"நான் திவ்யா பேசுறேன்.!" – ஒரு வாட்ஸ்அப் மெசேஜ்; ரூ.21 கோடி இழந்த ஆடிட்டர் – முழுப் பின்னணி!

Spread the love

மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரைச் சேர்ந்த 70 வயது மூத்த ஆடிட்டர் (CA) அசோக் விஜயவர்கியா. இவர் மத்தியப் பிரதேச வர்த்தக மற்றும் தொழில்துறை சபையின் தலைமை தேர்தல் அதிகாரியாகப் பணியாற்றி வருகிறார். கடந்த 2025 டிசம்பர் முதல் 2026 ஜூலை வரையிலான காலகட்டத்தில் கிரிப்டோகரன்சி (USDT) வர்த்தக வாய்ப்பு என்று நம்பி, அவர் மொத்தம் ரூ.21,05,92,000 இழந்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த குவாலியர் மாநில சைபர் பிரிவின் முதற்கட்ட விசாரணையில், பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

மோசடி
மோசடி

பிரபல பாலிவுட் படமான ‘ட்ரீம் கேர்ள்’ படத்தில் வரும் ‘பூஜா’ கதாபாத்திரப் பாணியில், கடந்த 2025 டிசம்பரில் அசோக் விஜயவர்கியாவின் வாட்ஸ்அப் எண்ணுக்கு இந்திய மொபைல் எண் ஒன்றிலிருந்து மெசேஜ் வந்துள்ளது. அதில், “வணக்கம், நான் திவ்யா பேசுகிறேன், நான் ஒரு முதலீட்டு ஆலோசகர்” என்று அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளார்.

‘USDT Tether’ என்ற கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்தால் குறுகிய காலத்தில் பெரும் லாபம் ஈட்டலாம் என்று அவர் ஆசை வார்த்தை கூறியுள்ளார். தொடக்கத்தில் இந்திய எண்ணில் பேசியவர்கள், பின்னர் அமெரிக்க நாட்டின் குறியீட்டைக் (+1) கொண்ட வாட்ஸ்அப் எண்ணிற்கு உரையாடலை மாற்றியுள்ளனர். அது இணையம் மூலம் உருவாக்கப்பட்ட போலி (Virtual) எண்ணாக இருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.

அவர்கள் அனுப்பிய போலி இணையதள லிங்க் மூலம் கணக்கைத் தொடங்கிய ஆடிட்டரை, ஆரம்பத்தில் சிறிய தொகையை முதலீடு செய்ய வைத்துள்ளனர். டிசம்பர் 25 அன்று தலா ரூ.10,000 வீதம் 4 முறையும், பின்னர் நண்பரின் கணக்கு மூலம் ரூ.1 லட்சமும் முதலீடு செய்யப்பட்டுள்ளது. அதற்கு லாபம் வருவதாக இணையதளத்தில் காட்டியுள்ளனர்.

அடிப்படையில் ஆடிட்டருக்கு சந்தேகம் வராமல் இருக்க, ஜனவரி 7-ம் தேதி அவரது கணக்கிற்கே நேரடியாக எஊ.1.88 லட்சத்தை லாபத் தொகையாக மோசடி கும்பல் அனுப்பியுள்ளது. வங்கிக் கணக்கில் நிஜமாகவே பணம் வந்ததால், அந்தத் தளம் உண்மையானது என்று முழுமையாக நம்பிய ஆடிட்டர், தனது சொந்தப் பணம் மட்டுமின்றி, தனது நிதி ஆலோசனையை நம்பிய 35-க்கும் மேற்பட்ட தொழில் கூட்டாளிகளின் பணத்தையும் சேர்த்து கோடிக்கணக்கில் முதலீடு செய்யத் தொடங்கினார்.

மோசடி
மோசடி

ஆடிட்டரின் போலி வர்த்தகக் கணக்கில் லாபத் தொகை ரூ.33.25 கோடியாக உயர்ந்தபோது, அவர் பணத்தை எடுக்க (Withdraw) முயன்றார். ஆனால் கணக்கு முடக்கப்பட்டது. அந்தப் பணத்தை எடுக்க வேண்டுமானால் வருமான வரியாக ரூ.10.84 கோடி செலுத்த வேண்டும் என்று மோசடி கும்பல் கூறியுள்ளது.

அவர் தயங்கியபோது, தாங்கள் தங்களது பங்கிற்கு ரூ.5.34 கோடி செலுத்துவதாகவும், மீதியை அவரைப் போடுமாறும் நம்பவைத்துள்ளனர். அதன்பின்னரும், “ரிஸ்க் மார்ஜின்” என்ற பெயரில் மேலும் ரூ.1 கோடி கேட்டுள்ளனர். அப்போதுதான் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ஆடிட்டர், உடனடியாக தேசிய சைபர் குற்றப் புகார்ப் பிரிவு மற்றும் 1930 என்ற உதவி எண்ணில் புகார் அளித்தார்.

அதன் அடிப்படையில் நடந்த விசாரணையில், இந்த மெகா மோசடிப் பணம் நாடு முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான வங்கிக் கணக்குகளுக்குப் பிரித்து அனுப்பப்பட்டு, ஒரு பிரம்மாண்ட வலைப்பின்னல் மூலம் சுருட்டப்பட்டுள்ளது.

மோசடி
மோசடி

கொள்ளையடிக்கப்பட்ட பணம் காவல்துறையிடம் சிக்காமல் இருக்க மிகவும் சிக்கலான நான்கு அடுக்கு வங்கிக் கணக்குகள் மூலம் மாற்றப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இந்த மோசடியில் நாடு முழுவதும் வரை சுமார் 20,049 டிஜிட்டல் பரிவர்த்தனைகள் நடத்தப்பட்டுள்ளன.

விசாரணை அமைப்புகள் பணத்தை முடக்குவதற்குள், அதனை ஏடிஎம் மூலமாக எடுப்பது, ஷாப்பிங் வவுச்சர்கள், ஆன்லைன் பேமெண்ட்கள் மற்றும் பிற கிரிப்டோகரன்சிகளாக மாற்றிப் பயன்படுத்தியுள்ளனர். இதுவரை சைபர் பிரிவு போலீசாரால் வெறும் ரூ.2 கோடியை மட்டுமே முடக்க முடிந்துள்ளது. மீதிப் பணம் அனைத்தும் மாயமாகியுள்ளது.

இந்த சைபர் குற்றப் பின்னணி கர்நாடகா, தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, ஹரியானா, உத்தரப்பிரதேசம், குஜராத், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், ஜார்கண்ட், மேற்கு வங்காளம் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களின் வங்கிக் கணக்குகளைத் தொட்டுச் சென்றுள்ளது. இதில் பயன்படுத்தப்பட்ட கணக்குகள் அனைத்தும் கமிஷனுக்காக தங்களது கணக்குகளை வாடகைக்கு விடும் ‘பணப் பொதிகள்’ அல்லது போலி நிறுவனங்களுடையதாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இந்த வழக்கு தொடர்பாக காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *