தேவாரப் பாடல்பெற்ற தலங்களில் வழிபாடு செய்வதே தனித்த ஆனந்தத்தைத் தரும் செயல். அந்த வகையில் காவிரித் தென்கரைத் தலங்களில் ஒன்றான 85 வது பாடல் பெற்ற தலமான தேவூரைத் தரிசனம் செய்வது சிறப்பு.
நாகை மாவட்டம் கீவளூர் வட்டம் தேவூரில் அமைந்துள்ளது இந்தத் தலம். நாகப்பட்டினம் – திருவாரூர் மார்க்கத்தில் கீவளூரில் இருந்து சுமார் 5 கி.மீ. தொலைவில் உள்ளது இந்தக் கோயில். இங்கு ஸ்ரீதேன்மொழி அம்பாள் சமேத ஸ்ரீதேவபுரீஸ்வரராக அருள்பாலிக்கிறார் ஈசன்.
தேவர்கள் இந்தத் தலத்தில் தங்கி, தவமிருந்து சிவனாரை வழிபட்டனர் என்பதால் தேவரூர் என்றும் சுவாமிக்கு தேவபுரீஸ்வரர் என்றும் திருநாமம் ஏற்பட்டது என்பார்கள். தேவரூரே பிற்காலத்தில் தேவூர் ஆனது. கதலீவனம், விராடபுரம், அரசங்காடு, தேவனூர் எனப் பல பெயர்கள் இந்தத் தலத்துக்கு உண்டு.

அம்பாளின் திருநாமம் – ஸ்ரீமதுரபாஷினி. தூய தமிழில், ஸ்ரீதேன்மொழி அம்பாள். இந்த அம்பாளை வேண்டிக்கொண்டால் இனிமையாகப் பேசும் திறனும் நல்ல குரல் வளமும் வாய்க்கும் என்கிறார்கள். இங்கேயுள்ள ஸ்ரீவலம்புரி விநாயகர், அழகிய மூர்த்தமாகக் காட்சி தருகிறார்.
காவிரியின் தென்கரைத் திருத்தலங்களில், 85-வது தலம் இது! அறுபத்துமூவர், திருநந்தி தேவர், ஸ்ரீவிஷ்ணு துர்கை, ஸ்ரீசுப்ரமணியர், ஸ்ரீசனீஸ்வரர், ஸ்ரீசூரியனார், ஸ்ரீஆஞ்சநேயர், ஸ்ரீஆத்மநாதர் ஆகியோர் தனிச் சந்நிதிகளில் அருள்பாலிக்கின்றனர்.
இந்தத் தலத்தில், ஸ்வாமி மற்றும் அம்பாளுக்கு நடுவே ஸ்ரீசுப்ரமணியரின் திருச்சந்நிதி அமைந்து இருப்பதால், இந்தத் தலம் சோமாஸ்கந்த வடிவ திருத்தலம் எனப் போற்றப்படுகிறது.
வியாழபகவான் இந்தத் தலத்தில் சிவனாரை நினைத்து நெடுங்காலம் தவம் இருந்து வழிபட்டார். இதில் மகிழ்ந்த சிவபெருமான் அவருக்குத் திருக்காட்சி தந்ததுடன், தேவகுருவாகவும் பதவி உயர்வு தந்து ஆசீர்வதித்து அருளினார். தவிர, இந்தத் தலத்தில் சிவனாரே அனுக்கிரக தட்சிணாமூர்த்தியாகவும் அழகுத் திருக்கோலத்தில் காட்சி தந்து அருள்வதால், குரு பரிகார புண்ணியத் தலம் எனப் போற்றுகின்றனர் பக்தர்கள்.
ஒருவரின் ஜாதகத்தில் குரு பகவான் மறைந்திருந்தால் அல்லது குரு பலம் இழந்திருந்தால் அல்லது குருவின் பார்வை படாமல் இருந்தால், இங்கே இந்தத் தலத்துக்கு வந்து, ஸ்ரீகுரு தட்சிணாமூர்த்திக்கு பரிகாரங்கள் செய்து, மனதாரப் பிரார்த்தித்து, ஸ்வாமி, அம்பாள், ஸ்ரீவிநாயகர், ஸ்ரீசுப்ரமணியர் ஆகியோரை 16 முறை வலம் வந்து வணங்கினால், குரு யோகம் கிடைக்கப் பெறலாம்; காரியத் தடைகள் விலகி, நற்பலன்கள் கிடைக்கும் என்பது ஐதிகம்.

இந்திரன், குபேரன், சூரிய பகவான், ஸ்ரீஅனுமன் மற்றும் ஸ்ரீகௌதமர் முதலானோர் தவமிருந்து வணங்கி வரம் பெற்ற திருத்தலம் இது. திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், மாணிக்கவாசகர் ஆகியோர் பாடிப் பரவிய தலம்; சேக்கிழார், அருணகிரிநாதர் ஆகியோர் வணங்கிய திருத்தலம் எனப் பல பெருமைகள் கொண்டது தேவூர் தலம்.
பொதுவாக கோயில்களில் சிவதுர்க்கை அல்லது விஷ்ணு துர்க்கை இருப்பாள். ஆனால் இத்தலத்தில் உள்ள துர்க்கை ஒரு கையில் சங்கும், மறுகையில் மான், மழுவும் வைத்து சிவ-விஷ்ணு துர்கையாகவே அருள்பாலிக்கிறாள்.
இத்தலத்தின் தல விருட்சம் கல்வாழை மரம். தேவர்கள் இறைவனை வழிபட்ட போது, தேவலோகத்தில் இருந்த இந்த வாழையும் இறைவனை வழிபட்டது என்பார்கள். அதனால் அது தலவிருட்சமாக இங்கேயே மூலவர் அருகிலேயே அமைந்ததுள்ளது என்கிறார்கள் பக்தர்கள். திருமணபாக்கியம், புத்திர பாக்கியம் வேண்டுபவர்கள் திங்கள் கிழமைகளில் இந்த வாழைக்கு பூஜை செய்கிறார்கள்.
மகாபாரதத்தில் பாண்டவர்களுக்குத் துணைபுரிந்த விராடன் தன் மகன் உத்திரனோடு இங்கு தங்கி இறைவனை வழிபாடு செய்துள்ளான். உலகில் 12 ஆண்டுகள் பஞ்சம் ஏற்பட்ட காலத்தில் கவுதம முனிவர் இத்தலத்தில் தங்கி, லிங்கம் அமைத்து வழிபாடு செய்து, பொன்னும் பொருளும் பெற்று மக்களின் பசிப்பிணி போக்கியதாக வரலாறு கூறுகிறது.

மகத நாட்டு மன்னன் குலவர்த்தனன் பரிவேள்வியில் வெற்றிபெற, இங்குள்ள இறைவனை வழிபட்டு வேள்வியை நிறைவேற்றினான்.
முக்கியமாக ராவணன் குபேரனிடம் செல்வங்களைக் கவர்ந்து சென்றுவிட, குபேரன் கலங்கிப்போய் இத்தல ஈசனிடம் முறையிட்டான். வெள்ளிக்கிழமை சுக்கிர ஹோரையில் செந்தாமரைப் பூக்களால் அர்ச்சித்து வழிபாடு செய்தான். பூஜைக்கு மகிழ்ந்த ஈசன், குபேரனுக்கே அந்த செல்வ கலசங்கள் கிடைக்க செய்ததாகத் தலபுராணம் கூறுகிறது. எனவே இத்தல இறைவனை வழிபட்டால் செல்வச் செழிப்பு நிச்சயம் கிடைக்கும். இழந்த பொருள்கள் மீண்டும் வந்துசேரும்.
ஸ்ரீதேவபுரீஸ்வரருக்கு செந்தாமரை மலர்கள் சார்த்தி, ஸ்ரீகுரு தட்சிணாமூர்த்திக்கு கொண்டைக் கடலை மாலை அணிவித்து, ஸ்ரீதேன்மொழி அம்பிகைக்கு செவ்வரளி மாலை சார்த்தி வணங்கி வழிபடுங்கள். வாழ்வில் இறையருளும் குருவருளும் கிடைக்கப் பெறுவீர்கள்.