TNRERA கலைப்பு: 6 மாதங்களுக்கு இடைக்கால நிர்வாகம்! – வீடு வாங்குபவர்களுக்கு பாதிப்பு இருக்குமா? | TNRERA was dismissed and new temporary team formed

Spread the love

தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையமான `TNRERA” அமைப்பை தமிழக அரசு உடனடியாக கலைத்து, அதன் அதிகாரங்களை மேற்கொள்ள இடைக்காலமாக மூன்று பேர் கொண்ட புதிய நிர்வாகக் குழுவை நியமித்து உத்தரவிட்டுள்ளது. இந்த ஏற்பாடு 6 மாதங்களுக்கு அல்லது புதிய ஆணையம் அமைக்கப்படும் வரை அமலில் இருக்கும்.

இதுதொடர்பாக வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அரசாணையை வெளியிட்டுள்ளது.

ஏன் TNRERA கலைக்கப்பட்டது?

தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவர் மற்றும் அனைத்து உறுப்பினர்களும் பதவி விலகியதால், ஆணையம் சட்டப்படி செயல்பட முடியாத நிலை ஏற்பட்டதாக அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதவி விலகியவர்கள்:

* தலைவர்: சிவ் தாஸ் மீனா, ஐஏஎஸ் (ஓய்வு)

* உறுப்பினர்: டாக்டர் எல். சுப்ரமணியன்

* உறுப்பினர்: சுகுமார் சிட்டிபாபு

* உறுப்பினர்: எம். கிருஷ்ணமூர்த்தி

* உறுப்பினர்: டாக்டர் டி. ஜெகந்நாதன்

இந்த சூழ்நிலையில், ரியல் எஸ்டேட் (ஒழுங்குமுறை மற்றும் மேம்பாடு) சட்டம், 2016-ன் பிரிவு 82-இன் கீழ் வழங்கப்பட்ட அதிகாரத்தை பயன்படுத்தி, TNRERA-வை தற்காலிகமாக கலைக்க அரசு முடிவு செய்துள்ளது.

புதிய 3 பேர் கொண்ட நிர்வாகக் குழு

புதிய நிரந்தர ஆணையம் அமைக்கப்படும் வரை, TNRERA-வின் அனைத்து அதிகாரங்களையும் பொறுப்புகளையும் மேற்கொள்ள மூன்று பேர் கொண்ட இடைக்கால நிர்வாகக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

அதில்,

* தலைவர்: கே. பனிந்திர ரெட்டி, ஐஏஎஸ் (ஓய்வு)

* உறுப்பினர்: ஏ. நசீர் அகமது, மாவட்ட நீதிபதி (ஓய்வு)

* உறுப்பினர்: ரீட்டா ஹரிஷ் தக்கர், ஐஏஎஸ் (ஓய்வு)

ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இந்த குழு 6 மாதங்களுக்கு அல்லது புதிய TNRERA ஆணையம் அமைக்கப்படும் வரை, எது முன்னதாக நிகழ்கிறதோ அதுவரை செயல்படும் என அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வீடு வாங்குபவர்கள் மற்றும் கட்டுமான நிறுவனங்களுக்கு பாதிப்பு இருக்குமா?

TNRERA கலைக்கப்பட்டாலும், அதன் சேவைகள் எந்தவிதத்திலும் பாதிக்கப்படாது என அரசு விளக்கம் அளித்துள்ளது. ரியல் எஸ்டேட் திட்டங்களின் பதிவு, வீடு வாங்குபவர்களின் புகார்கள், விசாரணைகள், தீர்ப்புகள் உள்ளிட்ட அனைத்து பணிகளும் புதிய இடைக்கால நிர்வாகக் குழுவின் மூலம் தொடர்ந்து மேற்கொள்ளப்படும்.

இதன் மூலம், ரியல் எஸ்டேட் துறையில் ஒழுங்குமுறை நடவடிக்கைகள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகளில் இடையூறு ஏற்படாமல் பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *