நல்ல வேலைவாய்ப்பு சீக்கிரம் அமைய 11 எளிய பரிகாரங்கள்|11 Simple Remedies to Secure a Good Job Quickly

Spread the love

எளிய பரிகாரங்கள்…

1. தினமும் வீட்டில் காலையில் விளக்கேற்றி வழிபடுவது நல்லது. அப்படி விளக்கேற்றும்போது நரசிம்மரை மனதில் நினைத்துத் துதித்தபடியே விளக்கேற்றி வழிபடுவது விசேஷம். நரசிம்மர் உடனடியாக வந்து காக்கும் தெய்வம். அந்த தெய்வத்தை வணங்கி ஒரு நாளைத் தொடங்கும்போது, நம்மைச் சுற்றியிருக்கும் தீய சக்திகள் எல்லாம் விலகிச் சென்றுவிடும். நாள்தோறும் இப்படி வழிபட இயலாது என்பவர்கள், குறைந்தபட்சம் சனிக்கிழமைகளில் இந்த வழிபாட்டை மேற்கொள்ள வேண்டியது அவசியம்.

2. சனிபகவானே நம் உழைப்பை எடுத்துக்கொள்பவர். அதனால் அவருக்கு எள் எண்ணெய் தீபம் ஊற்றி வணங்கி வருவது சிறப்பு. ஏழரைச் சனி, அஷ்டமச் சனி என சனியின் பாதிப்பு உள்ளவர்கள் மட்டுமல்ல… வேலை வாய்ப்பு தேடுவோர், பணியிடத்தில் பிரச்னை உள்ள அனைவருக்குமே இந்த வழிபாடு நல்ல பலன் கொடுக்கும்.

3. சுதர்ஸனர் அஷ்டகம் சொல்வதோ அல்லது சுதர்ஸன சதகம் சொல்வதோ மிக மிக விசேஷம். இவை இரண்டுமே நமக்குக் கவசம் போன்றவை. குறிப்பாகப் பணியிடத்தில் காரணமே இல்லாமல் சிலர் உங்களைக் குறைசொல்வது, பிரச்னைகளை உங்கள் பக்கம் திருப்புவது என்று இருப்பார்கள். இப்படிக் காரணங்களற்ற வெறுப்பிலிருந்து விடுபட, இந்த ஸ்தோத்திரங்களைச் சொல்வதும், கேட்பதும் நல்லது.

4. கந்த சஷ்டிக் கவசம். அதன் பெயரிலேயே கவசம் என்று உள்ளது. இந்தக் கவசத்தை நாம் பாராயணம் செய்வது நம்மை எப்போதும் காக்கும்.

5. `மந்திரங்கள் எல்லாம் சொல்லத் தெரியாது. செய்ய எளிமையான பரிகாரங்களைச் சொல்லுங்கள்’ என்று சிலர் கேட்பார்கள். அப்படிப்பட்டவர்கள் சனிக்கிழமைகளில் காலை 6 முதல் 7 மணிக்குள் சனி ஹோரையில் (இது குளிகன் நேரமும்கூட) ஆஞ்சநேயரை வழிபடுவது சிறப்பு. வீட்டிலேயே வழிபடலாம். அல்லது ஆலயம் சென்றும் வழிபடலாம். இதன் மூலம் வெகு சீக்கிரம் வேலை அமையும்.

6. ஆலயத்துக்கு நல்லெண்ணெய் தானம் கொடுப்பது அல்லது தீபம் ஏற்றி வழிபடுவது சிறப்பான பலன்களைக் கொடுக்கும்.

7. ஏழை மாணவ-மாணவிகளுக்குப் புத்தகம், பேனா வாங்கித் தருவது போன்ற சின்னச்சின்ன உதவிகள் செய்யலாம். தங்கள் பிள்ளையின் மேற்படிப்பு சிறப்பாக அமைய ஆசைப்படும் பண வசதியுள்ள பெற்றோர், ஏழை மாணவர்களைத் தத்தெடுத்து படிக்கவைக்கலாம்.

8. வீட்டில் விளக்கேற்றிவைத்து அனுதினமும் உங்கள் குல தெய்வத்தை வணங்கி வாருங்கள். இயன்றால் மாதம் ஒருமுறையேனும் குலதெய்வக் கோயிலுக்கு நேரில் சென்று வழிபட்டு வாருங்கள். விரைவில் நல்ல மாற்றம் உண்டாகும்.

9. கடலூர் மாவட்டத்தில் உள்ள திருவஹீந்திர புரம் எனும் திருத்தலத்துக்குச் சென்று, அங்கே ஞானானந்த மயமாக கோயில் கொண்டிருக்கும் பரிமுகக்கடவுளாம் அருள்மிகு ஹயக்ரீவரை வணங்கி வழிபடுவதும் நல்ல பலன் தரும். கற்ற கல்வி காலம் முழுக்கக் கைகொடுக்கும்.

10. சங்கடஹர சதுர்த்தி தினங்களில் விநாயகருக்கு மோதகமும், சுண்டலும் நைவேத்தியம் செய்து, அருகம்புல் சமர்ப்பித்து வழிபடுவதால், விநாயகரின் திருவருளோடு, புதன் மற்றும் கேது கிரகங்களின் நல்லருளையும் பெறலாம்; அதன் மூலம் உத்தியோக பாவத்தில் உள்ள தடங்கல்கள் நீங்கும்.

11. தொடர்ந்து 11 திங்கள் கிழமைகளில் சிவபெருமானுக்கு வில்வம் சாற்றி வழிபட்டு வாருங்கள்; விரைவில் நல்ல சம்பளத்துடன் வேலை வாய்ப்பு உண்டாகும். சனிக்கிழமை அன்று வரும் மகா பிரதோஷ தினத்தன்று, அருகிலுள்ள சிவாலயத்துக்கு அபிஷேக திரவியங்கள் வாங்கிக்கொடுக்கலாம்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *