கடலூரில் விசிக சார்பில் தமிழ்த்தேசிய எழுச்சி மாநாடு நேற்று நடைபெற்றது. இதில் விசிக தலைவர் திருமாவளவன் கலந்துகொண்டு பேசினார்.
அப்போது, “ஆரம்பக் காலத்தில் (90-களில்) விசிகவின் கருத்துக்கள் மீது போதிய ஊடக வெளிச்சம் விழவில்லை. பத்திரிகைகளிலோ, தொலைக்காட்சிகளிலோ கட்சியின் செய்திகள் வராது; எப்போதாவது ஒரு சிறு செய்தி அல்லது சில நொடிகள் காட்சி ஒளிபரப்பானால் கூட அதைப் பெருமகிழ்ச்சியோடு சேகரித்து வைத்த காலம் அது.
ஆனால் இன்றைக்கு, சிறுத்தைகளைப் பற்றிப் பேசாத ஊடக விவாதங்களே இல்லை என்கிற நிலை உருவாகியுள்ளது. “திருமாவளவன் ஏன் அமைதியாக இருக்கிறார்?”, “ஏன் இப்படிப் பேசினார்?”, “ஏன் இந்த முடிவை எடுத்தார்?” எனத் தொடர்ந்து பல நாள்களுக்கு விவாதங்கள் நடக்கின்றன.

இந்த அங்கீகாரமும் முக்கியத்துவமும் தானாக வந்துவிடவில்லை. இது தொய்வில்லாது, இடைவிடாது நாங்கள் நடத்திய தொடர் போராட்டத்தின் விளைச்சல் ஆகும்.
அரசியல் பகையாலும், சாதி வெறியாலும் அற்பர்கள் சிலர் என் மீது தொடர்ந்து அவதூறுகளைப் பொழிந்து வருகிறார்கள். நான் தமிழனே இல்லை என்றும், என் பெயர் திருமாவளவன் இல்லை என்றும் பொய் பிரசாரம் செய்கிறார்கள்.