நவராத்திரி: நெல்லை டவுனில் சங்கமித்த 37 அம்மன் சப்பரங்கள்… தசரா நிறைவு நாளில் களைகட்டிய விழா! | 37 Amman Chapparams Gather in Nellai Town on Navaratri’s Final Day

Spread the love

ஒன்பது நாள் அலங்காரம்… பத்தாம் நாள் மகிஷாசுர வதம்! நவராத்திரியின் நிறைவு நாளான விஜயதசமியில், மின்னொளியில் ஜொலிக்கும் 37 அம்மன் சப்பரங்கள் நெல்லையப்பர் கோயில் தேரடியில் சங்கமித்த காட்சி, திருநெல்வேலி டவுனையே திருவிழாக் கோலமாக மாற்றியது!

உலக புகழ்பெற்ற தசரா விழாக்களில் குலசேகரப்பட்டினம் தசராவுக்கு உலக அளவில் தனி அடையாளம் உண்டு. அதேபோல, திருநெல்வேலி டவுன் தசராவும் தனது பாரம்பர்யத்தாலும் தனித்துவமான வழிபாட்டு முறைகளாலும் பக்தர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. இந்த ஆண்டு அக்டோபர் 20-ம் தேதி நடைபெற்ற தசரா விழாவிலும், அம்மன் சப்பரங்களின் அணிவகுப்பு பக்தர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது.

ஒன்பது நாள் அலங்காரம்… பத்தாம் நாள் அம்மன் தரிசனம்!

நவராத்திரியின் ஒன்பது நாள்களும் திருநெல்வேலி டவுன் பகுதியிலுள்ள கோயில்களில் அம்மனுக்குச் சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு, வழிபாடுகள் நடைபெறும். ஒவ்வொரு நாளும் வெவ்வேறு அலங்காரங்களில் அம்மனைத் தரிசிக்கும் பக்தர்களுக்கு, பத்தாம் நாளான விஜயதசமி மிக முக்கியமான திருவிழா நாளாக அமைகிறது.

மகிஷாசுரன் என்ற அரக்கனை அம்மன் வதம் செய்து தீமையை அழித்து நன்மையை நிலைநாட்டியதை நினைவுகூரும் வகையில், உக்கிரமான கோலத்தில் அம்மன்கள் காட்சியளிக்கின்றனர். ஒன்பது நாள்களாகத் தொடர்ந்த வழிபாடுகள், பத்தாம் நாள் திருவிழாவில் உச்சத்தை அடைகின்றன.

நெல்லையப்பர் கோயில் தேரடியில் சங்கமிக்கும் 37 சப்பரங்கள்!

நெல்லை டவுன் தசராவின் தனிச்சிறப்பே, பல்வேறு கோயில்களிலிருந்து அலங்கரிக்கப்பட்டு வரும் 37 அம்மன் சப்பரங்கள் ஒரே இடத்தில் சங்கமிப்பதுதான்! விஜயதசமி நாளில் ஒவ்வொரு கோயிலிலிருந்தும் புறப்படும் சப்பரங்கள், நெல்லையப்பர் கோயில் தேரடியில் ஒன்றுகூடுகின்றன.

அங்கு அனைத்து அம்மன்களுக்கும் தீபாராதனை காட்டப்படும் காட்சி, பக்தர்களுக்கு அரிய தரிசனமாக அமைகிறது. அதன் பிறகு ஒவ்வொரு சப்பரமும் தங்களது கோயில்களை நோக்கிப் புறப்படுகின்றன. பல ஆண்டுகளாகத் தொடர்ந்து வரும் இந்த மரபு, நெல்லை டவுன் தசராவுக்கு ஒரு தனித்துவமான அடையாளமாகத் திகழ்கிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *