனை பற்றி தான் வட இந்தியா முழுக்க பேச்சாக இருக்கிறது. தனி ஒரு மனிதன் நினைத்தால் மிகப்பெரிய மாற்றத்தை சமுதாயத்தில் ஏற்படுத்த முடியும் என்பதை நிரூபித்து காட்டியுள்ளார்.

Dutch founder Boyan Slat has offered 20 year old Bittu a job and a move to the Netherlands

மத்திய பிரதேசத்தின் ராஜ்கர் மாவட்டத்தில் பயோரா நகரில் அஜ்னார் நதி ஓடுகிறது. இந்த நதி பல ஆண்டுகளாக பாலித்தீன் பைகள், பூஜை பொருட்களின் கழிவுகள் மற்றும் பாசிகளால் நிரம்பி, ஒரு கழிவுநீர்க் கால்வாய் போல முற்றிலும் அசுத்தமடைந்து சாக்கடையாக ஓடிக்கொண்டிருந்தது.

இதனை தனது சொந்த முயற்சியால் பல மாதங்களாகத் தனியாளாகப் போராடிச் சுத்தம் செய்து வந்தார் பிட்டு. குறிப்பாக சொல்வது என்றால், எந்தவித அரசு உதவியோ அல்லது பெரிய இயந்திரங்களோ இன்றி, கடந்த ஜனவரி முதல் இவர் ஒற்றை ஆளாக நதியில் இறங்கி குப்பைகளை அள்ளி தூய்மை செய்தார். சொந்தப் பணத்திலேயே கையுறைகள் மற்றும் தூய்மைப் பொருட்களை வாங்கி, பல டன் கணக்கிலான கழிவுகளை அகற்றியிருந்தார். இறுதியாக பிட்டு, அஜ்னார் நதி தூய்மைப் பணிக்கு முன்பும் பின்பும் எப்படி மாறியது என்பதைப் படம்பிடித்து வீடியோ வெளியிட்டார். இந்த வீடியோ வைரலான நிலையில், தொழிலதிபர் ஆனந்த் மகேந்திரா உள்பட பலரும் பாராட்டினார்கள். இதையடுத்து சர்வதேச அளவில் பிட்டுவின் செயல் கவனம் பெற்றது

இந்தச் சாதனை இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து, நெதர்லாந்தைச் சேர்ந்த ‘தி ஓஷன் கிளீனப்’ அமைப்பின் நிறுவனரும் சி.இ.ஓ-வுமான போயன் ஸ்லாட்டின் கவனத்தை ஈர்த்தது. அந்த வீடியோவைப் பார்த்த போயன் ஸ்லாட், சற்றும்யோசிக்காமல், தனது சமூக வலைதளப்பக்கத்தில், “எங்களிடம் வேலைக்கு வாருங்கள்!” என்று நேரடியாகவே அழைப்பு விடுத்தார். பெருங்கடல்கள் மற்றும் நதிகளில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் உலகின் முன்னணி அமைப்பு தான் ‘தி ஓஷன் கிளீனப்’. இந்த நிறுவனத்தின் அழைப்பு மூலம் பிட்டுவிற்கு நெதர்லாந்து செல்லும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

இணையத்தில் விவாதம்

இந்த அறிவிப்பு வெளியானதும், நெட்டிசன்கள் இரண்டு விதமாக விவாதித்து வருகிறார்கள். நெதர்லாந்து வேலைக்கு ஆதரவான நெட்டிசன் ஒருவர் கூறுகையில், “இந்தியாவில் திறமைக்கும் உழைப்பிற்கும் சரியான மரியாதையும் அங்கீகாரமும் கிடைப்பது கிடையாது. கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு வெளிநாடு சென்று தன் குடும்பத்தின் எதிர்காலத்தை உயர்த்திக் கொள்ள வேண்டும். ‘நாட்டிற்காகத் தியாகம் செய்யுங்கள்’ என்ற வழக்கமான மூளைச்சலவைகளில் விழாமல் தனது வாழ்க்கையை வளமாக்கிக் கொள்ள வேண்டும்” என்று வாழ்த்தினார். இந்த கருத்தை பலரும் ஆதரித்துள்ளனர்.

நெதர்லாந்து வேலை அறிவிப்பை சிலர் எதிர்க்கவும் செய்கிறார்கள்.ஒரு நெட்டிசன் கூறுகையில், “இது மேலைநாட்டினரின் காலனித்துவ மனநிலை. இந்தியர்களை அழுக்கானவர்களாகக் காட்டவே அவர் முயல்கிறார். நெதர்லாந்துகாரர்கள் தங்கள் வேலையைப் பார்த்தால் போதும், வெளியாட்களிடமிருந்து நமக்கு மறைமுக போதனை தேவையில்லை” என்று சிலர் காட்டமாகக் கேள்வி எழுப்பினார். தனது ஊரில் ஓடும் சாக்கடை நதியை சுத்தம் செய்து அழகாக்க வேண்டும் என்ற 20 வயது பிட்டுவின் கனவால், இன்று ஐரோப்பாவின் புகழ்பெற்ற நாடானா நெதர்லாந்தில் வேலை ஆஃபர் கிடைத்துள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *