"நானும் முதல்வரும் ஒரே கல்லூரியில் படித்தவர்கள்தாம்; ஆனால்" – உதயநிதி பேச்சைக் கேட்டு சிரித்த விஜய்

Spread the love

தமிழ்நாடு சட்டமன்ற சபாநாயகராகப் போட்டியின்றி இன்று ஜே.சி.டி.பிரபாகர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.

புதிய சபாநாயகருக்கு எம்எல்ஏக்கள் அனைவரும் சட்டசபையில் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் சட்டசபையில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், “சபாநாயகராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட உங்களுக்கும் (ஜே.சி.டி.பிரபாகர்) துணை சபாநாயகராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ரவி சங்கர் அவர்களுக்கும் வாழ்த்துகள்.

உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்

பேரவை தலைவர் அவர்களே நீங்கள் சிரித்த முகத்திற்குச் சொந்தக்காரர் என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன். அன்போடு பழகக்கூடியவர் என்றும் நான் கேள்விப்பட்டிருக்கிறேன்.

நீங்கள் நடுநிலையாகச் செயல்படுவீர்கள் என்பதுதான் எங்கள் அத்தனை பேரின் எதிர்பார்ப்பும். முதல்வர் நேற்று நாகரிகமாக அரசியல் தலைவர்கள் எல்லோரையும் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

அதே நாகரிகத்தோடு பேரவையிலும் நடப்பார் என்பது எங்களின் எண்ணமும், எதிர்பார்ப்பும். திமுக என்றைக்குமே ஒரு ஆக்க சக்தியாகத்தான் இருக்கும். நாங்கள் ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாகச் செயல்படுவோம்.

பிற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாகச் செயல்பட்டு இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்த சட்டப்பேரவை இந்தத் தமிழ்நாடு சட்டப்பேரவை. அப்படிப்பட்ட இந்தப் பேரவையில் ஆக்கப்பூர்வமான ஜனநாயக மாண்புகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து நடுநிலைமையோடு பேரவை தலைவர் செயல்பட வேண்டும்.

இந்த அரசு அனைவருக்குமான அரசாக இருக்க வேண்டும். இன்றைக்கு முதல்வராக இருக்கக்கூடியவரும், நானும் ஒரே கல்லூரியில் படித்த முன்னாள் மாணவர்கள். ஒரே கல்லூரியில் படித்திருந்தாலும் அரசாங்கத்தை நடத்துவதில் திமுகதான் சீனியர் பேஜ். (இதற்கு முதல்வர் விஜய் புன்னகை செய்தார்)

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

எங்களுடைய அறிவையும் அனுபவத்தையும் பகிர்ந்துகொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம். அதை ஏற்றுக்கொள்ள நீங்கள் தயாராக இருங்கள். ஏனென்றால் நமக்கு தமிழ்நாட்டின் வளர்ச்சிதான் முக்கியம்.

அவைத்தலைவரைக் கோபப்படுத்தும் வகையில் நாங்கள் நடந்துகொள்ள மாட்டோம். எங்களின் பணி மக்களின் எண்ணங்களைப் பிரதிபலிக்கும்.

மேற்கு வங்கத்தில் கூட வந்தே மாதரம் பாடவில்லை. உங்களின் பதிவுயேற்பு விழாவில் நடந்த சம்பவம் பேரவையில் நடப்பதற்கு நீங்கள் அனுமதிக்கக் கூடாது.

தமிழகத்தில் எந்த நிகழ்வாக இருந்தாலும் தமிழ்த்தாய் வாழ்த்து முதன்மைப்படுத்த வேண்டும். தமிழ்நாடு வளர்ச்சிக்காக ஒன்றாகப் பயணிப்போம். பெண் எம்எல்ஏக்கள் அதிகம் தேர்வானது மகிழ்ச்சி” என்று பேசியிருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *