காவல் அதிகாரியாகத் தனது எல்லையிலேயே நின்று தேவையான பங்களிப்பை நல்கியிருக்கிறார் நயன்தாரா. அம்மனாகத் துடிப்போடும் ஆங்காரத்தோடும் சூலத்தை ஓங்கும் இடங்களில் கச்சிதமாக உருவம் மாறியிருக்கிறார்.
வில்லியாக ரெஜினா கஸாண்ட்ரா, ஓரிரு இடங்களில் மட்டுமே வில்லத்தனத்தைத் தட்டியெழுப்புகிறார். இவருடைய கதாபாத்திரமும் புரியாத புதிராக நகர்வதால் நம்மிடமிருந்து தூரமாகவே நிற்கிறது. மற்றொரு வில்லனாக துனியா விஜய் 80-ஸ் வில்லத்தன டோனை இப்போது கடன் வாங்கித் தந்திருக்கிறார்.

இவர்களைத் தாண்டி, துணை பாத்திரங்களில் ஊர்வசி மட்டுமே கவர்கிறார். யோகி பாபு, வெங்கட் ராகவன், மைனா நந்தினி, லொள்ளு சபா சாமிநாதன் ஆகியோர் காலாவதியான காமெடி ஊசியைக் குத்திவிட்டுப் போகிறார்கள்.
கேமியோ ரோலில் அம்மன்கள் வருகிறார்கள், அவ்வளவே! கதாபாத்திரங்கள் எவையும் வலுவாக எழுதப்படாததால், அனைத்துமே எவ்வித தாக்கத்தையும் உண்டாக்காமல் போயிருக்கிறது.